Published:Updated:

இனி எல்லாம் சுகமே - 11

இனி எல்லாம் சுகமே - 11
பிரீமியம் ஸ்டோரி
News
இனி எல்லாம் சுகமே - 11

செரிமானம் அறிவோம்!

இனி எல்லாம் சுகமே - 11

ன்றின் அருமை அது இல்லாதபோதுதான் தெரியும் என்பார்கள். ஏப்பம்விட முடியாத நிலையை எண்ணிப்பாருங்கள். இரைப்பை அதிக அழுத்தம், வீக்கத்துக்கு ஆளாகாமல் தடுக்க இயற்கை அளித்த பாதுகாப்புதான் ஏப்பம். எதுக்களிப்புப் பிரச்னை உள்ளவர்களுக்குச் செய்யும் அறுவைசிகிச்சைக்குப் பின்னர் சிலரால் ஏப்பம்விட முடியாது. உணவுக் குழாய் கீழ் முடிச்சு அல்லது மேல் முடிச்சு தளராமல் இருந்தாலும் ஏப்பம்விட முடியாமல் தவிக்க நேரிடும். விட முடியாவிட்டாலும் பிரச்னை, அதிகமாக விட நேர்ந்தாலும் பிரச்னை எனக் கொஞ்சம் சிக்கலான விஷயம் ஏப்பம். உணவை அதிகமாகச் சாப்பிடுவது மட்டுமே ஏப்பத்துக்குக் காரணம் அல்ல. ஏப்பம் வருவதை மூன்று வகையாகப் பிரிக்க முடியும்.

இயல்பான ஏப்பம்

சாப்பிடும்போதும் நீர் அருந்தும்போதும் இரைப்பைக்குள் நாம் காற்றையும் சேர்த்தே அனுப்பிவைக்கிறோம். இந்தக் காற்று இரைப்பையைத் தாண்டி சிறுகுடல், பெருங்குடலுக்குச் சென்றால், வயிறு உப்புதல், வயிற்று வலி, வாயு பிரிதல் என அவஸ்தைகளை ஏற்படுத்தும். அதைத் தடுக்க இயற்கை ஏற்படுத்திய வசதிதான் ஏப்பம். உணவுக் குழாயின் கீழ் சதை முடிச்சு  (Lower esophageal sphincter) தற்காலிகமாகத் தளர்ந்து, இரைப்பைக் காற்றை மேலெழும்பச் செய்யும். அந்தக் காற்று உணவுக் குழாயை விரியச் செய்து, உணவுக் குழாயின் மேலே இருக்கும் முடிச்சைத் தளரச்செய்து ஏப்பமாக வெளிப்படும். தினசரி 25 - 30 முறை சிறு ஏப்பம் விடுவது இயல்பானதே.

இனி எல்லாம் சுகமே - 11

அதிகப்படியான ஏப்பம்

எதுக்களித்தல் பிரச்னை உள்ளவர்களுக்குக் உணவுக்குழாயின் கீழ்த் தசை முடிச்சின் தளர்வு இயல்பைவிட அதிகமாக இருக்கும். இதனால், இரைப்பைக்குள் காற்று செல்வதும் அதிகம். இவர்களுக்கு நெஞ்சு எரிச்சலுடன் அடிக்கடி ஏப்பமும் வரலாம். உணவு, உடல் எடைக் கட்டுப்பாடு, மது, புகை தவிர்த்தல் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களோடு, தேவைப்பட்டால் அதிக அமிலச் சுரப்பைக் குறைக்கும் மருந்துகளையும் தக்க அளவில் எடுத்தால், இந்த வகை ஏப்பத்திலிருந்து நிவாரணம் பெறலாம். அல்சர் இல்லாமலேயே வலிதரும் டிஸ்பெப்சியா பாதிப்பு உள்ளவர்களின் முக்கியமான முறையீடே வயிறு உப்பி அதிக ஏப்பம் வருகிறது என்பதுதான். இவர்கள் மட்டும் அல்ல... வயிற்றில் அல்சர், கணையப் பாதிப்பு, பித்தப்பை கற்கள் மற்றும் நுரையீரல், இதய பாதிப்பால் கீழ் மார்பு, மேல் வயிற்றில் ஒருவகை அவஸ்தையை உணர்பவர்கள் எல்லோருமே தம்மை அறியாமல் அந்த வலியுணர்வைக் குறைக்கலாம் என்ற அனுமானத்தில் அதிகக் காற்றை இரைப்பைக்கு அனுப்புகிறார்கள். அதனால், இந்த வகை ஏப்பமும் அதிகம் வரும். அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதே இதற்கான தீர்வு.

