Published:Updated:

அலர்ஜியை அறிவோம் - 18

அலர்ஜியை அறிவோம் - 18
பிரீமியம் ஸ்டோரி
News
அலர்ஜியை அறிவோம் - 18

வளர்ப்புப் பிராணிகள் ஒவ்வாமை

அலர்ஜியை அறிவோம் - 18

ரண்டு கைகளிலும் அலர்ஜி ஏற்பட்டு, அரிப்பு மற்றும் தடிப்புகளோடு அவதிப்பட்ட எட்டு வயது மகளை, பெற்றோர் அழைத்து வந்திருந்தனர். ஏற்கெனவே அவர்கள் ஒரு டாக்டரைப் பார்த்துவிட்டுத்தான் என்னிடம் வந்திருந்தனர். சோப் அலர்ஜியாகி இருக்கலாம் என்று அவர் சொன்னதால், சோப்பை மாற்றியுள்ளனர்.

“ஆனால், அதிலும் பலன் இல்லை” என்று சொன்னார்கள். நான் அந்தச் சிறுமியைப் பரிசோதித்துவிட்டு, “உங்கள் வீட்டில் நாய் அல்லது பூனையை வளர்க்கிறீர்களா?” என்று கேட்டேன். அவர்களும் “ஆமாம் டாக்டர்! இப்போ ஒரு மாதமாகத்தான் ஒரு பூனையை வளர்க்கிறோம். அதை என் மகள் தூக்கிக் கொஞ்சுவாள்” என்று கூறினார்கள்.

“உங்கள் மகளின் அலர்ஜிக்குக் காரணம் பூனைதான். அவளைப் பூனையிடம் நெருங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அலர்ஜி சரியாகிவிடும். மருந்து ஒன்றும் வேண்டாம்!” என்று சொன்னேன். அவர்கள் என்னை நம்பவில்லை. வளர்ப்புப் பிராணிகளிடம் இருந்தும் அலர்ஜி ஏற்படும் என்பதைப் புரியவைத்து அனுப்பினேன். அடுத்த ஒரு வாரத்தில், “அலர்ஜி சரியாகிவிட்டது டாக்டர்! ரொம்ப நன்றி!” என்று போன் வந்தது.

அலர்ஜியை அறிவோம் - 18

அலர்ஜியை ஏற்படுத்தும் பிராணிகள்

வழக்கத்தில் நாயும் பூனையும்தான் அதிக அளவில் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. என்றாலும், கோழி, கிளி, வாத்து, புறா, வளர்ப்பு மீன், முயல், அணில், குதிரை, எலி போன்றவையும் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும்.

அலர்ஜி ஏற்படும் விதம்

வளர்ப்புப் பிராணிகளின் இறந்த செல்கள், உதிர்ந்த ரோமம், உமிழ்நீர், சிறுநீர், மலக் கழிவுகள் காற்றில் கலப்பதால் நாசி மற்றும் சரும அலர்ஜி ஏற்படுகிறது. பறவைகளின் இறகு, எச்சம், குடல் புழுக்கள் போன்றவையும் அலர்ஜிக்குக் காரணமாகின்றன. பல்லி எச்சம், கரப்பான் பூச்சி மற்றும் பாச்சை பூச்சிகளின் கழிவுகள் அலர்ஜி ஆகும் பொருட்களில் முக்கியமானவை.

இவை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாத அளவில் உள்ளன. எனவே, காற்றில் கலந்து வீட்டில் பல இடங்களிலும் படிந்திருக்கும். முக்கியமாக உடைகள், ஜன்னல் திரைச்சீலைகள், சோஃபா, படுக்கை விரிப்பு, தலையணை உறை, மிதியடி, கழிவறை உபகரணங்கள், கைப்பிடிகள் போன்றவற்றில் பல வாரங்களுக்கு இருக்கும். அப்போது, இவை நம் உடலுக்குள் சென்று அலர்ஜியை ஏற்படுத்தும்.

