Published:Updated:

அலர்ஜியை அறிவோம் - 13

அலர்ஜியை அறிவோம் - 13
பிரீமியம் ஸ்டோரி
News
அலர்ஜியை அறிவோம் - 13

அலர்ஜியை அறிவோம் - 13

அலர்ஜியை அறிவோம் - 13

“பால் சாப்பிட்டால் எனக்கு அலர்ஜியாகி, வயிற்றில் பிரச்னை தொடங்கிவிடும்” என்று புலம்புவோரைப் பார்த்திருப்பீர்கள். பால், ஒரு பரிபூரண உணவு என்கிறோம். குழந்தை முதல் பெரியோர் வரை அனைவருக்கும் தேவைப்படும் ஒரு முக்கிய உணவாக இதைக் கருதுகிறோம். இதுவே அலர்ஜி ஆகிவிட்டால், நம் ஆரோக்கியத்தைக் காப்பது எப்படி?

காரணம் என்ன?

பாலில் லேக்டோஸ் எனும் சர்க்கரை இருக்கிறது. இதைச் செரிப்பதற்கு சிறுகுடலில் லேக்டேஸ் எனும் என்சைம் சுரக்கிறது. குடித்த பால் சிறுகுடலுக்கு வந்ததும், இது லேக்டோஸை குளுக்கோஸாகவும் கேலக்டோஸாகவும் உடைக்கிறது. இதனால், குடல் உறிஞ்சிகள் இந்தச் சத்துக்களை எளிதாக உறிஞ்சி, ரத்தத்துக்கு அனுப்புகின்றன.  சிலருக்கு, குடலில் லேக்டேஸ் என்சைம் குறைந்த அளவில் உற்பத்தியாகும். சிலருக்கு துளிகூட உற்பத்தியாவது இல்லை. அப்போது, பாலில் உள்ள லேக்டோஸ் செரிக்கப்படாமல் பெருங்குடலுக்குச் சென்றுவிடும். அங்கு உள்ள பாக்டீரியா, செரிக்கப்படாத லேக்டோஸுடன் வினைபுரியும். இதன் விளைவால், பல செரிமானப் பிரச்னைகள் உருவாகும். இதைத்தான் ‘பால் ஒவ்வாமை’ (Milk Allergy) என்கிறார்கள். மருத்துவர்கள் இதை ‘பால் ஏற்பின்மை’ (Lactose Intolerance) என்கிறார்கள்.

அலர்ஜியை அறிவோம் - 13

வகைகள்

1.பரம்பரை பால் ஏற்பின்மை: லேக்டேஸ் என்சைம் உற்பத்திக்குக் காரணமான எல்.சி.டி (LCT) மரபணுவில் பிழை ஏற்படுவதால் இந்த வகைப் பால் ஏற்பின்மை பிரச்னை வருகிறது. அப்பா, அம்மா இருவருக்கும் இந்தப் பிரச்னை இருந்தால், குழந்தைக்கும் இது ஏற்படும்.

2. முதல்நிலை பால் ஏற்பின்மை: இந்த வகைதான் பெரும்பாலோருக்கு ஏற்படுகிறது. பொதுவாக, குழந்தைப் பருவத்தில் பால் செரிமானத் துக்குத் தேவைப்படும் அளவுக்கு லேக்டேஸ் என்சைம் உற்பத்தியாகும். பாலில் இருந்து திட உணவுக்கு மாறும்போது, இது சுரக்கப்படும் அளவு குறைந்துவிடும். பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவு எதுவானாலும் செரிமானமாக சிரமப்படும் இந்தப் பிரச்னை, வயதாக ஆக நீடிக்கவே செய்யும்.

3.இரண்டாம் நிலை பால் ஏற்பின்மை: குடலில் சில நோய்கள் தாக்கும்போது தற்காலிகமாக லேக்டேஸ் என்சைமின் உற்பத்தி பாதிக்கப்படும்.

தூண்டும் காரணிகள்

லேக்டேஸ் என்சைமை உற்பத்தி செய்யும் குடல் செல்கள் கர்ப்பத்தில் எட்டாவது மாதத்தில்தான் உருவாகும். இதற்குள் குழந்தை பிறந்துவிட்டால், பால் ஏற்பின்மை ஏற்படும்.

பாக்டீரியா மற்றும் ரோட்டா வைரஸ்களால் ஏற்படும் வயிற்றுப்போக்கு பால் ஏற்பின்மையைத் தூண்டும். இந்த நோய்கள் குணமானதும், பாலுக்கான செரிமானப் பிரச்னையும் சரியாகிவிடும்.

சிலியாக், கிரான் நோயும் பால் ஏற்பின்மையை ஏற்படுத்துபவையே. இந்த நோய்கள் சாமானியமாகக் குணமாவது இல்லை என்பதால், இவற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்குப் பால் ஏற்பின்மையும் நீடிக்கும்.

வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்க்குக் கீமோ தெரப்பி மற்றும் கதிரியக்க சிகிச்சை தரப்படும்போது, லேக்டேஸ் என்சைம் உற்பத்தியாவது பாதிக்கப்படும். இவர்களுக்கு, பால் ஏற்பின்மை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

அலர்ஜியை அறிவோம் - 13

அறிகுறிகள் என்னென்ன?