உணவுக் குழாய் ஏப்பம் (Supra-gastric belching)

இது முற்றிலும் வித்தியாசமான ஏப்பம். மேலே சொன்ன இருவகை ஏப்பமும் அனிச்சை (Reflex) வகையைச் சார்ந்தவை... தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், இந்த மூன்றாவது வகையை அவர்களுக்குத் தெரியாமல் அவர்களே  உருவாக்குவார்கள். தங்களையும் அறியாமல் நகம் கடிப்பது போன்ற பிரச்னை இது. இதிலும் இரண்டு வகை இருக்கின்றன.

இவர்கள், காற்றை உணவுக் குழாய்க்குள் உறிஞ்சி உடனே அதை சத்தமான ஏப்பமாக வெளிப்படுத்துவார்கள். ஒரு சிலர் காற்றை உறிஞ்சுவதற்கு  உதரவிதானத்தை (Diaphragm) சட்டென இறுக்குவார்கள். இதனால், மார்புக்கூடு, அதனுள் இருக்கும் உணவுக் குழாயில் குறைந்த அழுத்தம் ஏற்படும். இவை தாழ்வு அழுத்த காற்று மண்டலமாக மாற, வெளிக்காற்று சட்டென வேகமாக உள்ளுக்கு உறிஞ்சப்பட்டு பின்னர் ஏப்பமாக வெளிவரும். இன்னும் சிலர் அடி நாக்கையும், தொண்டைச் சதைகளையும் சட்டென இறுக்கிவைத்துக்கொள்வார்கள். இதனாலும், உணவுக்குழாய்க்குள் காற்று சென்று பின்னர் ஏப்பமாகத் திரும்பும்.

ஏன் சிலர் இப்படிக் காற்றை உறிஞ்சி உறிஞ்சி உடனுக்குடன் ஏப்பமாக வெளிப்படுத்தி சிரமப்படுகிறார்கள் என்பதற்கு இதுவரை சரியான காரணம் மருத்துவத்துறையால் அறியப்படவில்லை. ஆனாலும் இது மனஅழுத்தம், கவலை, அலைக்கழியும் மனநிலை போன்ற ஆழ்மனக் கோளாறுகளின் புறவெளிப்பாடாக இருக்கலாம்.

மருத்துவத்தில் ‘காற்றை உண்ணுதல்’ (Aerophagia) எனும் சொல் உண்டு. இது காற்றை விழுங்கி, அதை உணவைப்போலவே இரைப்பை, குடல்களுக்கு அனுப்பிவைக்கும் நிலை. ஆனால், உணவுக்குழாய் ஏப்பம் வேறு. இதில் உறிஞ்சப்பட்ட காற்று இரைப்பைக்குக்கூட போகாமல் திரும்பிவிடும். இந்த வகை ஏப்பம் உள்ளவர்களுக்கு வேறு நோய் அறிகுறிகள் (பசிக்குறைவு, உடல் மெலிதல்) போன்றவை இருக்காது. பேசும்போதும், மனம் வேறொன்றில் ஈர்க்கும்போதும் ஏப்பம் இருக்காது. இவர்களுக்கு அதிக சோதனை தேவைப்படாது. நோயின் வரலாறு, சாதாரண உடல் பரிசோதனை மூலமே இந்த வகை ஏப்பம் என அறிய முடியும். மிகச்சிலருக்குத் தேவைப்பட்டால் உணவுக் குழாய் அழுத்தமானி பரிசோதனை மற்றும் மின்மறுப்புப் பரிசோதனை போன்றவற்றின் மூலம் என்ன பிரச்னை என அறியலாம். இதற்கான தீர்வு, பாதிக்கப்பட்டவருக்கு இதை முழுமையாக விளக்கி, இது ஆபத்து இல்லாத வெறும் தொந்தரவே என ஆறுதல் தருவதே. பின்னர் பேச்சுப் பயிற்சியாளர் மூலம் காற்று உறிஞ்சுவதைத் தடுக்கும் வழிகள் கற்று ஏப்ப விடுதலை பெறலாம்.

- தொடரும்

படம்: தே.தீட்ஷித்

செயற்கை ஏப்பம் ஆபத்து!

இனி எல்லாம் சுகமே - 11



என்னிடம் சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவர், ``டாக்டர், ஆரம்பத்தில் ஏப்பம் விட்டால் வயிற்றுக்கு இதம் தந்தது. கோலா - சோடா குடித்து அதைப் பழக்கப்படுத்தினேன். இப்போது இதம் போய் வேதனையே அதிகமாகிவிட்டது. ஆனாலும், என்னால் ஏப்பத்தை நிறுத்த முடியவில்லை’’ என்றார். இதுபோல பலர் சொல்லியிருக்கிறார்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெறும் நேரத்துக்குள்ளாகவே பலமுறை சத்தம் எழுப்பிக் கவனம் ஈர்க்கும் நோயாளிகள் இவர்கள். சோடா குடித்து ஏப்பம் வரவைப்பது தவறான பழக்கம்.