Published:Updated:

அலர்ஜியை அறிவோம் - 11

அலர்ஜியை அறிவோம் - 11
பிரீமியம் ஸ்டோரி
News
அலர்ஜியை அறிவோம் - 11

ஈசினோஃபிலியா

அலர்ஜியை அறிவோம் - 11

சென்ற வாரம் மருத்துவமனையில் நான் பிஸியாக இருந்த நேரத்தில், சென்னையில் இருந்து நம் வாசகர் ஒருவர் அலைபேசினார். `` `அலர்ஜியை அறிவோம்' தொடரைத் தொடர்ந்து படித்துவருகிறேன். அதில் அடுக்குத்தும்மல், ஆஸ்துமா பற்றி எல்லாம் எழுதினீர்கள்; ஈசினோஃபிலியா பற்றி எழுதவில்லையே, ஏன்?’’ என்று கேட்டார். ``ஆஸ்துமாவும் ஈசினோஃபிலியாவும் ஒன்றா, வெவ்வேறா?’’ எனச் சந்தேகமும் கேட்டார். இந்தச் சந்தேகம் பலருக்கும் இருக்கலாம்.

ஈசினோஃபிலியா (Eosinophilia) என்பது ஓர் அறிகுறி (Sign) மட்டுமே; தனிப்பட்ட நோய் அல்ல. ரத்தத்தில் பலதரப்பட்ட வெள்ளை அணுக்கள் உள்ளன. அதில் ஒரு பிரிவுக்கு ‘ஈசினோஃபில்’ என்று பெயர். உடலில் ஏற்படும் அலர்ஜியோடு தொடர்புடைய அணுக்கள் இவை. நோய் எதிர்ப்பு சக்தியுடன் மிக நெருங்கிய  தொடர்புடையன. ரத்த வெள்ளை அணுக்களில் ஒன்று முதல் மூன்று சதவிகிதம் வரை, இந்த அணுக்கள் இருக்கும். இதை, மொத்த அளவிலும் சொல்லலாம்; 100 கன மில்லி ரத்தத்தில் 350 முதல் 650 வரை இவற்றின் எண்ணிக்கை இருக்கலாம். இந்த எண்ணிக்கை அதிகமாகும்போது, அந்த நிலைமையை ‘ஈசினோஃபிலியா’ என்கிறோம்.

ஆஸ்துமா, எக்சீமா, அடுக்குத் தும்மல், மருந்து ஒவ்வாமை, தன்னையே தாக்கும் தடுப்பாற்றல் நோய் பிரச்னை (Auto immune disease) போன்ற அலர்ஜி பாதிப்பு உள்ள அனைவருக்கும் ரத்தத்தில் ஈசினோஃபில் அணுக்கள் அதிகமாகவே இருக்கும். குடலில் புழுக்கள் இருந்தாலும் உடலில் எங்காவது புற்றுநோய் இருந்தாலும் ஈசினோஃபிலியா இருக்கும். இருப்பது புழுவா, புற்றுநோயா எனக் காரணம் தெரிந்து அல்லது அலர்ஜியின் ஆணி வேரைப் புரிந்துகொண்டு, அதை அகற்றுவதற்கு சிகிச்சை பெற்றால், இது சரியாகிவிடும்.

அலர்ஜியை அறிவோம் - 11

வெப்ப மண்டல ஈசினோஃபிலியா

தனிப்பட்ட நோயாகக் கருதப்படுகிற ஈசினோஃபிலியா ஒன்று இருக்கிறது. ‘வெப்ப மண்டல ஈசினோஃபிலியா’ (Tropical eosinophilia) என்று இதற்குப் பெயர். இது, இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் மட்டுமே காணப்படுவதால் இந்தப் பெயரைப் பெற்றுள்ளது. 1943-ம் ஆண்டில்தான் இப்படி ஒரு நோய் இருப்பதே உலகத்துக்குத் தெரியவந்தது. இந்தியாவில் முக்கியமாக, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மகாராஷ்ட்ரா, கேரளா போன்ற கடற்கரை உள்ள மாநிலங்களில்தான் இந்த நோய் அதிக அளவில் காணப்படுகிறது. இது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரையும் பாதிக்கிறது.