பால் அல்லது பாலில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்துக்குள் வயிற்றைக் கலக்குவதுபோல் இருக்கும்; வயிற்றுப்போக்கு ஏற்படும்; குமட்டலும் வாந்தியும் வரும்; வயிற்றில் வாயு சுற்றுவதுபோல் இருக்கும்; வயிற்று உப்புசம், வயிற்றைப் பிசைகிற மாதிரி வயிற்று வலி போன்றவை ஏற்படும்.

என்ன பரிசோதனை?

பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை ஒரு வாரத்துக்குச் சாப்பிடாமல் இருந்தால், இந்த நோயின் அறிகுறிகள் குறைந்துவிடும். நோயை 100 சதவிகிதம் உறுதிசெய்ய, கீழ்க்காணும் பரிசோதனைகள் தேவைப்படும்.

1.ஹைட்ரஜன் சுவாசப் பரிசோதனை: பயனாளியை லேக்டோஸ் அதிகம் உள்ள ஓர் உணவைச் சாப்பிடச் சொல்வர். செரிக்கப்படாத லேக்டோஸ் பெருங்குடலுக்கு வந்து, அங்கு உள்ள பாக்டீரியாவுடன் வினைபுரியும்போது, ஹைட்ரஜன் அதிக அளவில் உற்பத்தியாகும். இது குடலில் உறிஞ்சப்பட்டு, நுரையீரலுக்கு வந்து வெளிமூச்சில் வெளிப்படும். இதை அளந்து பால் ஏற்பின்மை நோயைக் கணிக்க முடியும்.

2.குளுக்கோஸ் பரிசோதனை: லேக்டோஸ் மிகுந்த ஒரு திரவத்தை நோயாளிக்குக் குடிக்கக் கொடுப்பர். இரண்டு மணி நேரம் கழித்து, அவருடைய ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை அளவிடுவதன் மூலம் பாதிப்பைக் கண்டறியலாம்.

3.மலம் அமிலப் பரிசோதனை: குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்படும். குடலில் செரிக்கப்படாத லேக்டோஸ் மலத்தில் லேக்டிக் அமிலத்தை உற்பத்திசெய்யும். மலத்தில் லேக்டிக் அமிலம் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வதன் மூலம் இந்த நோயைக் கணிக்கலாம்.

4.திசுப் பரிசோதனை: சிறுகுடலிலிருந்து சிறிதளவு திசுவை எடுத்து ‘பயாப்சி’ பரிசோதனை செய்தும் கண்டறியலாம்.

அலர்ஜியை அறிவோம் - 13

என்ன சிகிச்சை?

இதற்கு, தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இதுவரை இல்லை. பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதுதான் ஒரே வழி.

முற்றிலும் இந்த உணவுகளைத் தவிர்க்க இயலாதவர்கள், குறைந்த அளவில், ஒரே நேரத்தில் சாப்பிடாமல், சிறிய இடைவெளியில் சாப்பிடுவது நல்லது.

குழந்தைகளுக்கு லேக்டோஸ் இல்லாத செயற்கைப் பால் பவுடர் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தலாம். பெரியவர்களுக்கு பாலுக்கு மாற்றாக சோயா பால் எடுக்கலாம்.

மோருக்குப் பதிலாக தயிர் சாப்பிடலாம்.  (தயிரில் லேக்டோஸ் இருக்கிறது என்றாலும் அதிலுள்ள பீட்டாகேலக்டோசைடேஸ் எனும் என்சைம், லேக்டோஸை செரிக்கும் குணம் உடையது).

பாலை மட்டும் தனியாகக் குடிப்பதற்குப் பதிலாக, திட உணவைகளைச் சாப்பிட்டு முடித்ததும் குடிக்கலாம்.

- எதிர்வினை தொடரும்

குழந்தைகளுக்கு லேக்டோஸ் இல்லாத செயற்கைப் பால் பவுடர் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தலாம். பெரியவர்களுக்கு பாலுக்கு மாற்றாக சோயா பால் உதவும்.

சேர்க்க வேண்டியவை

சோயா பால், சைவம் மற்றும் அசைவ சூப்கள், காய்கறிகள், பழங்கள், கிழங்குகள், மக்காச்சோள உணவுகள், சாலட், சாண்ட்விச், ரஸ்க், இன்ஸ்டன்ட் காபி, பிஸ்கட், இறைச்சி, முட்டை, ஓட்ஸ்.

தவிர்க்க வேண்டியவை (2 சதவிகிதத்துக்கு மேல் லேக்டோஸ் உள்ளவை)

பால் பொருட்கள், பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள், இனிப்புகள், க்ரீம் கேக்குகள், பேக்கரி பண்டங்கள், குழந்தைகளுக்கான செயற்கைப் பால் பவுடர்கள் (லேக்டோஸ் உள்ளவை), சாஸ்கள், புட்டிங்க்ஸ், கற்கண்டு, வெல்லம், சாக்லேட்.

அலர்ஜி டேட்டா!

கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளில் லேக்டோஸ் குறைவாக இருக்கும்.

பொதுவாக, இரண்டு சதவிகிதம் வரை லேக்டோஸ் இருந்தால் பாதிப்பு அவ்வளவாகத் தெரிவதில்லை. இதற்கு மேல் லேக்டோஸ் இருந்தால் மட்டுமே பாதிப்பு ஆரம்பிக்கும்.

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியக் கண்டங்களில் உள்ள மக்களிடம் இந்தப் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

இந்தியாவில், வட மாநில மக்களைவிட தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மக்களிடம் இது அதிகம் காணப்படுகிறது.