Published:Updated:

மனமே நீ மாறிவிடு - 19

மனமே நீ மாறிவிடு - 19
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நீ மாறிவிடு - 19

மனமே நீ மாறிவிடு - 19

மனமே நீ மாறிவிடு - 19

மூன்று கண்டுபிடிப்புகள் உலகைப் புரட்டிப்போட்டதாகச் சொல்வார்கள். ஒன்று, உலகம் உருண்டை என்ற கண்டுபிடிப்பு. இரண்டாவது, குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது. இவை இரண்டும் மிகவும் பிரபலமானவை. மூன்றாவதைப் பற்றித்தான் பேசப்போகிறோம். அதைச் சொன்னவர் சிக்மண்ட் ஃப்ராய்ட்.

“மனிதன் அடைந்த அனைத்து முன்னேற்றங்களுக்கும் காரணம், அவனது தகாத இச்சைகளையும் மூர்க்கத்தனத்தையும் சமூகம் ஒப்புக்கொள்ளும் செயல்களாக மாற்றியதுதான்” என்பது அவர் கண்டுபிடிப்பு. இதை அவர் உயர்வாக்கம் (Sublimation) என்றார்.

கடலில் மிதக்கும் ஐஸ் பாறையுடன் மனதை ஒப்பிடுவார் ஃப்ராய்ட். மேலெழுந்தவாரியாக உள்ள மனதை ‘விழிப்பு மனம்’ (Conscious Mind) என்கிறார். இதை, பனிப்பாறை நுனி எனலாம். நீருக்கு மேல் புலப்படும் ஐஸ்கட்டி எவ்வளவு தெரியுமோ, அவ்வளவுதான் நம் மனதைப் பற்றி நமக்குத் தெரியும். சற்று முயன்றால் நமக்குப் புலனாகும் மனதை ‘நனவு மனம்’ (Subconscious Mind) என்கிறார். நீரின் அசைவில் ஐஸ்பாறையின் அடிப்பாகம் சற்று வெளியே தெரிவது போன்றது இது. நீரில் மூழ்கியுள்ள ஐஸ்கட்டிபோல நமக்குச் சுத்தமாகப் புலப்படாத மனதை ‘நனவிலி மனம்’ (Unconscious Mind) என்கிறார். இதன் செயல்பாடுகள் எதுவும் நமக்கு விளங்காது. நம் மனதை நாம் அறிவது என்றால், இந்த ஆழ்மனதை அறிவதுதான்.

இந்த ஆழ்மனது, பெரும்பாலும் இச்சைகளாலும் மூர்க்கத்தனங்களாலும் நிறைந்திருக்கும். இவற்றை மேல் மனம் ஏற்காது. காரணம், இவை குடும்பம், மதம், சமூகம் போன்றவை போதிக்கும் ஒழுக்கத்துக்கு எதிரானவை. அதனால், அவை அழுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஆனாலும், அவை தொடர்ந்து மேல் எழுந்து வர முயற்சித்துக்கொண்டே இருக்கும். இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால் செக்ஸ் உணர்வு மற்றும் ஆக்கிரமிப்பு இரண்டும்தான் நம் மனதை வியாபித்துக்கொண்டிருப்பவை. இவற்றை அப்படியே வெளிப்படுத்துவது அசிங்கம், அநாகரிகம், அவமானம் என நமது கலாசாரம் போதிப்பதால், மனம் இவற்றைச் சற்று வேறுவிதமாக மாற்றிச் சமூகம் அங்கீகரிக்கும் வண்ணம் செய்கிறது.

உதாரணத்துக்கு, கட்டுக்கடங்காத காம உணர்ச்சி. இதை நிறைவேற்றுவது அல்ல... சொல்வதேகூட தகாதது ஆகிவிடுகிறது. அப்படியானால், இந்தக் காம உணர்ச்சியை என்னதான் செய்ய? ஓர் அற்புதமான காதல் கவிதை எழுதலாமே!

மனமே நீ மாறிவிடு - 19

உங்கள் மேலதிகாரியின் செயல் கண்டு உங்களுக்குக் கண்மண் தெரியாத கோபம் வருகிறது. அவரைக் கீழே தள்ளி மிதிக்க வேண்டும் போல ஆக்ரோஷம் வருகிறது. ஆனால், செய்ய முடியாது. இந்த உணர்ச்சிக்கு என்ன வடிகால்? பந்தை உதைத்து விளையாடலாம். உடலுக்கு  நல்ல பயிற்சி. உடல் அசதி அடையும்போது மூர்க்கத்தனமும் குறைந்திருக்கும்.

