
மனமே நீ மாறிவிடு - 15

மாவு அரைக்கப் போன பையன் திருடன் போல மெள்ளப் பதுங்கியபடி அடி எடுத்து நடந்துகொண்டிருந்தான். வழி மறித்த பெரியவர் காரணம் கேட்க, “அம்மா, மாவை நைஸா அரைச்சிட்டு வரச்சொன்னாங்க... அதான்” என்றானாம்.
இதைப் படித்துவிட்டு மொக்கை ஜோக் என்கிறீர்களா அல்லது ஒரு விநாடி உங்களை மறந்து சிரிக்கிறீர்களா? எதுவாகினும், அது உங்கள் மனவளத்தைப் பிரதிபலிக்கிறது என்பதுதான் உண்மை.
நகைச்சுவை உணர்வு மிக நுட்பமானது. சிரிக்கத் தெரிந்தவர்கள் வாழத் தெரிந்தவர்கள். எவற்றையும் நகைச்சுவையாகப் பார்க்கும்தன்மை வாழ்வின் அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் அளிக்கக்கூடியது. நகைச்சுவையால், மனமும் உடலும் இலகுவாகின்றன. நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் மனநலத்தைப் பேணுவது எளிது. மனஉளைச்சலை சமாளிப்பது எளிது. துயரங்களில் இருந்து மீள்வது எளிது.
காரணமே இல்லாமல் சிரிப்பவர்களை என்ன சொல்ல? அவர்கள் காரணம் நமக்குப் புரியவில்லை என்பதுதான் உண்மை. “இதில் சிரிக்க என்ன இருக்கு?” என்று யாராவது சொன்னால், அவர்கள் மனம் அங்கு இறுகிப்போயிருக்கிறது என்றுதான் பொருள். சிரிப்பவர்கள் பிறரைச் சிரிக்கவைக்கத் தெரிந்தவர்கள். பிறரை மகிழ்விப்பதைவிட மிகப்பெரும் மனித சேவை எது?
நண்பர் ஒரு பெரும் வாழ்க்கைத் துயரை விவரித்துக்கொண்டிருந்தார். திடீரென டி.வியில் ‘மைக்கேல் மதன காம ராஜன்’ படம் வந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதிர அதிர சிரிக்க ஆரம்பித்தார். நானும் அவரும் இந்தப் படத்தை ஆறு முறையாவது பார்த்திருப்போம். முதல் முறை பார்ப்பது போல ரசித்துப் பார்த்தோம். காட்சிகள் முடிந்தும் (ஆனந்தக்) கண்ணீரை துடைத்துக்கொண்டு “எங்கிருந்து எங்கே வந்திட்டோம் பாருங்க” என்றார் சிரித்தவாறு.
பிறரைப் பார்த்துச் சிரிப்பதைவிட தன்னைப் பார்த்துச் சிரிப்பது மிகப்பெரிய ஆளுமைகளுக்கே சாத்தியம். உலகின் அனைத்து சிறந்த நகைச்சுவையாளர்களும் தன்னையே கிண்டலடித்துக்கொள்பவர்கள்தான். தன் தவறை ஏற்று, அதை எந்தத் தற்காப்பு உணர்வும் இன்றி ரசமாகப் பகிர்ந்துகொள்ளும் மனிதர்களை யாருக்குத்தான் பிடிக்காது? இதை, திரையில் மட்டும் அல்ல. நிஜ வாழ்க்கையிலும் பார்க்கிறோம். சிலரை எல்லோருக்கும் பிடிக்கிறது என்றால் அதற்கு அவர்களின் நகைச்சுவை உணர்வுதான் முக்கியக் காரணமாக இருக்கும்.

