Published:Updated:

மனமே நீ மாறிவிடு - 16

மனமே நீ மாறிவிடு - 16
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நீ மாறிவிடு - 16

மனமே நீ மாறிவிடு - 16

மனமே நீ மாறிவிடு - 16

ணவு என்பது உடலை மட்டும் பேண அல்ல. உள்ளத்தையும்தான். எல்லா மாற்றங்களும் உணவில்தான் தொடங்குகின்றன. எல்லா மதங்களும் உணவுக் கட்டுப்பாடுகளை வலியுறுத்துகின்றன. சில நாட்கள், சில பொழுதுகள் கண்டிப்பாக உண்ணாநோன்பு பரிந்துரைக்கப்படுகிறது. சில உணவுகள் தவிர்க்கப்படுகின்றன. சில உணவுகள் அவசியமாகின்றன. எதை உண்பது, உண்ணக் கூடாது என்பதில் வேண்டுமானால் பேதங்கள் இருக்கலாம். ஆனால், விரதம் இருப்பதிலும், பிறருக்குப் பகிர்ந்து அளித்து உண்ண வேண்டும் என்பதிலும், எல்லா மதங்களிலும் ஒற்றுமை உள்ளது. இன்று, மதத்தைவிட மருத்துவமே உணவு பற்றி அதிகம் பேசுகிறது. உணவு பற்றி நிறைய பேசவும், எழுதவும், விவாதிக்கவும் செய்கிறோம். ஆனால், உணவு பற்றிய குறைகளும் குழப்பங்களும் இல்லாத குடும்பங்களே இல்லை என்று சொல்லலாம்.

‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற ரீதியில் ஒரு வயதுச் சிறுகுழந்தைக்கே நியூட்ரீஷியன் அட்வைஸ் பெறாமல் உணவு தருவது இல்லை அம்மாக்கள். கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் என்று எல்லா உணவுகளையும் பிரித்து அலசுகிறோம். புதிது புதிதாகப் படித்துவிட்டு, புதிது புதிதாகப் பயப்படுகிறோம்.

வளர்ந்த நாடுகளில் உடல் பருமன் பெரும் வியாதி. அனெரெக்ஸியா வந்து சாப்பிட்டதை வாந்தி எடுத்து, பட்டினியில் உடல் இளைக்கும் வியாதி இன்னொரு புறம். இவை நம் தேசத்திலும் பெருகிவருவது கவலைக்குரியது.

மனமே நீ மாறிவிடு - 16

இவற்றை முதலில், ஈட்டிங் டிஸ்ஆர்டர் (Eating disorder) என்றுதான் சிகிச்சை கொடுத்துவந்தார்கள். இன்று, உளவியலாளர்கள் இவற்றை ‘பாடி இமேஜ் டிஸ்ஆர்டர்’ (Body Image disorder) என்கிறார்கள். அதாவது, சுயமதிப்புக் குறைவு என்பதால், இவை வருவதைக் கண்டுபிடித்து மனசிகிச்சை கொடுத்துவருகிறார்கள்.

நீங்கள் உண்ணும் உணவை, ருசி கருதியோ தேவை கருதியோ மட்டும் அல்ல... உங்கள் மனநிலை கருதியும்தான் உண்கிறீர்கள். அதனால்தான், உங்கள் உணவுப்பழக்கமும் செரிமானமும் உங்கள் மனநலம் சார்ந்தவையாக இருக்கின்றன.

எல்லாவற்றையும் சுலபமாக உண்ண முடிந்து, நன்கு செரிமானம் ஆகி, இயல்பாக அவை வெளியேற்றப்பட்டால் மனம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். உணவுகளில் அதீத விருப்பு, வெறுப்பு, செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல் போன்றவை இருந்தால், உடல் நலம் மட்டும் அல்ல ஒட்டுமொத்த நலமும் பாதிக்கப்பட்டுள்ளது என்று அறியலாம்.

சாலை ஓரத்தில் மண்ணில் விளையாடும் கட்டடத் தொழிலாளியின் பிள்ளைக்கு, சாலை ஓரக் கடையின் இட்லியும் டீயும் எதுவும் செய்வது இல்லை. ஆனால், வசதி படைத்த பிள்ளைகளுக்கு ஆயிரம் ஒவ்வாமைகள். ஊர் ஊராய் சாப்பிடுபவர்களுக்கு எல்லாம் செரிக்கிறது. ஆனால், தண்ணீருக்குப் பதில் வெந்நீராய் குடிப்பவருக்கு ‘ஃபுட் பாய்ஸன்’ ஏற்படுகிறது. இதற்குக் காரணம் நம் மன இயல்புதான்.

உணவு என்பது அனுபவங்களை உட்கொள்வதன் குறியீடு என்று கொண்டால், செரிமானம் என்பது ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைக் குறிக்கிறது. மலம் வெளியேறுவது பழையதைக் கழித்து, புது அனுபவத்துக்குத் தயாராவது. பசி என்பது வாழ்வின் ஊக்க சக்தி.

எந்த சிக்கலான உணர்வு ஏற்பட்டாலும் முதலில் தடைபடுவது உணவுதான். நடப்பவற்றை ஏற்கும்போது செரிமானம் நன்றாக நடக்கிறது. பழையதை மறக்காவிட்டால் மலம் வெளியேறும் பாதையில் பிரச்னை ஏற்படுகிறது. கோபம் என்றால், உணவுக்குழாயில் கட்டி வருகிறது. இதுதான், உணவு பற்றிய உளவியல் பகுப்பாய்வு.

மனமே நீ மாறிவிடு - 16

நாம் உண்ணும்போது உள்ளத்தின் உணர்வையும் உணவுடன் கலந்தே உண்கிறோம். எனவே, பயமோ, பதற்றமோ, கோபமோ ஏற்படும்போது உணவு உண்பதைத் தவிர்க்கலாம்.  உண்ணும்போது மனதுக்கு இதமான, மெல்லிய இசை கேட்பது நல்லது. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு உண்பது கேடானது.

உணவு கிடைத்ததற்கு, உண்ண முடிவதற்கு நன்றி சொல்லிவிட்டு உண்ணுங்கள். கிடைத்ததில் சிறந்த உணவை உட்கொள்ளுங்கள். உடல் உழைப்புக்கு ஏற்ற உணவை உண்ணுங்கள். மெளனமாக உண்பது நல்லது. சூரிய உதயத்தில் முதல் உணவும் சூரிய அஸ்தமனத்தில் கடைசி உணவும் உண்ணுதல் உத்தமம். முடியாவிட்டால், கடைசி உணவு, அளவு குறைந்ததாய் இருக்கட்டும்.

உணவைப் பழிக்க வேண்டாம். நீங்கள் ஒதுக்கும் உணவில் சில மனிதர்களும் பல நூறு ஜீவராசிகளும் பசியாறும். உணர்ந்து உண்ணுதல் பேரானந்தம்!

- மாறுவோம்!

ணவை பழிக்க வேண்டாம். நீங்கள் ஒதுக்கும் உணவில் சில மனிதர்களும் பல நூறு ஜீவராசிகளும் பசியாறும்.