பூனை, நாய், முயல், கிளி, புறா, கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளைத் தொட்டுத் தூக்கும்போதும், அவற்றோடு விளையாடும்போதும் மேற்சொன்ன அலர்ஜிப் பொருட்கள் நேரடியாகவே உடலில் பட்டு அலர்ஜிக்கான அறிகுறிகளைக் காட்டும்.

இந்த அலர்ஜிப் பொருட்கள் உடலுக்குள் சென்றதும், ஆன்டிஜென்களாகச் செயல்படும். அப்போது, ரத்தத்தில் ‘இம்யூனோகுளோபுலின் இ’ (IgE) எனும் எதிர்ப் புரதம் உருவாகும். இது, ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து, மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை, ரத்தக்குழாய்களை விரிவடையச்செய்து, அங்கு உள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் மூக்கு ஒழுகுவது, தும்மல், சரும அரிப்பு, தடிப்பு, தோல் சிவந்து வீங்குவது போன்றவை ஏற்படுகின்றன.

என்னென்ன அறிகுறிகள்?


எதிர்ப் புரதம் உடலில் எந்த இடத்தில் வினைபுரிகிறதோ அந்த இடத்தில் அலர்ஜிக்கான அறிகுறிகள் தோன்றும். இது ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒருவருக்கேகூட ஒருமுறை ஏற்படும் அறிகுறிகள் அடுத்தமுறை ஏற்பட வேண்டும் என்பது இல்லை. அலர்ஜிப் பொருள் ஒரேமாதிரிதான் என்றாலும், அடுத்தமுறை வேறு அறிகுறிகள் தோன்றலாம்.

சுவாசப்பாதை அறிகுறிகள்: தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கு அடைப்பு, மூக்கு அரிப்பு, வறட்டு இருமல், ஆஸ்துமா, நெஞ்சுஇறுக்கம், சுவாசத்தில் விசில் சத்தம் கேட்பது.

கண்ணில்  ஏற்படும் அறிகுறிகள்: நீர் வடிதல், எரிச்சல், கண்கள் சிவப்பது, இமைகள் வீங்குவது.

சரும அறிகுறிகள்: அரிப்பு, தடிப்புகள், தோல் அழற்சி, கருப்பு நிறத் தடிப்புகள், கரப்பான்நோய்.

மற்றவை: உறக்கமின்மை, சோர்வு, தொண்டை வலி.

என்ன பரிசோதனைகள்?


வழக்கத்தில் எந்த வளர்ப்புப் பிராணியுடன் பழகும்போது ஒவ்வாமை குணங்கள் தோன்றுகின்றன என்பதைக் கவனித்தாலே இந்த நோயைக் கணித்துவிடலாம். தேவைப்பட்டால், ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். வளர்ப்புப் பிராணி ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அந்தப் பிராணியோடு பழகும் காலங்களில் மட்டும் ரத்தத்தில் ஐ.ஜி.இ அளவு (Allergen specific serum IgE) அதிகரித்திருக்கும். அந்தப் பிராணியோடு பழகுவதை நிறுத்திவிட்டால், இந்த அளவும் குறைந்துவிடும். அலர்ஜியை அறிய உதவும் தோல் பரிசோதனைகள் மற்றும் பட்டைப் பரிசோதனைகளும் செய்யப்படும். 

என்ன சிகிச்சை?


அலர்ஜிக்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு சிகிச்சை தரப்படும்.ஆன்டிஹிஸ்டமின், டீகன்செஸ்டன்ட், ஸ்டீராய்டு மருந்துகள் கைகொடுக்கும். மூக்கில் விடப்படும் ஸ்டீராய்டு ஸ்ப்ரே மருந்து உடனடி பலன் கொடுக்கும். அடிக்கடி அலர்ஜி ஆகிறவர்க ளுக்கு ‘இமுனோதெரப்பி’ சிகிச்சை தரப்படும். லுயூக்கோட்ரின் மாற்று மருந்துகளைத் (Leukotriene modifiers) தடுப்பு மருந்தாக டாக்டர் கூறும் கால அளவுக்குத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த அலர்ஜியின் பாதிப்பு மீண்டும் வராமல் இருக்கும்.

