
உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 18

இதயத்துக்கு எப்படி ஹார்ட் அட்டாக்கோ அதுபோல, மூளைக்கு பிரைன் அட்டாக் அல்லது ஸ்ட்ரோக். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது அல்லது ரத்தக் கசிவு காரணமாக மூளைக்கு ரத்த ஓட்டம் தடைப்படுவதை பிரைன் அட்டாக் என்கிறோம். உடலின் ஒருபக்கம் செயல் இழப்பதால் தமிழில் இதை ‘பக்கவாதம்’ என்பார்கள். மாரடைப்புக்கு இருக்கிற விழிப்புஉணர்வு, பக்கவாதத்திற்்கு இல்லை. இன்றும் பக்கவாதப் பாதிப்பு ஏற்பட்டு ஒருநாள் கழித்துக்கூட சிகிச்சைக்கு வருபவர்களும் உண்டு. பல இடங்களில், சிகிச்சை இன்றி உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன.
நம்மை எல்லாவகையிலும் இயக்குவது மூளைதான். அந்த மூளை இயல்பாகச் செயல்பட, உணவும் ஆக்சிஜனும் தேவை. இந்த இரண்டும் ரத்தத்தின் மூலமே உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. பக்கவாதம் ஏற்படுபவர்களுக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு அல்லது ரத்தக்கசிவு காரணமாக மூளை செல்களுக்கு உணவும் ஆக்சிஜனும் கிடைக்காமல்போகிறது. இதனால், இந்த செல்கள் உயிரிழக்கின்றன.
மூளையின் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறதோ அதைப்பொறுத்து பேச்சு, பார்வை, நினைவாற்றல், உணர்ச்சி, தசைகளின் வலுத் தன்மை போன்றவை பாதிக்கின்றன. இதனால்தான், பக்கவாதப் பாதிப்பு வந்த இரண்டு மணி நேரத்துக்குள் சிகிச்சைக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த இரண்டு மணி நேரத்துக்குள் தகுந்த சிகிச்சை கிடைத்துவிட்டால், பாதிக்கப்பட்டவர் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பலாம். பொதுவாக, ரத்தக் குழாய் அடைப்புக் காரணமாகவே பிரைன் அட்டாக் வருகிறது. இவர்களுக்கு, இரண்டு மணி நேரத்துக்குள் இன்ட்ராவீனஸ் த்ராம்போலிசிஸ் (intravenous thrombolysis) சிகிச்சை அளித்தால் போதும். மூளை செல்கள் உயிரிழப்பைத் தடுத்துவிடலாம். நேரம் ஆகஆக மூளை செல்கள் உயிரிழப்பு அதிகரிக்கும். இதனால், நிரந்தர செயல் இழப்பு ஏற்படலாம் அல்லது உயிரிழப்பே ஏற்படலாம். மூளை செல்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைப் பொருத்து பாதிப்பின் அளவு மாறுபடும்.

