Published:Updated:

அலர்ஜியை அறிவோம் - 16

அலர்ஜியை அறிவோம் - 16
பிரீமியம் ஸ்டோரி
News
அலர்ஜியை அறிவோம் - 16

மருந்து ஒவ்வாமை

அலர்ஜியை அறிவோம் - 16

‘எனக்கு பெனிசிலின் அலர்ஜி’, ‘சல்பா மாத்திரை ஆகாது’ என்றெல்லாம் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உணவைப் போலவே எந்த மருந்தும் யாருக்கும் அலர்ஜியை உண்டாக்கலாம். சாதாரண அரிப்புப் பிரச்னையில் தொடங்கி, உயிருக்கே ஆபத்து ஏற்படுத்துவது வரையிலான பாதிப்புகளை இந்த மருந்து ஒவ்வாமை ஏற்படுத்தலாம்.

அலர்ஜி ஆகும் மருந்துகள்

பெனிசிலின், ஆஸ்பிரின், அனால்ஜின், சல்பா மருந்துகள், செபலோஸ்போரின் மருந்துகள், என்எஸ்ஏஐடி (NSAID) என்று அழைக்கப்படுகிற வலிநிவாரணி மருந்துகள், மலேரியாவுக்கான மருந்துகள், வலிப்பு மருந்துகள், இன்சுலின், உலோகம் கலந்த மருந்துகள், தடுப்பூசிகள், ஹார்மோன் மருந்துகள், ரத்தப்பொருட்கள் போன்றவை அதிகம் அலர்ஜி ஆகின்றன.

காரணம் என்ன?

மாத்திரை, திரவ மருந்து, ஊசி மருந்து, களிம்பு மற்றும் லோஷன் போன்ற மேற்பூச்சு மருந்து, உறிஞ்சக்கூடிய மருந்து எனப் பல வடிவங்களில் மருந்துப் பொருட்கள் கிடைக்கின்றன. ஒரு மருந்தின் மூலக்கூறுப் பொருட்கள் அலர்ஜி ஆவது வழக்கம். அல்லது, அதைத் தயாரிக்கும்போது சேர்க்கப்படும் சில கலப்புப் பொருட்களும் அலர்ஜியை உண்டாக்கலாம். கேப்ஸ்யூல் மாத்திரைகளில் உள்ள உறைகூட அலர்ஜி ஆகிறது. மருந்துகளுக்கு நிறம் கொடுக்கும் பொருட்களும் அலர்ஜியை ஏற்படுத்தலாம். உதாரணத்துக்கு, மஞ்சள் நிறம் தரும் டார்ட்ரசீன், சிவப்பு நிறம் தரும் அமராந்த் ஆகியவை முக்கியமானவை. மருந்துகள் கெட்டுப்போகாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் சோடியம் பென்சோவேட், ஹைட்ராக்ஸி பென்சோவேட், சல்பர் டை-ஆக்ஸைடு போன்றவையும் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன.

அலர்ஜியை அறிவோம் - 16

இங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில்கொள்ள வேண்டும். மருந்துகளால் அலர்ஜி ஏற்படுவது ஒரு வகை. ஒரு மருந்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும்போதும், இரண்டு மூன்று மருந்துகளைச் சேர்த்துச் சாப்பிடும்போதும், மருந்துகளின் பக்கவிளைவாகவும் சில அறிகுறிகள் தோன்றும். இவற்றில் இருந்து, அலர்ஜிக்கான அறிகுறிகளை வேறுபடுத்தத் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு மருந்தைச் சாப்பிடும்போது வாயில் புண் வரலாம்; சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இவை அந்த மருந்தின் பக்கவிளைவுகளே தவிர, அலர்ஜி பாதிப்பு இல்லை.

ஒவ்வாமை ஏற்படுவது எப்படி?

இந்தத் தொடரின் ஆரம்பத்தில் உடனடி ஒவ்வாமை, திசு சார்ந்த ஒவ்வாமை, தடுப்பாற்றல் சார்ந்த ஒவ்வாமை, தாமதமான ஒவ்வாமை என ஒவ்வாமையின் வகைகளைப் பற்றிப் பார்த்தோம். நாம் பயன்படுத்தும் மருந்தைப் பொறுத்து, மருந்து ஒவ்வாமையில்தான் எல்லா வகை விளைவுகளும் ஏற்படுவதுண்டு. 