- எதிர்வினை தொடரும்

அலர்ஜி டேட்டா!

*இந்தியாவில் 100-ல் 10 பேருக்கு பூனை அலர்ஜி உள்ளது.

*நாய் அலர்ஜி உள்ளவர்கள் இதைவிட இரண்டு மடங்கு அதிகம்.

*வளர்ப்புப் பிராணிகளின் உமிழ்நீரில் உள்ள ஒரு வகை புரதம்தான் அலர்ஜியை ஏற்படுத்துகிறது.

*வளர்ப்புப் பிராணிகளில் அலர்ஜியைக் குறைந்த அளவில் ஏற்படுத்தும் (Hypoallergenic pets)     இனங்களும் உள்ளன.

*ஏற்கெனவே ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வளர்ப்புப் பிராணிகளால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு 30 சதவிகிதம் அதிகம்.

பெட்ஸ் அலர்ஜி தவிர்க்க...

அலர்ஜியை அறிவோம் - 18

*அலர்ஜி உள்ளவர்கள் எந்த ஒரு பிராணியையும் வீட்டில் வளர்க்காமல் இருப்பதே நல்லது. அப்படி வளர்க்க ஆசைப்பட்டால், வீட்டுக்கு வெளியில் தனியாக ஒரு அறையில் வளர்த்தால் அலர்ஜி பாதிப்பு குறையும்.

*பூனை, நாய், முயல், கிளி போன்றவற்றைத் தொட்டுத் தூக்குவது, முத்தம் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்,

*தெருக்களில் உலவும் பிராணிகள் வீட்டுக்குத் தானாக வந்து செல்வதைத் தடுக்க வேண்டும்.

*வீட்டைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது முக்கியம். வீட்டுச் சுவர்கள் மற்றும் ஜன்னல் கம்பியையும் சுத்தப்படுத்த வேண்டும்.

*படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை வாரம் ஒருமுறை வெந்நீரில் ஊறவைத்து, அலசி சுத்தம் செய்ய வேண்டும்.

*வீட்டில் ஏசி போட்டுக்கொண்டால், வளர்ப்புப் பிராணிகளின் எச்சங்கள் காற்றில் பரவுவது குறையும்.

*ஹெப்பா ஃபில்ட்டர் (HEPA filter) பொருத்தப்பட்ட வாக்வம் கிளீனர்கள் மூலம் சோஃபா, மிதியடிகள், படுக்கை விரிப்புகளைச் சுத்தப்படுத்தலாம்.

*திரைச்சீலைகளை அடிக்கடி மாற்ற வேண்டும்.

*படுக்கை அறையில் தட்டுமுட்டு சாமான்களை அடுக்கிவைக்கக் கூடாது.

*அடுக்குமாடியில் வசிப்போருக்கு அலர்ஜி நோய்கள் ஏற்பட கரப்பான் பூச்சிகள்தான் முக்கியக் காரணம். வீட்டில் உள்ள உணவுப் பொருட்களைச் சுகாதாரமுறைப்படி மூடிப் பாதுகாப்பதன் மூலம், கரப்பான் பூச்சி வளர்வதைத் தடுக்க முடியும். மேலும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்து, வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டியதும் முக்கியம்.

*வளர்ந்த நாடுகளில் வளர்ப்புப் பிராணிகளால் அலர்ஜி ஏற்படாமல் இருக்க, தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்கிறார்கள். ஆனால், நம் ஊரில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் காட்டும் ஆர்வத்தை, அலர்ஜி தடுப்பூசி போட்டுக்கொள்வதில் காட்டுவது இல்லை.