
பூச்சிக்கடி ஒவ்வாமை

பூச்சி கடித்தால் அலர்ஜி ஆகும் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். நம் ஊரில் எறும்புக் கடிக்கும் தேனி கடிப்பதற்கும் யாரும் பயப்படுவது இல்லை. ஆனால், அமெரிக்காவில் இந்த இரண்டுக்கும் ரொம்பவே பயப்படுகிறார்கள். ‘டெக்சாஸ் ஃபயர் ஆன்ட்’ (Texas fire ant) எனும் எறும்பும், ‘ஹைமினோப்டெரா’ (Hymenoptera) எனும் தேனியும் கொட்டியதால் அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டு பலர் இறந்தே போயிருக்கின்றனர். இந்தியாவிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன. கேரளாவில் ஒரு வகை ‘நெருப்பு எறும்பு’ இருக்கிறது. இது கடித்துவிட்டால், மரணத்தின் வாசல் வரை சென்றுவிட்டுத்தான் திரும்ப வேண்டும். எனவே, பூச்சிக்கடிதானே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.
அலர்ஜி ஆகும் பூச்சிகள்
எறும்பு, கொசு, தேனி, குளவி, சிலந்தி, வண்டு, உண்ணி, மணல் ஈ, கரப்பான், பாச்சான், பட்டாம் பூச்சி, வீட்டு ஈ, முடப்பாச்சை போன்ற பூச்சிகள் கடித்தாலும், மேலே பட்டாலும் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். பொதுவாக, தேனி வளர்ப்போர், தோட்ட வேலையாட்கள், காட்டில் வேலை செய்வோர், கூப்புத் தொழிலாளிகள், வன அதிகாரிகள், மலைவாழ் மக்கள் போன்றோருக்குப் பூச்சிக்கடி பாதிப்பு அதிகம்.

காரணம் என்ன?
பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை உள்ள ஒரு வகைப் புரதம் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அலர்ஜியைத் தூண்டுகிறது. இதற்கு எதிராக ‘இம்யூனோகுளோபுலின் இ’ (IgE) எனும் எதிர்ப் புரதம் நம்முடைய ரத்தத்தில் உருவாகிறது. இது, பூச்சியின் நச்சுப் புரதத்தை உடலில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறது. இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’ (Histamine), ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) வேதிப்பொருட்களை வெளியிடுகின்றன. இவை, ரத்தக் குழாய்களை விரிவடையச்செய்து, அங்கு உள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால் அரிப்பு, தடிப்பு, தோல் சிவந்து வீங்குவது, வாந்தி. மயக்கம் போன்றவை ஏற்படுகின்றன.
அறிகுறிகள் என்னென்ன?
பூச்சிக்கடியால் அலர்ஜி ஆகும்போது, கடித்த இடத்தில் மூன்றுவித அறிகுறிகள் வெளிப்படும். முதல் வகையில், தோல் அரிக்கும், சிவக்கும், தடிக்கும், லேசாக வலிக்கும், காய்ச்சல் வரும். இவை, ஒரு சில தினங்களே காணப்படும். இரண்டாவது வகையில், அரிப்பும் வீக்கமும் கடுமையாக இருக்கும். உதாரணத்துக்கு, மணிக்கட்டில் பூச்சி கடித்தால், கை முழுவதும் வீங்கிவிடும். கையைத் தூக்க முடியாத அளவுக்கு வலி இருக்கும். கடிபட்ட இடம் மட்டும் அல்லாமல், கண் இமைகள், காது மடல்கள், உதடு, பிறப்பு உறுப்புப் பகுதியில் நீர் கோத்த வீக்கங்கள் காணப்படும். இவை, ஒரு வாரம் வரை நீடிக்கும்.
மூன்றாவது வகையில், கடுமையான தலைவலி ஏற்படும். வயிறு வலிக்கும், வாந்தி வரும், தொண்டையை அடைக்கும், எச்சில்கூட விழுங்க முடியாது, மூச்சு விடுவது சிரமமாக இருக்கும், படபடப்பாக இருக்கும், மயக்கம் வரும். இதுதான் மோசமான நிலை. உடனே கவனிக்க வேண்டும். இல்லை என்றால், பாதிக்கப்பட்டவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம்.
ஏற்கெனவே ஆஸ்துமா, எக்சீமா, மருந்து அலர்ஜி உள்ளவர்களுக்கு இந்த மாதிரியான மோசமான விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
என்ன முதலுதவி?
லேசான அரிப்பு, தடிப்புகளுக்கு காலமைன் லோஷன் அல்லது ஸ்டீராய்டு கலந்த கிரீமைத் தடவலாம். வீக்கத்தைத் தேய்க்கக் கூடாது. வீக்கம் கடுமையாக இருந்தால், கடித்த முனையில் குண்டூசி கொண்டு குத்தி, நச்சை அகற்ற முயற்சிக்கலாம். உதாரணமாக, குளவி கொட்டிய இடத்தில் அதன் கொடுக்கு சில சமயம் சருமத்தில் புதைந்து இருக்கலாம். அதனை அகற்ற வேண்டும். கடித்த இடத்தில் மோதிரம், வளையல், மெட்டி, பிரேஸ்லெட் போன்றவை இருந்தால்அகற்றிவிட வேண்டும். கடிபட்ட இடத்தைச் சோப்பு போட்டுக் கழுவிச் சுத்தம்செய்து, ஈரத்துணியால் இறுக்கமாகக் கட்ட வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை துணிக்கட்டைத் தளர்த்தி, மீண்டும் இறுக்கிக் கட்ட வேண்டும். ஐஸ்கட்டி ஒத்தடமும் தரலாம். ஐஸ்கட்டியை அப்படியே கடித்த இடத்தின் மேல் வைக்கக் கூடாது. அதை, லேசான பருத்தித் துணியில் சுற்றி, கடிபட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். மருத்துவ சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