எவ்வளவு அழகான முகமாக இருந்தால் என்ன, சிரிக்காத முகத்தில் என்ன களை இருக்கும்? எல்லாம் தெரிந்தும் நகைச்சுவை உணர்வைத் தொலைத்துவருகிறோம். இயந்தரகதிக்கு வாழ்வைத் தள்ளி, வாழ்வின் இருண்ட பக்கங்களைப் பூதக் கண்ணாடி வைத்துப் பார்க்கிறோம். தகவல் அறிவு என்று எல்லா குப்பைகளையும் தலைக்குள் கொட்டி, நிறையத் தெரிந்துகொண்டு நிறையப் பயப்படுகிறோம். இயல்புத்தன்மையையும் வாழ்க்கையை அதன் போக்கில் பார்க்கும் தன்மையையும் இழந்து, நோயாளிகளாகிவருகிறோம்.
வசதிகள் பொருட்களைக் குவிக்கும் அளவுக்கு நல்ல உணர்வுகளைக் குவிக்கிறதா என்று பாருங்கள். மனிதர்களைத் தனிமைப்படுத்தி மனஉளைச்சல்களுக்கு ஆளாக்குகிறது. நான் சொல்வதை நம்ப முடியவில்லை என்றால், ஒரு சின்ன ஆய்வு நடத்துங்கள். ஊரைச் சுற்றிலும் யார் யாரெல்லாம் வாய்விட்டு சிரிக்கிறார்கள் என்று ஒரு நாள் முழுவதும் பட்டியல் போடுங்கள். அவர்கள் வயது, தொழில், வசதி என்று எல்லாவற்றையும் குறித்துக்கொள்ளுங்கள். காரில் போகாமல் எல்லா மக்களையும் காணும் வகையில் பொது வாகனத்தில் செல்லுங்கள். நிறைய உண்மைகள் புரியும். நான் பார்த்தமட்டில் மாணவர்கள், தொழிலாளர்கள், செல்போனுக்கு வசதி இல்லாத பள்ளி மாணவர்கள், குப்பத்தில் வசிப்பவர்கள், இடநெருக்கடியில் வாழ்பவர்கள் எல்லாம் நகைச்சுவையை அதிகம் பகிர்ந்துகொள்வார்கள். கூர்ந்து நோக்கினால் ஒன்று புரியும். இவர்கள், வாழ்க்கையை சகல இன்னல்களுடனும் ஏற்றுக்கொண்டுள்ளனர். சின்ன விஷயங்களை ரசிக்கக் கற்றுக்கொண்டுள்ளனர்.
ஆயுள் கூடிக்கொண்டே போகிறது. வசதிகள் பெருகப் பெருக நோய்களும் பெருகிக்கொண்டே வருகின்றன. தனிமையும் மனஉளைச்சலும்தான் மனித இனம் இன்று சந்திக்கும் பெரும் பிணிகள். அதற்கு நகைச்சுவையைவிட சிறந்த மருந்து எது? இன்று எதையும் உடனடியாகத் தருவித்துக்கொள்ள எல்லா வசதிகளும் உள்ளன. ஆனால், மகிழ்ச்சியாக வாழ வழி தெரியாமல் தவிக்கிறான் மனிதன். காரணம், உடனடி சுகங்களில் பெரிய மகிழ்ச்சி நிலைப்பது இல்லை. மாறாக, எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் மிஞ்சுகின்றன. வாழ்க்கையை அதன் போக்கில் ரசித்து, நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை சுவாரசியமாகப் பார்க்கத் தெரிந்தாலே போதும். நம்பிக்கையும் நல்ல உணர்வுகளும் தானாக வந்து சேரும்.
நல்ல நகைச்சுவை என்பது எது? உங்களை சகலத்தையும் மறக்கச்செய்து, ஒரு நொடியாவது வேறு உலகத்துக்குக் கடத்திச்செல்வது எதுவோ அதுதான். பார்த்த படத்தைப் பாருங்கள்; பழகிய நண்பர்களைப் பாருங்கள்; பழைய விசயங்களை அசைபோடுங்கள்; சிரிக்க முடியும் அனைத்துத் தருணங்களையும் தவறவிடாதீர்கள். வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொள்வது நல்லது!
- மாறுவோம்!
இன்று உலகில் எல்லோருக்கும் தேவைப்படும் உளவியல் திறன் ஒன்றுதான்: எது தன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் என்று தெரிந்து, அதை வாழ்வில் இணைத்துக் கொள்வதுதான்.