என்ன காரணம்?

`ஃபைலேரியா’ எனப்படும் யானைக்கால் நோய்க்குரிய ‘உச்சரெரியா பாங்கிராஃப்டி’ மற்றும் ‘மலாயி’ எனும் ஒட்டுண்ணிக் கிருமிகள் (Wuchereria bancrofti and W. malayi) உடலுக்குள் நுழைந்ததும், ‘உடனடி அலர்ஜி’ ஏற்படுவதால், ரத்தத்தில் ‘இமுனோகுளோபுலின் - இ’ (IgE) எனும் எதிரணுப் புரதம் உருவாகிறது. இதன் விளைவால் ரத்தத்தில் ஈசினோஃபில் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரித்த அணுக்கள், நுரையீரல் திசுக்களில் தேங்குகின்றன. அப்போது `ஹிஸ்டியோசைட்’ எனும் அணுக்களும் அங்கு அதிகரிக்கின்றன. இதன் விளைவால் நுரையீரல் நுண்குழல்கள் (Bronchioles) சுருங்குகின்றன; சுவாசப்பாதையின் அளவு சுருங்கி, சுவாசம் தடைப்படுகிறது. இந்த நேரத்தில் சரியான சிகிச்சை கிடைத்துவிட்டால், சுவாசிப்பதில் சிரமம் குறையும். இல்லை என்றால்,  சுருங்கிய திசுக்களில் நார்த்திசுக்கள் உருவாகி, நுரையீரல் மிகவும் சுருங்கிவிடும். அப்போது, பாதிக்கப்பட்ட நபரால் சுவாசிக்கவே முடியாத அளவுக்கு மோசமான நிலை உருவாகும். இப்படித்தான் இந்த நோய் படிப்படியாக உருவாகிறது.

அறிகுறிகள்

மாலை நேரத்தில் காய்ச்சல் ஏற்படும். வறட்டு இருமல் வரும். பெரும்பாலான நேரங்களில் இருமலின்போது சளி வராது. சில நேரங்களில் மட்டும் சிறிதளவு சளியுடன் ரத்தமும் வரலாம். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இளைப்பு வரும். எந்த நேரமும் சோர்வாக இருக்கும். பசி ஏற்படாது, உடல் எடை குறையும். பொதுவாக, ஈசினோஃபிலியாவையும் காசநோயையும் குழப்பிக் கொள்வார்கள். காரணம், மாலை நேரக் காய்ச்சல், இருமல், சளியில் ரத்தம், பசி இல்லாத நிலைமை, உடல் எடை குறைவது போன்றவை எல்லாமே காசநோயிலும் காணப்படும். இதுபோல் இருமல் மற்றும் இளைப்பு ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் இருக்கும் என்பதால், ஈசினோஃபிலியாவை ஆஸ்துமா என்றும், ஆஸ்துமாவை ஈசினோஃபிலியா பாதிப்பு என்றும் தவறாகக் கணித்துக்கொள்வதும் உண்டு.

ஈசினோஃபிலியா ஆண்களைத்தான் அதிகமாகப் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக, 15 - 40 வயதுக்கு உட்பட்டவர்களையே பாதிக்கிறது. இது, நுரையீரலை மட்டுமே தாக்கக்கூடியது. என்றாலும் கழுத்திலும் தொடையிடுக்குகளிலும் நெறிகட்டுதல், கல்லீரலும் மண்ணீரலும் வீங்குதல் போன்ற பாதிப்புகளும் சிலரிடம் காணப்படும்.

அலர்ஜியை அறிவோம் - 11

பரிசோதனைகள்

ரத்தம் மற்றும் மலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் ஈசினோஃபில்களின் மொத்த எண்ணிக்கையும் ‘இமுனோகுளோபுலின் - இ’ (IgE) எதிரணுப் புரதமும் மிக அதிகமாக இருக்கும்.