என்ன சிகிச்சை?
அலர்ஜிக்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு சிகிச்சை தரப்படுவது நடைமுறை. கடித்த பூச்சியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று காண் பித்தால், பூச்சியின் விஷத்தன்மையைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப சிகிச்சையைத் தர முடியும். ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பூச்சிகள் கடித்துவிட்டால்தான் ஆபத்து அதிகம். அப்போது, எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் செல்கிறோமோ, அவ்வளவு விரைவாக ஆபத்தையும் தவிர்க்கலாம்.
எறும்பு போன்ற சாதாரணப் பூச்சி கடித்தாலும் உயிருக்கு ஆபத்து நேரும் வகையில் மோசமாக அலர்ஜி ஆகிறது என்றால், ‘வீனம் இம்யுனோதெரப்பி’ தரப்படும். இதுபோல், பூச்சிக்கடியால் அலர்ஜி ஆகும் வாய்ப்பு அதிகம் உள்ள நபர்களுக்கும் இதை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இதை மூன்றில் இருந்து ஐந்து வருடங்களுக்குத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதற்கு செலவு சிறிது அதிகம் ஆகும். சருமப் பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனை செய்து, ‘இம்யூனோகுளோபுலின் இ’ அளவைத் தெரிந்து, அதற்கு ஏற்ப தடுப்பு மருந்துகள் தரப்படுவதும் வழக்கத்தில் உள்ளது.
- எதிர்வினை தொடரும்
விஷக்கடிகளைத் தவிர்க்க...
பூச்சிகள் அதிகம் வாழும் தோட்டம், வயல், காடு போன்ற இடங்களுக்குச் செல்லும்போது, முழுக்கைச் சட்டை, முழுக்கால் பேன்ட் அணிந்து செல்வது பாதுகாப்பானது. முகத்துக்கு மாஸ்க் அணிந்துகொள்ளலாம்.
பூச்சிகளைக் கவரக்கூடிய அடர் வண்ணத்திலான ஆடைகளைத் தவிர்க்கவும்.
வாசனைத் திரவியங்களை போட்டுக்கொண்டு பூச்சிகள் இருக்கும் இடத்துக்குப் போகாதீர்கள்.
தகுந்த காலணிகளை அணிந்து கொண்டு வெளியில் செல்லுங்கள். குறிப்பாக, புல் தரைகளில் வெறுங்காலோடு நடக்காதீர்கள்.
அழுகிய உணவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள்.
குளியல் அறையை அடிக்கடி கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
குளவிக் கூடுகளையோ, தேன் கூட்டையோ தேவை இல்லாமல் கலைக்க வேண்டாம்.
துணிமணிகள், கை உறைகள், கால் உறைகள், ஷூ போன்றவற்றை நன்கு உதறிவிட்டு அணிய வேண்டும்.
வீட்டுச் சுவர்களில் பூச்சிகளுக்கான எதிர் மருந்துகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் பூசிக்கொள்ள வேண்டும்.
பூச்சிகளின் உலகம்!
நாட்டு ஓடு வேய்ந்த வீடுகளில் குளவி, தேனி, தேள், பூரான் போன்றவற்றின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
ஈரமும் இருட்டும் நிறைந்த அறைகளில் கரப்பான் பூச்சி, பூரான் போன்றவை இருக்க வாய்ப்புகள் அதிகம்.
வீட்டுத் தோட்டங்களிலும் பூந்தோட்டங்களிலும் பழ மரங்களிலும் குளவியும் தேனியும் கூடு கட்டும்.
தோட்டங்களில் கற்களுக்கு அடியில் தேள்கள், பூரான் போன்றவை இருக்க வாய்ப்பு உண்டு. ஆகவே, கற்களைப் புரட்டும்போது கவனம் தேவை.
அலர்ஜி டேட்டா!
ஜிம்பாவே நாட்டில்தான் பூச்சிக்கடியால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம்.
உலக மக்கள்தொகையில் 25 சதவிகிதம் பேருக்குப் பூச்சிக்கடி பாதிப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில் தென்னை மரம், பனை மரங்களில் வசிக்கும் வண்டுகள் அதிக விஷம் கொண்டவை.
பூச்சிக்கடியால் அலர்ஜி ஆகும் 100-ல் எட்டு பேருக்கு மூன்றாம் வகை அலர்ஜியும், 26 பேருக்கு இரண்டாம் வகை அலர்ஜியும், மீதிப் பேருக்கு முதல் வகை அலர்ஜியும் ஏற்படுகின்றன.