பக்கவாதம் அறிகுறி
பக்கவாதம் ஏற்படும்போது, திடீரென்று முகம், கை, காலில் உணர்ச்சியற்ற தன்மை அல்லது தளர்ச்சி, உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் இந்த உணர்வு ஏற்படும். குழப்பமான மனநிலை, பேசுவதில் சிரமம், என்ன நடக்கிறது என்பதே புரியாத நிலை, ஒரு கண் அல்லது இரண்டு கண்களிலும் பார்வைத்திறன் குறைவு அல்லது பார்வை இழப்பு ஏற்படலாம்.
நிலைத்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டு, நடக்க, நிற்கக்கூட முடியாமல் தடுமாற்றம் ஏற்படும்.
இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் மூளை, நரம்பு மண்டல சிகிச்சை அளிக்கக்கூடிய வசதி உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். உடனடியாக, அவருக்கு சி.டி அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்படும். இதன்மூலம், என்ன மாதிரியான பாதிப்பு, எந்த இடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவர்கள் கண்டறிவர். அதன் அடிப்படையில், டி.பி.ஏ (Tissue plasminogen activator) என்ற சிகிச்சை அளிக்கப்படும். அதாவது, பக்கவாதம் ஏற்பட்டு மூன்று மணி நேரத்துக்குள் உறைந்த ரத்தத்தைச் சரிசெய்யும் சிகிச்சை அளிக்கப்படும்.
இதுவே, ரத்தக் குழாய் வெடிப்பு காரணமாக ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தால், ரத்தம் உறைவதற்கான மருந்து அளிக்கப்படும். மூளையில் ரத்தம் தங்கி ஏற்படும் அழுத்தத்தைப் போக்க அறுவைசிகிச்சை செய்யப்படும். அதேநேரத்தில், பாதிக்கப்பட்ட ரத்தக் குழாய் சீரமைக்கப்படும். மூளையில் ஏற்பட்ட வீக்கத்தைப் போக்க சிகிச்சை அளிக்கப்படும். சிகிச்சைக்குப் பிறகு சில செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். அது எவ்வளவு பெரிய பாதிப்பு, எந்த இடத்தில் பாதிப்பு என்பதைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, மூளையின் வலது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், உடலின் இடது பக்கத்தில் பாதிப்பு இருக்கும். வலது கையால் எழுதும் பழக்கம் உள்ளவர்களுக்கு காட்சி சார்ந்த பாதிப்பும் இடது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் வலது பக்கத்தில் பாதிப்பு இருக்கும். வலது கையால் எழுதும் பழக்கம் உள்ளவர்களுக்கு மூளையின் இடது பக்கம்தான் மொழியைப் பேச, புரிந்துகொள்ள காரணமாக இருக்கிறது. இதனால், இவர்களுக்கு மொழி தொடர்பான குறைபாடு ஏற்படும்.
மறுவாழ்வு
இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு வருபவர்களுக்கு உடல் செயல் இழப்பு ஏற்படலாம். சிறிய அளவில் செயல் இழப்பு இருந்தால், இழந்த திறனைப் பெறுவதற்கு மறுவாழ்வு சிகிச்சைகள் உள்ளன. தொடர்ந்து இந்த சிகிச்சை பெறுவதன் மூலம், பலரும் தங்கள் வாழ்வை ஓரளவுக்கு மேம்படுத்தியுள்ளனர். முழுமையான செயல் இழப்பு நிகழ்ந்திருந்தால், அதைச் சரிசெய்ய முடியாது. மூளை செல்கள் இறந்துவிட்டால் அவற்றைச் சரிசெய்ய முடியாது, அதற்கு மாற்றாகப் புதிய செல்களும் உற்பத்தியாகாது. ஆனால், மனித மூளை தன்னை மாற்றியமைக்கக்கூடிய தன்மை கொண்டது. பாதிப்படையாத மூளை செல்களைப் பயன்படுத்தி, புதிய வழியில் செயல்பாட்டை மேற்கொள்ள கற்றுக்கொள்வதன் மூலம், வாழ்க்கை நிலையை மேம்படுத்த முடியும். இந்தப் பயிற்சிக் காலம் சற்று சவாலான காலகட்டம்தான். மருத்துவ சிகிச்சையுடன் குடும்பத்தினர் ஒத்துழைப்பும் உதவியும் இருந்தால் மட்டுமே இதை எதிர்கொள்ள முடியும்.
- தொடரும்
சில தவறான நம்பிக்கைகள்!

பக்கவாதத்தைத் தவிர்க்க முடியாது என்ற தவறான நம்பிக்கை உள்ளது. உண்மையில் 80 சதவிகித பக்கவாதத்தைத் தவிர்க்க முடியும்.
பக்கவாதம் வந்தால் சிகிச்சையே இல்லை என்று கருதுகின்றனர். உடனடி சிகிச்சை அளிப்பதன் மூலம் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.
வயதானவர்களுக்குத்தான் பக்கவாதம் வரும் என்ற கருத்து உள்ளது. பால் பேதமின்றி யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதிலும் பக்கவாதம் வரலாம்.
மரபியல் காரணமாகத்தான் பக்கவாதம் ஏற்படுகிறது என்பதும் தவறு. குடும்ப வரலாறு என்பது பக்கவாதத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கச்செய்கிறது தான். ஆனால், ஒவ்வொருவருக்குமே பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.