Published:Updated:

மனமே நீ மாறிவிடு - 12

மனமே நீ மாறிவிடு - 12
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நீ மாறிவிடு - 12

மனமே நீ மாறிவிடு - 12

மனமே நீ மாறிவிடு - 12

ச்சத்தின் பிள்ளைதான் பதற்றம். இன்றைய நவீன வாழ்க்கையில் பதற்றம்கொள்ளத்தக்க நிகழ்வுகளும் காரணிகளும் நம் கண் முன்னே ஏராளமாக இருக்கின்றன. `இப்படி நடந்தால் என்னவாகும், அப்படி நடந்தால் என்னவாகும்?’ என, மனம் ஏதேனும் ஒரு விபரீதத்தைக் கற்பனை செய்துகொண்டே இருக்கிறது.

‘படிக்கிறான்... ஆனால், இந்த மார்க்குக்கு ஸீட் கிடைக்காதே... அந்த கோர்ஸ் கிடைக்கலைன்னா என்ன செய்றது?’, ‘ஒருவேளை கம்பெனியில் லேஆஃப் செய்தால், அடுத்த மாத ஈ.எம்.ஐ-யை எப்படிக் கட்ட?’, ‘வர்ற மருமகள் மதிக்கலைன்னா?’, ‘வயசான காலத்துல பெரிய வியாதி வந்தா செலவுக்கு என்ன பண்றது?’... என நீளும் இந்தக் கவலைகளில் நியாயங்கள் இல்லாமல் இல்லை. அனைத்துப் பதற்றங்களுக்கும் காரணங்கள் நிச்சயம் உள்ளன. மறுப்பதற்கு இல்லை. ஆனால், பதற்றப்படுவதால் என்ன ஆகும்? உடலின் எதிர்ப்பு சக்தி குறையும்; நோய் வரும்; குணம் கெடும்; உறவுகள் சிரமப்படுத்தும்; வாழ்க்கை மேலும் பதற்றமாகும்.

`அதுக்காக இதை எல்லாம் யோசிக்காம இருக்க முடியுமா?’ என்கிறீர்களா? யோசனை வரும்தான். ஆனால், அந்த எண்ணத்தை எப்படிக் கையாள்வது எனத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

ஒரு காலத்தில் நம் முன்னோர்களுக்கு எழுந்துகொள்ள அலாரம் கிடையாது. வாசல் கூட்டுவது முதல், பின்கட்டில் அம்மி அரைப்பது வரை அனைத்துமே வானிலையைப் பொறுத்துத்தான். விறகு அடுப்பைப் பற்றவைக்கவே நிறையப் பிரயத்தனங்கள் வேண்டும். வீட்டில் இவ்வளவு பொருட்களும் வசதிகளும் அப்போது கிடையாது.

மனமே நீ மாறிவிடு - 12

வெளியே சென்றால் பஸ் வரக் காத்திருக்க வேண்டும். விவசாயத்தில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது. வருமானமும் அப்படித்தான். உடலுக்கு வந்தாலும் எந்தப் பெரிய வசதியும் கிடையாது. காப்பீடு, மருத்துவ வசதி, உடனே பறந்து வரும் ஆம்புலன்ஸ் எதுவும் கிடையாது. இந்தக் காலத்தின் பதற்றமே அப்போது கிடையாது.

இன்று, எல்லாவற்றுக்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. அனைத்தும் கையடக்கமாக, ஆளுக்கொன்றாக, குறைவான விலையில் புதிது புதிதாகக் கிடைக்கின்றன. அவற்றைக்கொண்டு பல விஷயங்களைத் திட்டமிடலாம்; கட்டுப்படுத்தலாம்; விரைவாகச் செய்யலாம். போனில் கூப்பிட்டால் கார் வரும். வங்கிக் கையிருப்பு தினம் எஸ்.எம்.எஸ்ஸில் தெரிகிறது. பணப் பரிமாற்றம் விரல் நுனியில் நடக்கிறது. சமைக்கப் பிடிக்காவிட்டால், ஒரு மணி நேரத்துக்குள் மணக்க மணக்க உணவு வீட்டுக்கே வருகிறது. எல்லா இடத்துக்கும் விரைவாக, சொகுசாகச் செல்ல முடிகிறது. யாருமே தேவை இல்லாமல் தனியாக, ஒரு வசதியான வாழ்க்கை வாழ முடிகிறது.

