
மனமே நீ மாறிவிடு - 13

உடலும் மனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அதனால்தான் உடல் சரியில்லை என்றால், மனம் பாதிக்கிறது. மனம் பாதித்தால், உடல் நலம் கெடுகிறது.
உடல் சரியில்லை என்றால், முன்னுரி மைகள் மாறிவிடுகின்றன. வாழ்க்கையின் கண்ணோட்டமே மாறிவிடுகிறது.
“பாயில் படுத்து நோயில் விழுந்தால் காதல் கானல் நீரே” என்று கண்ணதாசன் எழுதியிருப்பார். காதல் ஏற்பட உடலும் ஒத்துழைக்க வேண்டும் என்பதில் அறிவியல் இருக்கிறது.
தன் கடைசிக் காலங்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது கவிஞர் வாலி இப்படிச் சொன்னாராம் “கருணாநிதி வந்தது, கமலஹாசன் வந்தது எல்லாம் சரி, வெளிக்கி வரலேயே.” இந்த நகைச்சுவையில் வலி உள்ளதைப் பார்க்கலாம். வலியிலும் நகைச்சுவைகொள்ளும் அளவு பக்குவப்பட்டவர் வாலி என்றும் கொள்ளலாம்.
படுக்கையில் விழுந்தால் பாதி நம்பிக்கை போய்விடுகிறது. வாழ்க்கை மிக வித்தியாசமாகத் தென்பட ஆரம்பிக்கிறது. மனநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஒரு (ஹார்ட்) அட்டாக் வந்தவுடன் குணம் மாறிப் பேசுபவர்களைப் பார்க்கிறோம். “எல்லாத்தையும் விட்டுட்டேன் சார். எதுக்கு இப்படி ஓடறோம்னு தோணுது. என்ன கொண்டுட்டு போகப்போறோம்? அதனால யார் கிட்டயும் கோவிச்சுக்கறதுகூட கிடையாது” என்று துறவி போல பேசுவார்கள். எத்தனை நாட்களுக்கு இப்படி இருப்பார்கள் என்று தெரியாது. ஆனால், உடனடியாக ஒரு மாற்றம் ஏற்படுவது நிஜம்.
உடலின் ரசாயன மாற்றங்கள் மன மாற்றங்களை ஏற்படுத்தும். அதுபோல மன மாற்றங்கள் உடலில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த இணைப்பைப் புரிந்துகொள்ளுதல் முக்கியம்.

ஒரு தோல் மருத்துவ நண்பர் ஒரு சொரியாஸிஸ் கேஸ் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். 12 வயதுப் பையனுக்கு ஐந்து ஆண்டுகளாகத் தீராத தோல் பிரச்னை. மனஅழுத்தம் எதுமே இல்லை எனச் சாதித்தனர் பெற்றோர். ஐந்து வருடங்களுக்கு முன் என்ன நடந்தது என்று ஆராய்ந்ததில் ஊர் மாறியதால் பள்ளி மாற்றம் நிகழ்ந்தது தெரியவந்தது. வயது வந்தோருக்கு இட மாற்றம் செய்யும் பாதிப்புகளைவிட குழந்தைகளுக்கு அதிகம். பள்ளி மாற்றம், ஆசிரியர் மாற்றம், நட்பு வட்டம் மாற்றம், நெருங்கிய உறவுகளின் பிரிவு எல்லாம் சில குழந்தைகளுக்குப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். கடைசியில் மன சிகிச்சையுடன் கூடிய தோல் சிகிச்சையில்தான் அந்தப் பையன் குணமானான்.
பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு உளவியல் குறைபாடுகளும் நோய்களும் அதிகம் என்றால் நம்புவீர்களா? குழந்தைகளுக்கான மனநலக் குறைபாடுகள் (Childhood psyciatric disorders) வயது வந்தோர்களுக்கு வரும் பாதிப்புகளைவிட இரு மடங்கு அதிகம். பிள்ளைப் பருவத்தில் சிறுவர்களுக்கு சிறுமியர்களைவிட பிரச்னைகள் அதிகம். ஆனால், வயதாக வயதாக ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் பாதிப்புகள் வருகின்றன. இந்தச் செய்திகள் சொல்லும் சமூகக்கூறுகளை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.
உடலும் மனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றால், இரு வழிகளிலும் பாதிப்பு ஏற்படுவது இயற்கை. ஆனால், இதை நவீன மருத்துவம் கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொண்டாலும், நோய் கண்டுபிடிப்பு முறைகளிலும் சிகிச்சைமுறைகளிலும் பெரிதாகக் கண்டுகொள்வது இல்லை.
எந்த ஆய்விலும் உடல் காரணங்கள் எதுவும் இல்லை என்றாலோ, மற்ற சிகிச்சைகள் பலன் அளிக்காமல் போனாலோ, அது மனம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்று முடிவு செய்வதற்குள் நோயுற்றவர் கொள்ளும் செலவுகளும், வாழ்வியல் சோதனைகளும் மனஉளைச்சலும் ஏராளம்.
உடலில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றதும் உடனே அடுத்தத் துறைக்கு அனுப்பும் முன், சற்று நேரம் பேசினாலே நிறையத் தகவல்கள் தெரியவரும். சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய முறைகள் அதனால்தான் ஒரு மனிதனை முழுமையாக உணர்ந்து, அறிந்து ஒரு ஒட்டுமொத்த நலத்திட்டத்தை முன் வைக்கின்றன. ஓர் அங்கத்தைக் குணப்படுத்துவதைவிட ஓர் உயிரைக் குணப்படுத்தும் சித்தாந்தத்தைக் கொண்டவை அவை.
பேசுதல் முக்கியம். கேட்டல் முக்கியம். அடுத்த மனிதனின் வாழ்வை அறிந்துகொள்ளுதல் முக்கியம். இந்த நோயின் முழு உடல் - மன - சமூகத்தன்மை அறிந்து குணப்படுத்துதல் முக்கியம்.
ஒரு தலைவலி என்றால்கூட கையில் கிடைத்த மாத்திரையை விழுங்குவதற்கு முன், நம்பிக்கைக்குரிய மனிதர் ஒருவரிடம் மனசுவிட்டுப் பேசுங்கள். பல நேரங்களில் அதுவே குணப்படுத்திவிடும்.
எந்த மனநோயும் இல்லாமல், தனக்குத்தானே பேசிக்கொண்டு செல்லும் பலரைப் பார்க்கிறோம். என்ன காரணம்? நம் மனக்குமுறலைச் சொல்ல ஒரு வடிகால் தேவைப்படுகிறது. உறவோ நட்போ கிடைத்தால் நல்லது. உள்ளே உள்ள வேதனைகள் நோய்களாக மாறும். வாய்விட்டுப் பேசுதல் முக்கியம். பல பிரச்னைகள் தீராவிட்டாலும், பேசினாலே மனம் லேசாகி நம்பிக்கை பெற்று அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறோம். பேசுவோம். மனம் மாறுவோம். சுகம் பெறுவோம்!
- மாறுவோம்!