
உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 16

‘தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்பார்கள். அந்த அளவுக்குத் தலைவலிதான் தலையாய வலி! தலைவலி வருவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதுவும், அனைவருக்குமே வேலைப்பளு அதிகம் உள்ள இந்தக் காலகட்டத்தில் கேட்க வேண்டுமா? டென்ஷன் காரணமாகவே பெரும்பாலானோருக்குத் தலைவலி வந்துவிடுகிறது. இந்த இதழில் தலைவலியைப் பற்றிப் பார்ப்போம்.
பலருக்கு எப்போதாவது ஒருமுறை தலைவலி வரும். சிலருக்கு வாரத்துக்கு இரண்டு, மூன்று நாட்கள் தலைவலி வருவது உண்டு. ஒருசிலருக்கு் சாதாரண தலைவலியாக இருக்கும். ஒரு காபி குடித்தாலே சரியாகிவிடும். சிலருக்கு மிகத் தீவிரமாக, வார்த்தையால் விவரிக்கவே முடியாத அளவுக்குக் கடுமையான தலைவலி ஏற்படலாம். என்றைக்காவது ஒருநாள் வரக்கூடிய தலைவலிதான் என்றால் கவலைப்படத் தேவை இல்லை. அடிக்கடி வந்தால், கட்டாயம் சிகிச்சை பெற வேண்டும். பலரும் அலட்சியமாக இருந்துவிட்டு, பிரச்னை முற்றிய நிலையில்தான் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
சரி, ‘மூளைக்குதான் வலி என்ற உணர்வே இல்லை என்று சொல்லியிருந்தீர்களே, பின்னர் எப்படி தலைவலி ஏற்படுகிறது?’ எனக் கேட்கலாம். வலி என்ற உணர்வு, மூளையில் உணரக்கூடியது. மூளைக்கு அடியில் இருக்கும் டிரை ஜெமினல் நியூரான்கள்தான் வலியை மூளைக்குத் தெரியப்படுத்துகின்றன. அதன்பிறகுதான் வலி உணரப்படும். மூளைக்குள் என்ன செய்தாலும் வலியை உணராத மூளை, தன்னைச் சுற்றி இருக்கும் உறை, தசைகள், சைனஸ் அறை, கண், காது, இந்தப் பகுதிகளில் உள்ள நரம்புகள், ரத்தக்குழாய்கள் என எதில் பிரச்னை ஏற்பட்டாலும் வலியை உணர்வது இதனால்தான்.
இந்த வலி, மெல்லியதாக குத்துவதுபோன்று மிதமானதாக விட்டுவிட்டு வரக்கூடியதாக இருக்கலாம். தலைவலி ஏற்பட நூற்றுக்கணக்கான காரணங்கள் இருக்கின்றன. இதனால்தான், தலைவலி என்று வரக்கூடிய அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிப்பது இல்லை. ஏன், எதனால், எங்கே எனக் கண்டறிந்து, அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தலைவலியை முதல் நிலை, இரண்டாம் நிலை, இதர வகை என மூன்று வகையாகப் பிரிக்கின்றனர். இன்றைக்கு அதிகம்பேர் பாதிக்கப்படுவது டென்ஷன் தலைவலியால்தான். இது, முதல் நிலை தலைவலியில் வருகிறது. இது, ஆண்களைவிட பெண்களுக்கே அதிக அளவில் ஏற்படுகிறது. 20-ல் ஒருவருக்கு இந்தப் பிரச்னை ஏற்படுவதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. ‘மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத்தலைவலி இந்த வகையில் முக்கியமானது. இது, பெரியவர்களைவிட குழந்தைகளுக்கே அதிகம் ஏற்படுகிறது. பூப்பெய்துதலுக்குப் பிறகு, பெண்களுக்கே இந்த வகை தலைவலி அதிக அளவில் ஏற்படுகிறது என்கிறது. இதனால், இதைப் ‘பெண்களுக்கான தலைவலி’ என்றும் சொல்வார்கள்.