இங்கு பிரச்னையே அதுதான். தனியாக எல்லாவற்றையும் செய்ய முடிவதால், நாம் பிறருடன் இசைந்து

மனமே நீ மாறிவிடு - 12

செல்லும் திறனை இழந்துவருகிறோம். இந்த வாழ்க்கைமுறைக்குத் தொடர்ந்து சம்பாதிக்க, வேகமாக ஓட ஆரம்பிக்கிறோம். இதைவிட ஆபத்தானது, `எல்லாவற்றையும் நம் கட்டுக்குள் கொண்டுவர முடியும்’ என்று வாழ்க்கையை மிகத் தவறாகப் புரிந்துகொள்வது. இந்த எண்ணம்தான் வாழ்க்கையின் அனைத்துப் பதற்றங்களுக்கும் காரணம். நம் கட்டுப்பாட்டில் அனைத்தும் உள்ளதை நினைக்கும்போது அகந்தை வளர்கிறது. அது, அடிபடும்போது பதற்றமும் கோபமும் வருகின்றன. நாம் திட்டமிட்ட வாழ்க்கையை மட்டும் வாழ நினைக்கிறோம். எதிர்பாராது ஏதாவது வந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம். வந்தால் உடைந்துபோகிறோம். இதுதான் பிரச்னை. வசதி படைத்தவர்கள், ஒருமுறை ஏதேனும் ஒரு குப்பத்தில் நுழைந்து, ஒரு சுற்று வந்தால் புத்தருக்கு வந்ததுபோல ஞானம் வரும். குறிப்பாக, ஒரு சாவு வீட்டுக்குப் போய்வர வேண்டும் என்பது விண்ணப்பம். அடைசலாகக்கிடக்கும் அவர்கள் வீடுகளிலும் வாழ்க்கையிலும் மக்களின் நெருக்கம் தெரியும். சாலையை மறித்து மேடை போட்டு எல்லா மக்களும் வேலையை, வருமானத்தைத் துறந்து, துக்கம் கொண்டாடி, பணம் வசூலித்துக் கோலாகல வழியனுப்புதல் நடக்கும். மரணத்தை வாழ்வில் ஓர் அங்கமாக எண்ணி ஏற்றுக்கொள்வதால், அங்கு நடனமும் பட்டாசும் சாத்தியமாகின்றன.

நாம், உறவினர் இறந்தால்கூட லீவு எடுக்கத் தயங்குகிறோம் பின், போனிலேயே துக்கம்  விசாரிக்கிறோம். அடுத்த 10-வது நிமிடம் வேறு கதை பேசுகிறோம். இங்கு பகிர்தல் இல்லை. கல்யாணத்துக்குச் சென்றாலும் வரிசையில் நின்று பரிசு கொடுத்து, போட்டோ எடுத்து முடித்து, பந்திக்கு முந்தி, காரை வரச்சொல்லி வீட்டுக்குப் பறக்கிறோம்.

தனிமையான வாழ்க்கையின் அடையாளம் பதற்றம். யாரையாவது எதையாவது பற்றிக்கொண்டால், பதற்றம் குறையும். அது, உறவுகளாக இருக்கலாம், இறைவனாக இருக்கலாம். இயற்கையாக இருக்கலாம். எதிலாவது பற்றுக்கொண்டு நம்பிக்கைவைத்தால், வலி நீங்கி, வழி பிறக்கும்.

- மாறுவோம்!