மலப்பரிசோதனையில் குடல் புழு முட்டைகள் காணப்படும். மார்பு எக்ஸ்ரே படத்தில் தினை விதை அளவில் சிறு சிறு நிழல்கள் தனித்தனியாகத் தெரியும். இவை, பெரும்பாலும் எக்ஸ்ரே படத்தில் மத்திய கீழ்ப்பகுதிகளில்தான் அதிகமாகத் தெரியும். இதைச் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது, `மிலியரி காசநோய்’ பாதிப்பின்போதும் இந்த மாதிரியான நிழல்கள் எக்ஸ்ரே படத்தில் தெரியும். ஆனால், ஒரு வித்தியாசம்... காசநோயில் இந்த நிழல்கள் எக்ஸ்ரே படத்தில் மேற்புறத்தில்தான் அதிகமாகத் தெரியும்; தவிர, இவை ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படும். இந்த நோயை மிகவும் சரியாகக் கணிப்பதற்கு இப்போது நவீன எலிசா பரிசோதனைகள் வந்துள்ளன.

சிகிச்சை என்ன?

வெப்ப மண்டல ஈசினோஃபிலியாவுக்கு ‘டைஎதில்கார்பமெசின்’ (Diethylcarbamazine) எனும் மாத்திரையை நோயின் ஆரம்பத்திலேயே மருத்துவரின் மேற்பார்வையில் நான்கு வாரங்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால், நல்ல நிவாரணம் கிடைக்கும் என்றாலும், 100-ல் 20 பேருக்கு இது மீண்டும் வரலாம். பெரும்பாலும் நோயைத் தொடக்கத்தில் கவனிக்காதவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இவர்கள் சுமார் இரண்டு வருடங்களுக்கு மூன்று மாத இடைவெளியில் மீண்டும் மீண்டும் ஒரு கோர்ஸ் மருந்தை எடுத்துக்கொண்டால், நோய் முற்றிலும் குணமாகும். இத்துடன் குடல் புழுக்களுக்கும் முறைப்படி மாத்திரை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். ஸ்பைரோமெட்ரி பரிசோதனை மூலம் நோயாளியின் நுரையீரல் பாதிப்பின் அளவைத் தெரிந்து, சுவாசம் சிரமம் இல்லாமல் நிகழ்வதற்கு சிகிச்சை தரப்படும்.

தடுப்பது எப்படி?

யானைக்கால் நோய்க் கிருமிகள் கொசுக்கடியால்தான் பரவுகின்றன. எனவே, கொசுக்களை ஒழிப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

யானைக்கால் நோய் பரவுகிற பகுதிகளில் வாழ்கிற மக்கள் எல்லோரும் ‘டைஎதில் கார்பமெசின்’ மற்றும் அல்பெண்டசோல் எனும் குடல் புழு மாத்திரைகளை ஆண்டுக்கு ஒருமுறை சுமார் ஆறு வருடங்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டுவர, யானைக்கால் நோயும் வராது; ஈசினோஃபிலியாவில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.

சுய சுத்தம் பேணப்பட வேண்டும்.

சுற்றுப்புறத் தூய்மை அவசியம்.

- எதிர்வினை தொடரும்

அலர்ஜி டேட்டா!

ரத்தப் பரிசோதனையின்போது பலதரப்பட்ட ரத்த அணுக்களில் ஈசினோஃபில் அணுக்கள் மட்டும் ஈசின் எனும் நிறமிப்பொருளை அதிகமாக உறிஞ்சிக்கொண்டு ஊதா நிறத்தில் காணப்படுகின்றன. இதனால்தான் இவற்றுக்கு `ஈசினோஃபில்’ என்று பெயர் வந்தது.

ஈசினோஃபில் அணுக்களுக்கும் நோய் எதிர்ப்பாற்றலுக்கும் உள்ள தொடர்பை 130 ஆண்டுகளுக்கு முன்பு `பால் எர்லிச்’ (Paul Ehrlich) எனும் விஞ்ஞானி கண்டுபிடித்தார்.

ஈசினோஃபிலியா வேறு, வெப்ப மண்டல ஈசினோஃபிலியா நோய் வேறு என்று கண்டுபிடித்ததோடு அதற்குத் தனிப் பெயரும் சூட்டியவர் வெய்ன்கார்டன் (Weingarten) எனும் டென்மார்க் விஞ்ஞானி.