உடனடி ஒவ்வாமை என்பது தடுப்பாற்றல் மண்டலத்தில் ஐஜிஇ (IgE) எதிரணு உருவாவதால் ஏற்படுவது. பெனிசிலின் ஊசி மருந்துக்கு இந்தவகை ஒவ்வாமை ஏற்படும். இது சாதாரண அரிப்பில் ஆரம்பித்து, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வரை பல அறிகுறிகளைத் தோற்றுவிக்கும். ஐஜிஎம் (IgM) அல்லது ஐஜிஜி (IgG) எதிரணு உருவாவதால், திசு சார்ந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. இதன் விளைவால் உடலில் ஏதேனும் ஓர் உறுப்பு பாதிக்கப்படும். உதாரணமாக, பெனடாயின் மருந்தால் ஒவ்வாமை ஏற்படும்போது சிறுநீரகம் பாதிக்கப்படும். ஐஜிஜி (IgG) எதிரணு உருவாவதால் தடுப்பாற்றல் சார்ந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. இதற்கு உதாரணம், சல்பனாமைடு மருந்து ஒவ்வாமையால் ருமட்டாய்டு மூட்டுவலி வருவது. தாமதமான அலர்ஜி என்பது, தோலில் சிறிய வீக்கம், தோல் சிவப்பது போன்ற சாதாரண அறிகுறிகளைத்தான் ஏற்படுத்தும். களிம்புகளில் உள்ள பாராபென்ஸ் எனும் வேதிப்பொருள் காய்ச்சலையும் இருமலையும் ஏற்படுத்துவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

அறிகுறிகள் என்னென்ன?

மருந்து ஒவ்வாமையால் ஏற்படும் அறிகுறிகள் பலவகைப்படும். இவை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக ஏற்படும். காரணம், உடலில் எந்த இடத்தில், எந்த மாதிரி ஐஜிஇ, ஐஜிஎம், ஐஜிஜி எதிர் புரதங்களும் மாஸ்ட் செல்களும் வினைபுரிகின்றனவோ, அதைப் பொறுத்து அலர்ஜிக்கான அறிகுறிகள் தோன்றும்.

தோலில் ஏற்படும் அறிகுறிகள்: தோலில் பல இடங்களில் அரிப்பு உண்டாகும். தோல் தடித்துச் சிவந்துவிடும். சிலருக்கு, தடிப்பு நிரந்தரமாகிவிடும். கண் இமை, உதடு, காது வீங்கும்.

சுவாச மண்டல அறிகுறிகள்: அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, மூக்கு அரிப்பு, இருமல், இளைப்பு, ஆஸ்துமா போன்றவை ஏற்படும்.

வயிற்றில் ஏற்படும் அறிகுறிகள்:  மருந்தைச் சாப்பிட்ட அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்துக்குள் வாய் மற்றும் உதட்டில் அரிப்பு ஏற்படும். நாக்கும் உதடும் வீங்கிவிடும். பிறகு, தொண்டை அடைக்கும். விழுங்குவதற்குச் சிரமம் ஏற்படும். வயிற்றைப் பிசைகிற மாதிரி வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும்.

உறுப்பு சார்ந்த பிரச்னைகள்: ஒவ்வாமையானது ரத்தக்குழாயைப் பாதித்தால், ரத்தக்குழாய் அழற்சி வரும். கல்லீரலைப் பாதித்தால் காமாலை வரும். சிறுநீரகத்தைப் பாதித்தால், சிறுநீரக அழற்சி வரும். ரத்தத்தையே பாதித்தால் ரத்தசோகை மற்றும் சீரம் சிக்னஸ் நோய் வரும்.

அதிர்ச்சி ஒவ்வாமை (Anaphylaxis): மருந்து ஒவ்வாமையால் ஏற்படும் கேடுகளில் மிகவும் மோசமானது இதுதான். பாதிக்கப்பட்டவருக்கு ரத்த அழுத்தம் குறைந்து, சுவாசக்குழாய் சுருங்கி, மூச்சுத்திணறல் உண்டாகி, மயக்கம் ஏற்படும். இதற்கு உடனடியாக சிகிச்சை கிடைக்காவிட்டால், உயிருக்கு ஆபத்து நேரும்.

என்ன சிகிச்சை?

