Published:Updated:

மனமே நீ மாறிவிடு - 18

மனமே நீ மாறிவிடு - 18
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நீ மாறிவிடு - 18

மனமே நீ மாறிவிடு - 18

மனமே நீ மாறிவிடு - 18

ழ் நிலையில் மனம் அமைதியாகும்போது உடல் சுகமாகிறது. மேல் நிலையில் உணர்வுகளின் தடுமாற்றங்கள் ஏற்படும்போது உடல் நோய்வாய்ப்படுகிறது. இதனால்தான், மனதை அமைதிப்படுத்தும் நோக்கோடு, எல்லா மதங்களும் சுகமளிக்கும் சிகிச்சைகளை, பயிற்சிகளை வலியுறுத்துகின்றன.

மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள உங்கள் சுவாசத்தைக் கவனித்தாலே போதும். மகனிடம் கோபம்கொள்ளும்போது, மேலதிகாரி உங்களைக் கடிந்துகொள்ளும்போது, மனைவி உங்களைப் புரிந்து கொள்ளாமல் விரக்தியடையச் செய்யும்போது, நண்பர் குழாமில் வாய்விட்டுச் சிரிக்கும்போது, அழகான பெண் உங்களைக் கடந்து செல்லும்போது என ஒவ்வொரு தருணத்திலும் மூச்சைக் கவனியுங்கள். உங்கள் மன அலைவரிசையைக் காண்பிக்கும் கருவி சுவாசம் என்பது புரியும்.

நல்ல தூக்கத்தில் மூச்சு ஆழமாக இருப்பதால் சீரான, ஆழமான, நிதானமான சுவாசத்தை நாம் விழித்திருக்கும் நேரத்திலும் மேற்கொள்வதற்குத்தான் ‘பிராணாயாமம்’ எனும் மூச்சுப் பயிற்சி உதவுகிறது.

அப்படி என்றால் மூச்சுப் பயிற்சி உடலுக்கா? மனதுக்கா? இரண்டுக்கும்தான்.

நம் மரபில், மூச்சு என்பது உடல் இயக்கத்தின் ஒரு பகுதி அல்ல. அலோபதி அணுகுமுறையில்தான் மூச்சை ரெசிப்ரேட்டரி சிஸ்டம் (Respiratory system) என்று உடலின் பல இயக்கங்களில் ஒன்றாகப் பாவிக்கிறார்கள். ஆனால், நாம் சுவாசத்தை உடலுக்கு அடுத்த மேல் தட்டில் வைக்கிறோம். சுவாசத்துக்கு மேல் தட்டில் மனம் உள்ளது. ‘மூச்சைக் கட்டுப்படுத்தினால், கீழ்த் தட்டில் உடலும் சுகமடையும்; மேல் தட்டில் உள்ள மனமும் அமைதி பெறும்’ என்கிறார்கள்.

மனமே நீ மாறிவிடு - 18

உடலை நம் கட்டுப்பாட்டில் கொண்டுவர உணவு மாற்றம், உடற்பயிற்சி, மருந்துகள் போன்ற வழிகள் உள்ளன. ஆனால், மனதை மாற்ற வழிகள் குறைவு. மனதை மாற்றும் சக்தி, சுவாசத்துக்கு மட்டும்தான் உண்டு. பதற்றமாக உள்ளபோது கொஞ்சம் மூச்சு எடுத்துக்கொண்டு பேசுவது இதனால்தான்.

சுவாசத்தைச் சீராக்கும்போது மனம் மாறுகிறது. அமைதியுறுகிறது. உடலை இலகுவாக்க ஆசனம். மூச்சை சீராக்கப் பிராணாயாமம். மனதை அமைதிப்படுத்த தியானம். இப்படித்தான் யோகக் கலையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இளைய வயதினர் ஆசனங்களை அதிகமாக செய்ய வேண்டும். வயது ஏற ஏற, ஆசனங்களைவிட பிராணாயாமம், தியானம் ஆகியவை செய்யலாம்.

