மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 13

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 13
பிரீமியம் ஸ்டோரி
News
உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 13

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 13

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 13

டல், மனம் சார்ந்து நம் உடலின் எந்த ஒரு  செயல்பாடாக இருந்தாலும் அதை இயக்குவது மைய நரம்பு மண்டலம்தான் (Central nervous system (CNS)). இதை இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவது மூளை. அடுத்தது முதுகுத் தண்டுவடம் (Spinal cord).
 
இதயம் துடிப்பதன் மூலம் உடல் முழுவதும் ரத்தம் கொண்டுசெல்லப்படுகிறது. நுரையீரலின் செயல்பாடு காரணமாக, ரத்தத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடு பிரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.ஆக்சிஜன் ரத்தத்தில் கலக்கிறது. வயிற்றில் உணவு செரிமானம் நடக்கிறது. இப்படி, ஒவ்வோர் உறுப்பிலும் ஒரு குறிப்பிட்ட பணி மட்டுமே நடக்கிறது. ஆனால், மைய நரம்பு மண்டலம் இதுபோல ஒரே ஒரு பணியை மட்டும் செய்யவில்லை. இவை அனைத்தையும் இயக்கிக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல பணிகளை ஒரே நேரத்தில் செய்கிறது. இதை எப்படி இவ்வளவு விரைவாக, துல்லியமாகச் செய்கிறது என்பதுதான் வியப்பு.

இதயத்துடிப்பு, சுவாசித்தல் போன்ற நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுயமாக இயங்கக்கூடியவற்றை மைய நரம்பு மண்டலம் இயக்குகிறது. பேச்சு, நடத்தை போன்ற நம் கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களையும் கட்டுப்படுத்துகிறது. எண்ணங்கள், சிந்தனை, உணர்ச்சிகள் போன்றவற்றையும் இயக்குகிறது. மூளையின் உத்தரவுக்கு ஏற்ப இவற்றை எல்லாம் செயல்படுத்தும் பணியைத் தண்டுவட நரம்புகள் செயல்படுத்துகின்றன.

முதுகெலும்புத் தொடரின் உதவியால்தான் நாம் நேராக நிற்கிறோம், உடலை வளைக்கிறோம். முதுகுத் தண்டுவடத்தில் அடிபட்டது என்றால், நம் இயக்கமே பாதிப்படையக்கூடும். இது வெளிப்படையாக நமக்குத் தெரியக்கூடிய பயன்பாடு. ஆனால், உண்மையில், மூளைக்கும் உடலுக்குமான இணைப்புப் பாலமாக இருப்பது முதுகுத் தண்டுவடம்தான். இதன் வழியாகத்தான் உடலின் ஒவ்வொரு பகுதியுடனும் மூளை தொடர்புகொள்கிறது. உடலில் இருந்து மூளைக்கும், மூளையில் இருந்து உடலுக்கும் தகவலைப் பரிமாறும் பாதைதான் முதுகுத் தண்டுவடம்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 13

தாயின் கருவில் எம்ரியோ என்ற நிலையில் இருக்கும்போதே நரம்பு மண்டலத்தின் உருவாக்கமும் வளர்ச்சியும் தொடங்குகின்றன. நியூரல் டியூப் நிலையில் இருந்து முதுகுத் தண்டுவடமாக இது முதிர்ச்சியடைகிறது. தண்டுவடத்தினுள் கோடிக்கணக்கான நரம்பு இழைகள் மூலமாகத் தகவல் பரிமாற்றம் நடக்கிறது. முதிர்ச்சி அடைந்த மனிதனின் முதுகுத் தண்டுவடம் 40 முதல் 50 செ.மீ நீளமும், 1 முதல் 1.5 செ.மீ சுற்றளவும் இருக்கும்.

மிகவும் முக்கியமான பகுதி என்பதால், மிகவும் பாதுகாப்பாக உள்ளது. மூன்று அடுக்கு சவ்வுகள், மூளையைப் பாதுகாக்கும் செரிப்ரல் ஸ்பைனல் ஃபுளுயிட் (Cerebrospinal fluid (CSF)) ஆகியவை தண்டுவடத்தை அதிர்வுகளில் இருந்து பாதுகாக்கிறது. இதற்கு அடுத்தபடியாக எலும்பாலான பாதுகாப்பு அரண் உள்ளது. இந்த எலும்புகளுக்கு வொர்டிப்ரா (Vertebrae) என்று பெயர். இந்த எலும்புத் தொடருக்கு இடையில் இருந்து, 31 ஜோடி நரம்புகள் வெளிப்பட்டு மனித உடலின் இயக்கத்துக்குக் காரணமாக இருக்கின்றன. இந்த ஜோடிகளை, ஐந்தாகப் பிரிக்கலாம். சிலர், அடியில் இருக்கும் வால் பகுதியைத் தவிர்த்து நான்காகப் பிரிப்பதும் உண்டு. அவை, கழுத்துப் பகுதி (Cervical), நெஞ்சுப் பகுதி (Thoracic), கீழ்முதுகு (Lumbar), சேக்ரல் (Sacral), தண்டுவட வால் எனப் பிரிக்கலாம். இந்த ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமான பிரிவுகள் உள்ளன. 

கழுத்துப் பகுதியில் இருந்து வரும் எட்டு ஜோடி நரம்புகள் தலை, கழுத்து, மேல் உடல், கை, புஜத்தின் மேல் பகுதியை இயக்குகின்றன. நெஞ்சுப் பகுதியில் உள்ள 12 ஜோடி நரம்புகள், கீழ் கை, விரல்கள், நெஞ்சு, வயிற்றுத் தசைகளை இயக்குகின்றன. கீழ் முதுகுப்பகுதியில் உள்ள ஐந்து ஜோடி நரம்புகள் இடுப்பு, கால் மூட்டு, கணுக்கால் மற்றும் பாதப் பகுதிக்குப் பொறுப்பாகின்றன. சேக்ரல் பகுதியின் ஐந்து ஜோடி நரம்புகள் குதிகால், சிறுநீர்ப்பை, இனப்பெருக்க மண்டலத் தசைகளை இயக்குகின்றன. தண்டுவட வால் பகுதியானது அதைச் சுற்றி உள்ள தசைப் பகுதியைக் கட்டுப்படுத்துகிறது. தவிர, தலைப்பகுதியில் இருந்து 12 ஜோடி நரம்புகள் வெளிப்படுகின்றன. க்ரேனியல் நரம்புகள் எனப்படும் அது, நம் இமை, கண் அசைவு, தாடை அசைவு, உணவு விழுங்குதல் எனப் பல செயல்பாடுகளுக்குப் பொறுப்பு.

விபத்து உள்ளிட்ட காரணங்களால் முதுகுத்தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்படும்போது, மூளைக்கும் உடலுக்குமான தகவல் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. காயம் ஏற்படும் பகுதியைப் பொருத்து பாதிப்பின் தீவிரம் வேறுபடுகிறது. நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் காரணமாகப் பெரும்பான்மையான பாதிப்புக்கள் சரிசெய்யப் பட்டு, காயம் அடைந் தவர்கள் சுதந்திரமாக, தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடர முடிகிறது.

- அலசுவோம்!