அலர்ஜிக்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு சிகிச்சை தரப்படுவது நடைமுறை. சாப்பிட்ட மாத்திரையை மருத்துவரிடம் காண்பித்தால், அதன் தன்மையைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சையைத் தரமுடியும். மாத்திரை மற்றும் திரவ மருந்துகளைவிட ஊசி மருந்துக்குத்
தான் உடனடி அலர்ஜி ஏற்படும். இதில் ஆபத்தும் அதிகம். வெளியிடங்களில் ஊசி போட்டு அலர்ஜி ஆகிவிட்டால், எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் செல்கிறோமோ, அவ்வளவு விரைவாக ஆபத்தையும் தவிர்க்கலாம். பொதுவாக, ஊசி போட்ட பிறகு அரை மணி நேரம் மருத்துவமனையில் காத்திருந்து சென்றால், அலர்ஜி ஆபத்துக்களைத் தவிர்க்கலாம். ஊசி மருந்துக்கு ஒவ்வாமை இருந்தால், மற்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன்னர், ‘டெஸ்ட் டோஸ்’ போட்டுப் பார்த்த பிறகே பயன்படுத்த வேண்டும். மருந்து ஒவ்வாமை உள்ளவர்களுக்குக் கூருணர்ச்சி நீக்கல் சிகிச்சை (Desensitization) மூலமும் இம்யூனோதெரப்பி மூலமும் சிகிச்சை தரப்படும்.

- எதிர்வினை தொடரும்

தடுக்கும் வழிகள்:

எந்த மருந்து அலர்ஜியை ஏற்படுத்துகிறதோ, அதை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தவே கூடாது.

அலர்ஜி ஆகும் மருந்தோடு தொடர்புடைய மற்ற மருந்துகளையும் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, அவற்றையும் தவிர்ப்பது நல்லது.

அலர்ஜி ஆகும் பொருள் துளி இருந்தால்கூட, அதற்கான அறிகுறிகளைக் காட்டிவிடும். எனவே, அந்த மருந்து உள்ள களிம்பு, லோஷன் என எதையும் பயன்படுத்தக்கூடாது.

அலர்ஜி ஆகும் மருந்துகளின் பெயர்களை ஓர் அட்டையில் எழுதி, எப்போதும் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரிடம் சிகிச்சைக்குச் செல்லும்போது, முதலில் அந்த அட்டையைக் காண்பித்துவிடுவது அவசியம்.

மருந்து ஒவ்வாமை உள்ளவர்கள் சாதாரண காய்ச்சல், தலைவலிக்குக்கூட மருந்துக் கடைகளில் சுயமாக மருந்து வாங்கிச் சாப்பிடக்கூடாது.

ஸ்டீவன்ஸ் ஜான்சன் சிண்ட்ரோம்! (Stevens-Johnson Syndrome)

மருந்து ஒவ்வாமை காரணமாகத் தோலில் ஏற்படும் மிக மோசமான நோய் இது. இந்த நோய் வந்தவர்களில், 100-ல் 30 பேருக்கு உயிர் ஆபத்துக்கான வாய்ப்பு அதிகம். இது பெரும்பாலும் பெரியவர்களுக்கே வருகிறது. காய்ச்சல், தலைவலி, இருமல் என நோய் தொடங்கும். முகம், முதுகு, மார்பு ஆகிய இடங்களில் நீர் கோத்த கொப்புளங்கள் தோன்றும். கண், நாக்கு, பிறப்பு உறுப்புப் பகுதிகளில் பெரிய அளவிலான கொப்புளங்கள் உண்டாகும். இந்த இடங்களில் தோல் எரிந்துபோன மாதிரி காணப்படும். இவற்றில் நோய்த்தொற்று ஏற்பட்டு, நச்சு உருவாகும். இது ரத்தத்தில் கலந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நோயை எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் கண்டறிந்து சிகிச்சை பெறுகிறோமா, அந்த அளவுக்கு உயிர் ஆபத்து குறையும். இதற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.

அலர்ஜி டேட்டா!

அலர்ஜியை அறிவோம் - 16

மருந்து ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்கள் உலகிலேயே போர்ச்சுகல் நாட்டில்தான் அதிகம்.

வீட்டில் யாருக்காவது ஒவ்வாமை இருந்தால், அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மருந்து ஒவ்வாமை ஏற்படும் ஆபத்து 75 சதவிகிதம் அதிகரிக்கிறது.

பெனிசிலினுக்கு அலர்ஜி ஆவதுதான் மிக அதிகம். இதையடுத்து, வலி நிவாரணி மருந்துகள் அதிக அலர்ஜியை ஏற்படுத்துகின்றன.

பெரியவர்களுக்கு ஏற்படும் அலர்ஜி சதவிகிதத்தோடு ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு அலர்ஜி ஆவது மிகவும் குறைவு.