
சர்க்கரையை வெல்லலாம்

சிறுநீரகத்தின் செயல்பாடு பற்றி அனைவருக்குமே தெரியும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, உடல் முழுவதும் தூய ரத்தத்தை அனுப்பும் பணியைச் செய்கின்றன சிறுநீரகங்கள். இதற்கும், ஸ்வீட் எஸ்கேப் தொடருக்கும் என்ன தொடர்பு என்று நினைக்கலாம். இன்றைக்கு சிறுநீரகப் பிரச்னை என்று மருத்துவமனைக்குச் செல்பவர்களில் 50 சதவிகிதம் பேர் சர்க்கரை நோய் தொடர்பான சிக்கல் காரணமாக செல்பவர்கள்தான்.
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட `நெஃப்ரான்கள்’ என்ற சுத்திகரிப்பு மையங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் குழாய் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும். இந்த நெஃப்ரான்கள்தான் ஒரு துப்புரவுத் தொழிலாளியாக இருந்து, தன்னிடம் வரும் தூய்மையற்ற ரத்தத்தை சுத்தம்செய்து, உடல் முழுவதுக்கும் அனுப்பிவைக்கிறது. நெஃப்ரானில் உள்ள குளோமெருலி (Glomeruli) என்ற பகுதிதான் வடிகட்டியாக இருந்து இந்தப் பணியைச் செய்கிறது. இதில் மிகமிக நுண்ணிய குளோமெருலர் ஃபில்ட்ரேஷன் பேரியர் (Glomerular filtration barrier (GFB)) என்ற ரத்த வடிகட்டி இருக்கிறது. இதுதான் ரத்தத்தை சுத்திகரித்து, ரத்தத்தில் உள்ள நீர், கழிவுகளை வெளியேற்றுகிறது.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, இந்த குளோமெருலர் வடிகட்டி சவ்வு பாதிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் முற்றிலும் பாதித்து அழியும்போது, அல்புமின் என்கிற புரதம், சிறுநீர் வழியாக வெளியேற ஆரம்பிக்கிறது. சர்க்கரை நோய் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்
படுவதை `டயாபடீக் நெஃப்ரோபதி’ என்கிறோம்.
டயாபடீக் நெஃப்ரோபதி பிரச்னை இருந்தால், அவர்களுக்கு சிறுநீரில் அல்புமின் என்கிற புரதம் வெளியேறும், உயர் ரத்த அழுத்தம் இருக்கும், கணுக்கால், பாதங்களில் வீக்கம், பிடிப்பு ஏற்படும், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படும், ரத்தத்தில் யூரியா (பியுஎன்) மற்றும் சீரம் கிரியாட்டினின் அளவு அதிகமாக இருக்கும். வாந்தி, குமட்டல் உணர்வு இருக்கும்.
இந்தப் பிரச்னை வராமல் தவிர்க்க, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்க வேண்டியது அவசியம். ஒருவேளை டயாபடீக் நெஃப்ரோபதி வந்துவிட்டால், அவர்களுக்கு சிறுநீரகத்தின் செயல்திறன் இழப்பு வேகத்தைக் குறைத்து, இதனால் ஏற்படக்கூடிய மற்ற பிரச்னைகளைத் தவிர்ப்பதுதான் வழி.
டயாபடீக் நெஃப்ரோபதி உள்ளவர்களுக்கு, புரதம் வெளியேறுவதைக் குறைக்க மாத்திரைகள் உள்ளன. இதைத் தொடர்ந்து எடுத்துவந்தால், சிறுநீரில் புரதம் வெளியேறுவது குறையும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்க வேண்டும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்க வேண்டும். ரத்தத்தில் கொழுப்பு அளவைக் கட்டுக்குள்வைக்க வேண்டும். புகை மற்றும் மதுப்பழக்கம் இருந்தால், அதைக் கைவிட வேண்டும்.

டயாபடீக் நெஃப்ரோபதி நோயாளிகளுக்கான உணவுப் பழக்கம்
ஆரோக்கியமான சரிவிகித உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். அது, சிறுநீரக பாதிப்பை தாமதப்படுத்தும், சர்க்கரை, உயர் ரத்த அளவைக் கட்டுக்குள்வைக்கும் உணவாக இருக்க வேண்டும். எனவே, உணவில் புரதம் மற்றும் பொட்டாசியம் அளவு குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறையைக் காட்டிலும் டயாபடீக் நெஃப்ரோபதி உள்ளவர்களுக்கான உணவு இன்னும் சற்று சிக்கலானது. நோயாளி எந்த நிலை பாதிப்பில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து மருத்துவர் அறிவுத்துவார்.

