Published:Updated:

அலர்ஜியை அறிவோம் - 12

அலர்ஜியை அறிவோம் - 12
பிரீமியம் ஸ்டோரி
News
அலர்ஜியை அறிவோம் - 12

சிலியாக் நோய்

அலர்ஜியை அறிவோம் - 12

லர்ஜி ஆகும் உணவுகளில் கோதுமை, பார்லி, ஓட்ஸ் ஆகிய தானியங்கள் மிக முக்கியமானவை. காரணம், இவற்றில் ‘குளுட்டன்’ (Gluten) எனும் புரதம் இருக்கிறது. இதுதான் பலருக்கும் வில்லனாகி, ‘சிலியாக் நோயை’ (Coeliac Disease) ஏற்படுத்துகிறது. இந்த நோய் உள்ளவர்கள் மிகச் சரியான உணவுமுறையைப் பின்பற்றினால் மட்டுமே, நோயில் இருந்து விடுபட முடியும். இல்லை என்றால்,  இது வாழ்நாள் முழுவதும் தொல்லை தரும்.

அலர்ஜியை அறிவோம் - 12

நோய் ஏற்படும் விதம்

குளுட்டன் அலர்ஜி உள்ளவர்கள் அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளைச் சாப்பிட்டதும், உணவுப் பாதையில் உள்ள ஐஜிஏ (IgA) எதிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த அணுக்கள், குளுட்டனை எதிரியாகக் கருதி, குடலைவிட்டு விரட்டுகின்றன. இந்தப் போரில் குடலில் உள்ள குடல் உறிஞ்சிகள் (Villi) அழிக்கப்படுகின்றன. இப்படி, ஒவ்வொரு முறையும் குளுட்டன் உள்ள உணவை உண்ணும்போதும் இந்தப் போராட்டம் நிகழ்வதால், ஒரு கட்டத்தில் இவர்களுக்குக் குடல் உறிஞ்சிகளே இல்லை என்னும் நிலை உருவாகிறது. நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சி, ரத்தத்தில் சேர்ப்பதற்குக் குடல் உறிஞ்சிகள்குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், இவர்களுக்குக் குடல் உறிஞ்சிகளே இல்லை என்கிறபோது, சத்துக்கள் உறிஞ்சப்படாமல் வெளியேறிவிடும். இதனால், சத்துக்குறைவு நோய்களும் செரிமானப் பிரச்னைகளும் ஏற்படும்.

அலர்ஜியை அறிவோம் - 12

அறிகுறிகள்

சிலியாக் நோய், குழந்தை முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் வரலாம். பெரும்பாலும், அலர்ஜி பாதிப்பு உள்ள குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஆரம்பத்தில் நோயின் அறிகுறிகள் வெளியில் தெரியாமல் இருக்கும். நாளடைவில் வயிற்றில் வாயு சுற்றுவதுபோல் இருக்கும். வயிற்று உப்பசம், உணவைச் சாப்பிட்டதும் வயிற்று வலி போன்றவை ஏற்படும். வாந்தி வரும்.

சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். இன்னும் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படும் அல்லது இந்த இரண்டும் மாறிமாறித் தொல்லை தரும். மலம் வழுவழுப்பாகவும் மிகுந்த துர்நாற்றத்துடனும் வெளியேறும். குறிப்பாக, சாப்பிட்டதும் மலம் கழிக்கத் தோன்றும். குளுட்டன் இல்லாத உணவைச் சாப்பிட ஆரம்பித்தால், இந்த அறிகுறிகள் எல்லாம் ஒரே நாளில் மறைந்துவிடும்.

இந்த நோயைக் கவனிக்கத் தவறுபவர்களுக்கு நாளடைவில் ரத்தசோகை ஏற்படுவதால், எந்த நேரமும் களைப்பாக இருப்பார்கள். வாய்ப்புண் அடிக்கடி தொல்லை தரும். உடல் எடை குறையும்.

கை, கால்களில் மதமதப்பு, எரிச்சல், ஊசி குத்தும் வலி போன்ற அறிகுறிகளும் காணப்படலாம்.

எலும்பு அடர்த்திக் குறைவு (Osteoporosis) வரலாம்.

குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்பட்டால், உடல் வளர்ச்சி வயதுக்கு ஏற்றபடி இருக்காது.

குழந்தையின் நடவடிக்கைகள் மந்தமாக இருக்கும். பற்கள் வளர்வது தாமதப்படும்.

அவ்வப்போது முதுகு, முழங்கால், முழங்கை மற்றும் புட்டத்தில் உள்ள சருமத்தில் கடுமையான அரிப்பும் எரிச்சலுடன்கூடிய கொப்பளங்களும் தோன்றும்.

தைராய்டு பிரச்னை மற்றும் முடக்குவாதமும் ஏற்படலாம்.

அலர்ஜியை அறிவோம் - 12

என்ன பரிசோதனை?

அறிகுறிகளை மட்டும் பரிசீலித்து, சிலியாக் நோயைக் கணிப்பது மிகவும் சிரமம். காரணம், கிரான் நோய் (Chron’s disease), அடிக்கடி மலம் கழிக்கும் குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome - IBS) போன்ற நோய்களின் அறிகுறிகளும் இவ்வாறே இருக்கும். இதனால், மருத்துவர்களுக்கே குழப்பத்தை உண்டாக்கும்.

ரத்தத்தில் ‘ஐஜிஏ எதிரணுக்கள் பரிசோதனை’ செய்து, இவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றால், இந்த நோய் உள்ளதை உறுதி செய்யலாம். குடலில் ‘பயாப்சி’ எடுத்துப் பரிசோதனை செய்து இதை உறுதிப்படுத்தலாம். ‘கேப்சூல் எண்டோஸ்கோப்பி’ பரிசோதனையில் குடல் உட்சுவரின் தன்மையைப் பார்த்து, இந்த நோயைச் சரியாகக் கணிக்கலாம். சமீபத்தில், இந்த நோய்க்கு மரபணுப் பரிசோதனைகளும் வந்துள்ளன. டிக்யூ2 (DQ2), டிக்யூ8 (DQ8) எனும் மரபணுக்கள் ரத்தத்தில் காணப்படுபவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

அலர்ஜியை அறிவோம் - 12

என்ன சிகிச்சை?

சிலியாக் நோய்க்குத் தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. குளுட்டன் இல்லாத உணவுகளைச் சாப்பிடுவதுதான் இது வராமல் தடுக்கும் ஒரே வழி.

அரிசி, கடலை மாவு, சோயா, சோளம், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, ஆரோரூட் மாவால் தயாரிக்கப்பட்ட உணவுகள் இவர்களுக்குப் பாதுகாப்பா னவை. இந்த நோயின்போது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அளவும் உடலில் குறைவதால், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் டி மாத்திரை, துத்தநாகம், ஃபோலிக் அமிலம், தாமிரம் கலந்த சத்து மாத்திரைகளை மருத்துவரை ஆலோசித்துச் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.

- எதிர்வினை தொடரும்