Published:Updated:

மனமே நீ மாறிவிடு - 17

மனமே நீ மாறிவிடு - 17
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நீ மாறிவிடு - 17

மனமே நீ மாறிவிடு - 17

மனமே நீ மாறிவிடு - 17

டல் நலனைப் பேணுவதில் எத்தனையோ வகைகள் உள்ளன. “ஒழுங்காக மெடிக்கல் செக்அப் செய்ய வேண்டும்”; “சத்தான உணவு சாப்பிட வேண்டும்”; “உடற்பயிற்சி செய்ய வேண்டும்”; “சுத்தமாக இருக்க வேண்டும்”; “அறிகுறிகள் வந்தாலே டாக்டரைப் பார்க்க வேண்டும்...” என வரிசையாக சில நடைமுறைகள் வைத்திருக்கிறோம். 

ஒரு பிரச்னை என்றால், அது சார்ந்த சிறப்பு நிபுணரைப் பார்க்கிறோம். பிறகு, அவர் வேறு ஒரு துறைக்கு பரிந்துரைத்தால், அதையும் பார்க்கிறோம். பின்பு, மாற்று சிகிச்சைகள் பற்றி யோசிக்கிறோம். முதலும் கடைசியும் அலோபதிதான். இடையில், ‘குணம் தெரிகிறது’ என்று வேறு சிலவற்றை முயற்சிக்கிறோம். ஓர் இடத்தில் தெரிவிக்காமல், வேறொரு இடத்தில் சிகிச்சை மேற்கொள்கிறோம். நோயின் வீரியமும் அது குறித்த நமது பயமுமே நம் தேடல்களை நிர்ணயிக்கின்றன.

அலோபதி ஒரு இடத்தில் நிற்கும். “உடல்ல ஒண்ணுமே இல்லை. மனசுலதான் ஸ்ட்ரெஸ்” என்று சொல்லி, வாழ்வில் தெரியும் காரணங்களை வைத்து, ‘இதனாலா?’ என்று கேட்பார்கள்.  பெரும்பாலானவர்கள், டாக்டரின் குறுகிய நேர விசாரணையில் சரியாகப் பதில் சொல்வது இல்லை. தவிர, நோய் அவதியில் இருப்பவருக்குச் சரியாகச் சிந்தித்துப் பதில் சொல்லவும் முடியாது. இதனால், சில மருத்துவர்கள் பதற்றத்துக்கு மருந்து எழுதித் தருவது உண்டு. மனநல மருத்துவர்களிடம் அனுப்புபவர்களும் இருக்கிறார்கள்.

தீவிர மனநோய் இல்லையென்கிற பட்சத்தில், நம்மில் பலருக்கு சைக்கியாட்ரிஸ்ட்டுகளிடம் போகப்பிடிப்பது இல்லை. கவுன்சலிங் செய்பவர் பற்றிய தர நிர்ணயமும் தெளிவும் குறைவு. உடலில் எந்தக் கோளாறும் இல்லை என்றாலும், பிரச்னை உடலின் மூலம்தான் தெரிவிக்கப்படுகிறது. இதை, எப்படித் தீர்ப்பது என்று தெரிவது இல்லை.

மனமே நீ மாறிவிடு - 17

தீராப் பிரச்னையை, வேறு வழியின்றி, “இதை ஒன்றும் செய்ய முடியாது. அவ்வப்போது வந்து போகும்!” என்று தன்னோடு பிணைத்துக்கொண்டு சகித்துச் செல்பவர்களும் இருக்கிறார்கள்.இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், உடலை வெறும் பௌதிகப் பொருளாகக் கருதி, ‘உடலைச் சரிசெய்தால் எல்லாம் சரியாகிவிடும்’ என்கிற அரைகுறை நம்பிக்கைதான்.

உடலில் பிரச்னை என்றால், என்ன என்று கண்டுபிடித்துச் சொல்லிவிடலாம். ஆனால், உடலை இயக்கும் மனதைத் துல்லியமாக அளக்க முடியாது. மனங்களுக்கிடையேயான வேறுபாடுகளின் பாதிப்பை உணரலாம். ஆனால், அந்த வேறுபாடுகளை அளவிடுதல் கடினம். காரணம், மன மாறுதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. மனம் உடலைவிட அதிவேகமாக மாறும் தன்மை உடையது. அதனால்தான், மன பாதிப்புகளை அறிய முடிகிறதே தவிர, மன இயக்கங்களைத் துல்லியமாக அறிய முடிவது இல்லை.

எனவேதான் மனதையும், ஆன்மாவையும், வாழ்க்கை முறையையும் கணக்கிடாமல், வெறுமனே உறுப்பை மட்டும் சரிசெய்யும் சிகிச்சைகள் முழுமை இல்லாதவை என்கிறோம். நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அதை வெறும் உடல் சம்பந்தப்பட்ட பிரச்னையாகப் பார்க்காமல், நமது மனமும் அந்தப் பிரச்னைக்கு ஒரு காரணமாக இருக்க முடியும் என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.

ஒவ்வொரு உணர்வு நிலையின்போதும் உடல் எப்படி மாறுகிறது என்று கவனியுங்கள். கோபம் வருகையில், உடல் படபடக்கிறதா? பயம் வந்தால் கை கால் நடுங்குகின்றனவா? மிதமிஞ்சிய மகிழ்ச்சி என்றால் என்னவாகிறது? அமைதியாக உள்ளபோது உடலின் தன்மை என்ன? இதை ஒரு அடிப்படைத் தகவல்போலக் குறித்துவையுங்கள்.

ஒவ்வொரு நபருடன் பழுகும்போதும் நம் உடல் ஒவ்வொரு விதமாக மாறுகிறது. அதேபோல், ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு விதமாக மாறுகிறது. இந்த வேறுபாடுகளை எந்த அளவு விரிவாகவும் துல்லியமாகவும் உங்களால் உணர முடிகிறது என்று பாருங்கள். குறிப்பாக, தீவிர பாதிப்புகள் என்ன என்று பட்டியல் இடுங்கள்.

தொண்டை காய்கிறது; வயிறு பிசைகிறது; தோல் நிறம் மாறுகிறது; தலை பாரமாகிறது; தசைகள் இறுகுகின்றன; குரல் நடுங்குகிறது; பார்வை மங்குகிறது; மார்பு துடிக்கிறது; ரோமக் கால்கள் சிலிர்த்து நிற்கின்றன.

இப்படி, உங்களுக்கு ஏற்படும் எல்லா உணர்வுகளுக்கும், சூழ்நிலைகளுக்கும்  உங்கள் உடலில் உண்டாகும் மாற்றங்களைப் பற்றி உங்களால் தெளிவாகப் புரிந்துகொண்டு விவரிக்க முடியுமா? ஆம் என்றால், இது முதல் நிலை. இதற்கு அடுத்த நிலையில் எந்த எண்ணம், எந்த உடல் நிலையோடு தொடர்புடையது என்று அறிவது. இவை, மனிதருக்கு மனிதர் வேறுபடும். பொது விதி கிடையாது.

மனதின் செயல்பாடுகள்தான் உடல்மொழியாக வெளிப்படுகிறது என்கிற அறிவுதான் நமது ஆரோக்கியம் பற்றிய மொத்த புரிதலின் முதல் படி! அதைத் தெளிவாக உணர்ந்தாலே, நல்ல மாற்றங்களுக்கு நாம் தயாராகி விடுவோம்.

- மாறுவோம்!