ஃப்ராய்டின் மற்ற கருத்துக்களை எதிர்ப்பவர்கள்கூட இதை ஒப்புக்கொள்வார்கள். நம் கலைகளும் விளையாட்டுகளும் கட்டுக்கடங்காத ஆழ் மன வக்கிரங்களின் ஒப்பனை செய்யப்பட்ட வெளிப்பாடுகளே என்பது அவரின் கருத்து.

உச்சஸ்தாயியில் பாடும்போதோ, விளையாட்டில் விக்கெட் எடுத்தாலோ, கோல் போட்டாலோ, அம்மனிதர்களின் உணர்வுகளும், உடல் நிலை, மனநிலைகளும் உடலுறவின் உச்ச கட்ட உணர்வுக்கு ஒப்பானவை என்கிறார் அவர்.

சாகச விளையாட்டுகள் முதல், எல்லா விளையாட்டுகளுமே மூர்க்கத்தனத்துக்கான வடிகால்கள்தான். அதனால்தான், வாகனத்தில் வேகமாகச் செல்வதைப் பயம் கலந்த கிளர்ச்சியுடன் செய்கிறோம். எல்லா விளையாட்டிலும் வெற்றி பெறுகையில் பாராட்டும் பெருமையும் சேர்கிறது. முக்கிய விதி இதுதான். ஆழ்மனதில் உள்ள தீவிரமான உணர்வுகளை அப்படியே பூட்டிவைத்தால் அது உடலை, மனதை, உறவைப் பாதிக்கும். அதைச் சமூகம் ஒப்புக்கொள்ளும் செயலாக மாற்றுவதில்தான் சூட்சுமம் உள்ளது. இதை மனம் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக தானாகவே செய்யும். இந்த ரசவாதச் செயலை அனுமதித்தாலே போதும். மனம் ஆரோக்கியமாகத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். நம் வாழ்க்கையில் கலைகளும் விளையாட்டும் தொலையத் தொலைய, மன நோய்கள் பெருகும். மேலோட்டமாகப் பார்த்தால், எந்த விளையாட்டிலும், எந்தக் கலையிலும் பெரிய அர்த்தம் தெரியாது. அவற்றின் முக்கியத்துவம் புரியாது. ஆனால், மனம் தன்னைச் சீராக இயக்கிக்கொள்ள இவை அவசியம். கோபம் வருகையில் ஓடுங்கள். களைத்து உட்காரும்போது கோபம் தணிந்திருக்கும். ஏதாவது ஓர் உடல் சார்ந்த விளையாட்டை விளையாடுங்கள். அது மூர்க்கத்தனத்தைக் குறைக்கும். அதே போல ஏதாவது ஒரு கலை, இசை வடிவத்தை நெருக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கலையில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்பது இல்லை; நல்ல ரசிகராக இருந்தால்கூடப் போதும்.

எனக்குத் தெரிந்த ஓட்டுநர் ஒருவர் இருக்கிறார். ஓட்டும் நேரத்தைவிடக் காத்திருக்கும் நேரம் அதிகம். ஆனால், என்றும் குன்றாத மகிழ்ச்சியில் இருப்பார். என்ன காரணம்? காலையில் துடிப்பான எம்.ஜி.ஆர் பாடல்கள், மதியம் புதுப் பாடல்கள், மாலையில் சிவாஜியின் தத்துவப் பாடல்கள், இடை இடையே வானொலி என்று சதா சங்கீத மழையில் திளைத்துக்கொண்டிருப்பார். காருக்கு வெளியே இருந்தாலும், மொபைலில் பாட்டுக் கேட்பார். வேலை, குடும்பம் இவற்றுக்கு இணையாக, இசையுடன் நேரம் செலுத்துவார்.

உங்கள் ஆழ் மனத் தேவைகளுக்கான வடிகால்கள் உள்ளனவா? எது என்ன செய்யும் என்று புரியாவிட்டாலும், உடலும் மனமும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள கலையும் விளையாட்டும் அவசியம். ஜங்க் ஆர்ட் (Junk Art) என்று ஒரு வகைக் கலை வடிவம் உண்டு. வேண்டாத குப்பைகளை வைத்துக்கொண்டே அற்புதமான கலைப் பொருட்கள் செய்வார்கள். நம் மனம் அந்த வேலையைத்தான் தினமும் செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கிறது. அதை அனுமதிப்போம்; ஆனந்தம் அடைவோம்!

- மாறுவோம்!