
உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 17

மயக்கத்தில் இருப்பவரை உயிரோடு இருக்கிறாரா என்று உறுதிசெய்துகொள்ள, மூச்சு வருகிறதா என்று அவர் மூக்கில் கை வைத்துப் பார்ப்போம்; இதயத்துடிப்பு உள்ளதா என மார்பில் கை வைத்துப் பார்ப்போம்; சருமம் இயல்பான வெப்பநிலையில் உள்ளதா என்று அவர் உள்ளங்கால்களைத் தொட்டுப் பார்ப்போம். ஆனால், இவை எல்லாம் இருந்துவிட்டால் மட்டும் ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் 13 வயதுச் சிறுமி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார். `வென்டி லேட்டர்’ எனப்படும் செயற்கை சுவாசக் கருவியை அகற்றி விட்டால் அவர் உயிரிழந்துவிடுவார் என்ற நிலை. வென்டிலேட்டரை அகற்றலாம் என்று மருத்துவர்கள் சொல்ல, அதற்கு சிறுமியின் பெற்றோர், “அவள் இதயம் இன்னும் துடித்துக்கொண்டுதான் இருக்கிறது. அவள் உயிரோடுதான் இருக்கிறாள். எனவே, வென்டிலேட்டரை அகற்றக்கூடாது” என நீதிமன்றம் சென்றனர். மூளைச்சாவு பற்றிய விவாதத்துக்கு இந்தச் சிறுமி காரணமானார்.

ஹிதேந்திரன் மரணத்துக்குப் பிறகு, மூளைச்சாவு பற்றிய விழிப்புஉணர்வு அதிகரித்து, உடல்உறுப்பு தானங்கள் நடந்தாலும், மூளைச்சாவு பற்றிய தவறான கருத்துக்களும் பரவத்தான் செய்கின்றன. பொதுவாக, மூளையின் பாதிப்பைப் பொறுத்து, உணர்வுஅற்ற தாவரம்போன்ற நிலை (Vegetative state), கோமா எனப்படும் சுயநினைவுஅற்ற நிலை, மூளைச்சாவு நிலை என மூன்று விதமாகப் பிரிக்கலாம். உணர்வுஅற்ற நிலையில், நோயாளிக்கு மூளையின் சில செயல்பாடுகள் நடக்கும், கண் விழித்து பார்ப்பார். ஆனால் பேச, நடக்க, உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது. மூளை சுயநினைவு இழந்த நிலையில், சிகிச்சை மூலம் மூளை செல்கள் புத்துயிர் பெற்று, எப்போது வேண்டுமானாலும் நினைவு திரும்பலாம் அல்லது நினைவு திரும்பாமலே மூளைச்சாவுக்கு செல்லக்கூடும்.
மூளைச்சாவு என்றால், மூளையின் செயல்பாடுகள் முற்றிலும் நின்ற நிலை. மூளையில் உள்ள நியூரான்கள் இறந்துவிட்டதால், அங்கே எந்தவித மின்னோட்டமும் (Electrical impulse) நடப்பது இல்லை. அதனால், இவர்களுக்கு நினைவு திரும்பாது. செயற்கைக் கருவிகளின் துணையுடன் மட்டும் இவர்களது உறுப்புகள் சில நாட்கள் இயங்கும். செயற்கைக் கருவியை அகற்றிவிட்டால், உடல் உறுப்புகளின் செயல்பாடும் நின்றுவிடும்.
நிபுணர்கள் அடங்கிய மருத்துவர் குழு, ஆய்வுகள் செய்துதான் மூளைச்சாவை உறுதிசெய்கின்றனர். வென்டிலேட்டரிலேயே அவரால் உயிர்வாழ முடியாதா என்று சிலர் கேட்பார்கள். அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டை கட்டுக்குள் வைத்திருப்பது மூளைதான். மருந்துகள் மூலம், சில நாட்களுக்கு உயிர் வாழ முடியும். மூளையில் இருந்து தொடர்ந்து சிக்னல் வரவில்லை என்றால், ஹார்மோன் சுரப்பு நின்று, உடலில் மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும். இதனால், சில நாட்களுக்கு மட்டும்தான் உடலைப் பாதுகாத்து வைக்க முடியும். அதற்குள் உடல் உறுப்புதானம் செய்வதன் மூலம் 10 முதல் 14 பேரின் உயிரைக் காப்பாற்றலாம்!
- தொடரும்
மூளைச்சாவு வரலாறு
மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலை எப்படிப் பராமரிப்பது என்பது தொடர்பான ஆய்வு மிகக் குறைவாகவே உள்ளது. 1959-க்கு முன்பு வரை, ஒருவரின் இதயத்துடிப்பு, சுவாசம் நின்றுவிட்டால் மட்டும்தான் அவர் இறந்துவிட்டார் என்று அறிவிக்க முடியும். 1960-ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் மூளைச்சாவு அடைந்த நபர்களுக்குச் செயற்கை சுவாசம் அளித்து, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துச் சிகிச்சை அளித்தனர். இப்படிச் சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள் 2 நாள் முதல் 26 நாட்கள் வரை உயிர்வாழ்ந்திருக்கின்றனர். இதை அடிப்படையாகக் கொண்டுதான் மூளைச்சாவு என்ற புதிய விஷயம் உருவானது. இன்று நவீன மருத்துவ வளர்ச்சி காரணமாக வென்டிலேட்டர், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், செயற்கை ஹார்மோன் ஆகியவற்றின் மூலம், மூளைச்சாவு என்ற நிலையிலேயே ஓர் உடலை நீண்டகாலம் வைத்திருக்க முடியும். ஆனால், உடல் திசுக்களில் இருந்து வரும் நோய்த்தொற்று போன்றவற்றில் இருந்து உடலைக் காப்பது மிகமிகக் கடினம். மேலும், மூளைச்சாவு என்பது இனி நிச்சயம் மீளவே முடியாதது என்பதால், இப்படிப் பாதுகாத்து வைத்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை.
மூளைச்சாவு எப்படி உறுதி செய்யப்படுகிறது?

ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை ஆப்னியா பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தலாம். செயற்கை சுவாசத்தைத் நிறுத்தி, அவரால் மூச்சுவிட முடிகிறதா என, மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை பரிசோதிக்கப்படும். தொடர்ச்சியாக மூச்சுவிட முடியவில்லை, இதயத் துடிப்பு குறைகிறது, ரத்த அழுத்தம் மாறுகிறது என்றால், உடனடியாகச் செயற்கை சுவாசம் அளிக்கப்படும். மூச்சு விடவில்லை என்றாலோ, மூச்சு விடுவதற்கான அறிகுறியே இல்லை என்றாலோ, மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ரத்தத்தில் கார்பன்டை ஆக்சைடு அளவு பரிசோதிக்கப்படும். சில மணி நேரங்கள் கழித்து மருத்துவர் குழு இதே பரிசோதனையை மீண்டும் செய்து உறுதி செய்வார்கள். உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புவதைப் பற்றி உடல்தானம் விழிப்புஉணர்வு கவுன்சலர்தான் பேசுவார். மருத்துவர்கள் பேசமாட்டார்கள். அதேபோல், உடல் உறுப்பு தானம் செய்யும்படி யாரையும் கட்டாயப்படுத்துவதும் இல்லை.