Published:Updated:

மனமே நீ மாறிவிடு - 14

மனமே நீ மாறிவிடு - 14
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நீ மாறிவிடு - 14

மனமே நீ மாறிவிடு - 14

மனமே நீ மாறிவிடு - 14

ந்த உணர்வால், உடலுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடந்துவருகிறது. நவீன மருத்துவம் இதில் அக்கறை காட்டுவதற்கு முன்னர், உளவியல், இறையியல், பழங்குடி வைத்தியம் எனப் பல்வேறு முறைகள் இதற்கான தேடலில் இருந்தன. மருத்துவ அறிவியலும் உளவியலும் கைகோத்து உலகுக்கு வெளியிட்ட முதல் பெரும் அறிவிப்பு ‘இதயநோய்களுக்கு சில ஆளுமைப் பண்புகள் பெரும் காரணமாகின்றன’ என்பதுதான்.

‘டைப் ஏ பர்சனாலிட்டி’ என்று இதை அழைக்கிறார்கள். இதயநோய் வருபவர்களுக்கு என சில பிரத்யேகப் பண்புகள் உள்ளன. மரபியல் காரணங்கள் மட்டும் அல்ல; உணவில் கொழுப்பு மட்டும் அல்ல; சில ஆளுமைப் பண்புகளும்தான் நோயை உருவாக்குகின்றன. அதனால், `அடைப்பை நீக்க மருந்துகள் தருவதோடு, இந்த ஆளுமை குணங்கள் மாறவும் ஆலோசனை தர வேண்டும்’ என்று வலியுறுத்தினார்கள்.

முதலில், டைப் ஏ ஆளுமைப் பண்புகள் என்னென்ன என்று பார்ப்போம். பட்டியல் பெரிது என்பதால், முக்கியமான மூன்று குணங்களை மட்டும் இங்கு பார்க்கலாம்.

மனமே நீ மாறிவிடு - 14

முதலாவது, போட்டி மனப்பான்மை. வாழ்வில் எல்லா நிகழ்வுகளையும் போட்டியாக நினைத்து, வெற்றிகொள்ள துடிப்பது. ‘முதல் இடம் பிடிப்பது முக்கியம். ஜெயிப்பது மானப் பிரச்னை. அதற்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ஓடத் தயார்’ என்ற மனநிலை. இதனால், எல்லோரையும் போட்டியாளராகக் கருதி, போராட்டத்துடனேயே வாழ்வது. வரிசையில் நிற்கக்கூட முந்துவார்கள். இருவர் இருக்கையில் பொதுக் கைப்பிடியை விட்டுத்தர மறுப்பார்கள். (சுந்தர ராமசாமியின் ‘மீறல்’ எனும் சிறுகதையில் இந்த உளவியல் அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கும்.)

இரண்டாவது எல்லா நேரமும் அவசரத்தனம். எழும்போதே, ‘ஐயோ நேரமாச்சே’ என்று ஓட ஆரம்பிப்பார்கள். எட்டு மணி வண்டிக்கு ஆறு மணிக்குக் கிளம்ப அவசரப்படுவார்கள். ஒரு வேலை முடிந்தால், ஒரு கணம்கூட திருப்திப்படாமல், அடுத்த வேலை பற்றி அவசரம் காட்டுவார்கள்; பொறுமை தவறுவார்கள்; கோபப்படுவார்கள். வாழ்க்கையே பெரும் ஓட்டம் இவர்களுக்கு.

மூன்றாவது, ஒரே நேரத்தில் பல வேலைகலைச் செய்வது. ஒரே நேரத்தில் அனைத்தையும் செய்ய முயற்சிப்பார்கள். எதையும் முழுமையாக, திருப்தியாகச் செய்ய மாட்டார்கள். சாப்பிடும்போது மொபைலில் பேசியவாறு அருகில் உள்ளவர்களுடன் பேசுவார்கள்.

10 வேலைகளில் ஈடுபட்டவாறு, 11-வது வேலையைப் பற்றி யோசிப்பார்கள். (தசாவதானிகள் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.)

‘இது, இன்று நகரத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பொருந்துவதுபோல உள்ளதே?’ என நினைக்கிறீர்களா? நிஜம்தான் நகர வாழ்க்கையின் நியதிகள் எல்லோரையும் டைப் ஏ- வாக மாற்ற எத்தனிக்கின்றன. பள்ளி காலத்திலேயே முதல் இடத்துக்கான வேட்டைத் தொடங்குகிறது.
‘ஓடு, நேரம் இல்லை. சீக்கிரம் சாதிப்பதுதான் வெற்றி’ என்று, பணியிடத்தில் சொல்லப்படுகிறது.

மனமே நீ மாறிவிடு - 14

உலகமயமாக்கமும் நுகர்வுக் கலாசாரமும் நம்மை ஒரு பெரும் ஓட்டத்துக்குத் தயார் செய்துவிட்டன. இந்தியா வல்லரசாக வேண்டும் என்று பேச ஆரம்பித்தோம். இன்று, உலக நாடுகளில் முதன்மை பெற்றுள்ளது இந்தியா. எதில் தெரியுமா? இதய நோய்களில்.

டைப் பி ஆளுமை  என்றால் என்ன? எதையும், தன் போக்கில் அமைதியாக எடுத்துக்கொண்டு, பொறுமை இழக்காமல், ஒரு வேலையை முடித்து, அடுத்த வேலைக்கு நிதானமாகச் செல்லும் ஆசாமிகள். நம் சமூகம் இவர்களை எருமை மாடுகள் சாலையை மறிப்பதுபோலப் பார்க்கிறது. ஆனால், இவர்களுக்கு இதயநோய்களின் ரிஸ்க் குறைவு. நிறுவனங்களிலும் இவர்களின் வெற்றிக்குக் குறைவில்லை என்பதும் ஆச்சர்யமான உண்மை. இதேபோல, சர்க்கரை நோய், வயிற்றுப்புண் எனப் பல சைக்கோ சோமேடிக் டிஸ்ஆர்டர்ஸ் பற்றி ஆராய்கிறார்கள். மருத்துவ ஆய்வுகள் கண்டு சொன்னதைவிட, ஆன்மிக வழியில் சுகமளிக்கும் லூயிஸ் ஹேவின் கண்டுபிடிப்புகள் அபாரமானவை. `உடலின் அனைத்து உபாதைகளுக்கும் உளக் காரணங்கள் உள்ளன’ என்கிறார். தன் புற்றுநோயை அவர் குணப்படுத்தியதைப் படிப்பது ஒரு பரவசமான அனுபவம்.

சுருக்கமாகச் சொன்னால், அனைத்து உணர்வுகளும் உடலில் பதிவுசெய்யப்படுகின்றன. அவை ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்களுக்கு ஏற்பதான் நம் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது. காரணங்கள் எதுவாகிலும் யாராகிலும், உங்கள் உடல்நலம் உங்கள் உணர்வுகள் சார்ந்தவை. நல்ல உணர்வுகள் சுகப்படுத்தும். நல்லது அல்லாதவை நோய்களை ஏற்படுத்தும். மனசை லேசாகவைத்திருக்கக் கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கையின் சிறந்த பாடம். திருப்தியும் மகிழ்ச்சியும் கொண்ட மனம், பிற மனதை நோகடிக்காது; குற்றங்கள் நிகழ்த்தாது; நிஜமான வளர்ச்சியின் தொடக்கமும் அதுதான்.

- மாறுவோம்!