எப்படிக் கண்டறிவது?
எளிய ரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனை மூலம் இதைக் கண்டறியலாம். சிறுநீரில் அதிக அளவில் அல்புமின் வெளியேறுவது சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்துவிட்டதைக் காட்டும்.
இயல்புநிலை அல்புமின்: 24 மணி நேரத்தில் 30 மி.கி-க்கு கீழ் என்ற அளவில் இருக்க வேண்டும்.
மைக்ரோ அல்புமின்: 30–299 மி.கி/24 மணி என்ற அளவில் இருக்க வேண்டும்.
300-க்கு மேல் சென்றால், சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்று அர்த்தம்.
தவிர, குளோமெருலர் ஃபில்ட்ரேஷன் பேரியரின் செயல்திறனை அறியும் பரிசோதனையும் உள்ளது. இது எந்த அளவுக்கு சிறுநீரகம் செயல்படுகிறது என்பதை மதிப்பிடும். ஜி.எஃப்.டி-யின் இயல்புநிலை செயல்திறன் என்பது 90 முதல் 100 மி.லி/நிமிடத்துக்கு/1.73மீ2. இந்த ஜி.எஃப்.ஆர்-ஐ ரத்தத்தில் கிரியாட்டினின் அளவைக்கொண்டு கணக்கிடுவர். இதைப் பொறுத்தே நாட்பட்ட சிறுநீரக நோயின் தீவிரத்தை மருத்துவர் அளவிடுவார்.
ஸ்வீட்டர்
சர்க்கரை நோய் இருந்தால் ஆண்டுக்கு ஒரு முறையாவது சிறுநீரில் வெளியேறும் மைக்ரோஅல்புமின் அளவை பரிசோதனை செய்ய வேண்டும்.
டயாபடீஸ் டவுட்
“நான், கடந்த 10 ஆண்டுகளாக டயாபடீஸ் நோயாளி. சமீபத்தில் சிறுநீர் பரிசோதனை செய்ததில், சிறிய அளவில் புரதம் வெளியேறுவது தெரிந்தது. என் கிரியாட்டினின் அளவு 1.5. எனக்கு டயாபடீக் நெஃப்ரோபதி வந்துவிட்டதா? என் தற்போதைய நிலை மோசமாகாமல் தடுக்க, நான் செய்ய வேண்டியது என்ன?”
“நீங்கள் குறிப்பிட்டுள்ள தகவலை வைத்துப் பார்க்கும்போது, தங்களுக்கு டயாபடீக் நெஃப்ரோபதி லேசாக வந்திருக்கிறது எனத் தெரிகிறது. முதலில் நீங்கள் உங்கள் கண்களைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அடுத்தது, ரத்தசோகை பரிசோதனை செய்ய வேண்டும். ரத்த அணு உற்பத்திக்குத் தேவையான எரித்திரோபயோடின் என்ற பொருளை சிறுநீரகம் சுரக்கிறது. நெஃப்ரோபதி ஏற்படும்போது, இதில் பாதிப்பு ஏற்படலாம். அதேபோல, கால்சியம் டி3 அளவு பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும். சில எலெக்ட்ரோலைட்களில் இயல்புக்கு மீறிய நிலை ஏற்படலாம். எனவே, சோடியம், பொட்டாசியம் அளவையும் பரிசோதனைசெய்ய வேண்டும்.
பிரச்னையைக் கட்டுக்குள்வைக்க, உணவில் உப்பு, புரதச்சத்தைக் குறைக்க வேண்டும். புரதம் வெளியேறுவதைத் தடுக்கும் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்தஅழுத்தம், கொழுப்பு அளவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். எலும்புகளின் உறுதித்தன்மைக்கு கால்சியம் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கவனிக்காமல் விடும்போது, காலில் வீக்கம், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதனால், டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை வரலாம். இத்தனை சிக்கல்களையும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைத்திருப்பதன் மூலம் தடுக்க முடியும்.”
- தொடரும்