ஆண்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு வகை தலைவலி உள்ளது. இதை ‘கிளஸ்டர் தலைவலி’ என்பார்கள். இது, அரிய வகை தலைவலியும்கூட! வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில்கூட பாடாய்படுத்தும். காலை 8 மணிக்கு தலைவலி வரும் என்றால், தினசரி காலை 8 மணிக்குக் கடமை தவறாது வந்துவிடும். இந்த வகை தலைவலி எதனால் வருகிறது எனக் கண்டறியப்படவில்லை. இருப்பினும், ஹிஸ்டமின் மற்றும் செரட்டோனின் உள்ளிட்ட ரசாயனங்கள் மூளையில் திடீரென சுரப்பதன் காரணமாக வரலாம் எனக் கருதப்படுகிறது. நம் உடலின் உயிரியல் கடிகாரமான ஹைபோ தாலமஸ்தான் இதற்குக் காரணம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விபத்து, நோய்த்தொற்று, கட்டி, பல்வலி, சைனஸ், கழுத்துவலி, காதுப் பிரச்னை காரணமாக வரக்கூடியது இரண்டாம் நிலை தலைவலி. க்ரேனியல் நியூரால்ஜியா பிரச்னைகளால் வரக்கூடியது மூன்றாவது வகை. தலையில் உள்ள உறுப்புகளின் இயக்கத்துக்கு 12 ஜோடி க்ரேனியல் நரம்புகள் உள்ளன எனச் சொல்லியிருந்தேன். இந்த நரம்புகளில் ஏற்படக்கூடிய பாதிப்பு காரணமாக வரக்கூடியது எல்லாம் இதர வகை தலைவலிகள்.
தலைவலியுடன் காய்ச்சல், கழுத்தில் இறுக்கம், தளர்ச்சி, உடல் செயல் இழந்த உணர்வு, இயக்கத் திறனில் பாதிப்பு, வலிப்பு, பேச்சில் தடுமாற்றம், நிற்பதில் தடுமாற்றம் போன்ற பாதிப்புகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
சாதாரண தலைவலி என்றால், எப்போது வருகிறது, எவ்வளவு நேரம் இருக்கிறது, எவ்வளவு இடைவெளியில் வருகிறது, பாதிப்பு எவ்வளவு, வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றனவா என்று மருத்துவ வரலாறு கேட்கப்படும். தீவிர பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக சந்தேகிக் கப்பட்டால், சி.டி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்குப் பரிந்துரைக்கப்படும்.
மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலமாகவே 50 சதவிகிதப் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். மூளைக்கட்டி, நீர்கோத்தல் உள்ளிட்ட பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், அதற்குரிய சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் தலைவலியைத் தவிர்க்க முடியும்.
- அலசுவோம்!
க்ரேனியல் நரம்புகள்
சில ஆண்டுகளுக்கு முன்னர், பாலிவுட் திரைப்பட நடிகர் சல்மான் கானுக்கு மூளையில் ஒரு சிறிய அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. க்ரேனியல் நரம்பில் ஐந்தாவது ஜோடியான ட்ரைஜெமினல் நரம்பில்தான் அவருக்குப் பிரச்னை. தாடை அசைவுக்கும் உணவை மெல்லுவதற்கும் இந்த நரம்புதான் உதவுகிறது. சல்மான் கானுக்கு இந்த நரம்பில் சிறிய ரத்தக்குழாய் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவே, நரம்பில் தழும்பு உருவாகிவிட்டது. இதனால், அந்த இடத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் தகவல் பரிமாற்றத்தில் குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. விளைவு... சின்ன வலியைக்கூட உயிர்போகும் வலியாக உணர்ந்திருக்கிறார் அவர். இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளானவர்களது முகத்தில் காற்று படும்போதும், முகம் கழுவும்போதும், பல் துலக்கும்போதும், சாப்பிடும்போதும்கூட அதிகமான வலி ஏற்படும். இதற்கு, சிறு துளை மூலம் மூளையில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.