உடலையும் மனதையும் சம நிலைக்குக் கொண்டுவர நம்மை அறியாமலேயே பெருமூச்சு விடுகிறோம். அதாவது, நுரையீரலுக்கு அதிகம் ஆக்சிஜன் தேவை. எனவேதான், ஏமாற்றமோ கோபமோ உண்டாகும்போது, மனமும் உடலும் சுகம் கெடுவதை உணர்ந்து, உடல் தன்னைத்தானே சீர் செய்துகொள்ளும் வழிமுறைதான் பெருமூச்சு.

உடல் உழைப்பு தேவைப்படும்போது மூச்சு வேகமாகவும் மேலோட்டமாகவும் ஆகிறது. பின்பு, ஓய்வெடுக்கையில் மூச்சு மெதுவாகவும் ஆழமாகவும் ஆகிறது. உடல் உழைப்பு அதிகம் இருக்கும்போது, வேலையும் ஓய்வும் மாறி மாறி இருந்தால் மூச்சுப் பயிற்சி இயல்பாக நடைபெறுகிறது.
இன்று உடல் உழைப்பு குறைந்துவிட்டதால், மனிதர்கள் செய்யும் வேலைகளை இயந்திரங்கள் செய்கின்றன. மூச்சு விட முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு அவசரசிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் வைப்பது உண்டு. ஆனால், தினமும் வென்டிலேட்டர் வைத்துக்கொள்ள முடியாது. அதற்குத்தான் பிராணாயாமம் பயிற்சி அவசியப்படுகிறது.

ஒரு கருத்தரங்கில் பேசிய பள்ளிக்கூட உடற்பயிற்சி ஆசிரியர் சொன்ன தகவல் அதிர்ச்சியாக இருந்தது. இன்று, நகரில் உள்ள வசதியான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு பந்தைத் தூக்கி எறியும் வலு கூடக் குறைந்துவருகிறதாம். 60 வயதுள்ள ஒருவர் எறியும் தூரத்துக்குக்கூட 15 வயதுப் பிள்ளைகளால் பந்தை எறிய முடியவில்லை என்றார். உடல் உழைப்பு, நீங்கி வருவதுதான் இதற்குக் காரணம்.

குனிந்து, நிமிர்ந்து வேலை செய்த காலத்தில், அனைவரது ஆரோக்கியம் மேம்பட்டிருந்தது. இன்று,  ஸ்மார்ட் கிச்சனும், பாக்கெட் உணவுகளும், ஆன்லைன் வசதிகளும் உடல் உழைப்புகளை குறைத்துவிட்டதால் நடக்கவே சிரமப்படுவதும், அதீத உடல் எடை, வலிகள், சோம்பல் பெருகுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டன.

ஒரு நாள்,   பாரம்பரியமாகச் சமைத்துப்பாருங்கள். உரலில் இடித்தும், அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் அரைத்தும், மோர் கடைந்தும் அனைத்தையும் உடல் உழைப்பால் செய்துபாருங்கள். உங்கள் சுவாசத்தை அப்போது கவனித்தால், மனதின் பெருமிதத்தை உடலில், சுவாசத்தில் உணர்வீர்கள். பெண்கள் மட்டும் அல்ல, ஆண்களும் இணைந்து சமைத்துப்பாருங்கள். உடல், மூச்சு, மனம் அனைத்தும் சுகமாக இயங்குவது தெரியும். உறவுகள் வலுப்படும். ஆனந்தம் பெருகும். நோய்கள் பறந்துபோகும்.

ஓய்வு நேரங்களில் சோர்ந்து இருக்காதீர்கள். ஓடுங்கள், விளையாடுங்கள், வாய்விட்டுச் சிரியுங்கள். செல்லப்பிராணிகளைக் கொஞ்சுங்கள், தோட்டத்தைப் பராமரியுங்கள்; மரம், செடி, கொடிகளுடன் மனம்விட்டுப் பேசுங்கள், துடிப்பாக, காதலுடன் உடலுறவுகொள்ளுங்கள். எதைச் செய்தாலும் உங்கள் மூச்சைக் கவனியுங்கள். நன்கு மூச்சு விடக் கற்றுக்கொள்ளுங்கள். கடைசி வரை உங்கள் உடல், மன ஆரோக்கியத்தை நிர்ணயிப்பது அதுதான்.

- மாறுவோம்