Published:Updated:

மனமே நீ மாறிவிடு - 20

மனமே நீ மாறிவிடு - 20
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நீ மாறிவிடு - 20

மனமே நீ மாறிவிடு - 20

மனமே நீ மாறிவிடு - 20

னக்கு இப்படி ஆகும்னு நான் நினைச்சதே இல்லை!’ - எதிர்பாராத துயர்களை எதிர்கொள்ள நேரிடும்போதெல்லாம் நம்மில் பெரும்பாலானோர் உதிர்க்கும் வார்த்தை இது. மனம் ஒரு விபத்தைச் சந்திக்கையில், அதிர்ச்சி அடைகிறது. நடந்ததை நம்ப மறுக்கிறது. ‘இது உண்மைதான்’ என்று அறிந்தவுடன், அது அகந்தையைத் தாக்குகிறது. உடனே, ‘எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?’ என்று சுய பச்சாதாபம் கொள்ளவைக்கிறது. ‘எல்லாம் இருந்தும் எனக்கு இப்படி நடக்கலாமா?’ என்று தர்க்கம் செய்கிறது.

ரொம்ப விவரமான ஆள். பணத்தில் கெட்டி. அவர் பண விஷயத்தில் ஏமாறும்போது, பண நஷ்டத்தைவிட மான நஷ்டம்தான் அவரைப் பெரிதும் பிடுங்கித் தின்கிறது. பெரிய பக்திமான்; கோயில் கோயிலாகச் சென்று பூஜைகள் செய்தவர்; அவர் வாழ்வில் பெரும் சோகம் நடக்கிறது. உடனே, அவர் தனது பெருமை குலைந்ததாகக் கருதிக்கொள்கிறார். போதாக்குறைக்கு சுற்றமும் நட்பும், “உனக்கு இப்படியொரு நிலை வந்திருக்க வேண்டாம்” என்றும், “ஐயோ, பாவம்! த்சொ... த்சொ...” என்றும் பிறர் சொல்கையில் ஆறுதல் கிடைப்பதுபோல் தோன்றினாலும், உள்ளே கழிவிரக்கம் மேலிடுகிறது. உடனே, இயற்கை தனக்கு அநீதி இழைத்துவிட்டதாக நினைக்கிறார். கடவுளை நிந்திக்கிறார். விரக்தியின் உச்சத்துக்குப் போகிறார்.

தர்க்கரீதியாக யோசிப்போம். நமக்கு இது நடக்கக் கூடாது என்றால், யாருக்கு நடக்கலாம்? மற்றவர்களைவிட நாம் உயர்ந்தவர், மேலானவர்; எனவே, இது நமக்கு நடக்கக் கூடாது என்று நினைக்கும் அதிகாரத்தை யார் நமக்குக் கொடுத்தது?

விபத்தில் குடும்பத்தினர் மரணம்; தீவிரவாதத் தாக்குதலில் சிறு பிள்ளைகள் பரிதாபச் சாவு; சுனாமி, பூகம்பம், பெருவெள்ளம் என இயற்கைச் சீரழிவில் கொத்துக் கொத்தாக மாண்டுபோதல்... இவையெல்லாம் ஆட்களைத் தரம் பிரித்தா நடக்கின்றன? யாராக இருந்தால் என்ன? இயற்கையைப் பொறுத்தவரை எல்லாருக்கும் ஒரே நிலைதான்.“இதெல்லாம் நம்மை மீறியவை என்று தெரியும். இருப்பினும், சொந்த சோகங்களை எப்படிப் பார்ப்பது?” என்று நீங்கள் கேட்கலாம்.

மனமே நீ மாறிவிடு - 20

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான துயரம். இவை அனைத்தும், அவரவரின் மகிழ்ச்சியை, கர்வத்தை, நிம்மதியைக் குலைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ‘இந்த நிகழ்வுகளில் எனக்குத் துளியும்் பங்கே இல்லை’ என யாராவது தன் மனசாட்சியைத் தொட்டுச் சொல்ல முடியுமா?

நமது பிரச்னையே ஒப்பீடுகளில்தான் உள்ளது. “அவன் பையன் படிப்புல மக்கு. அவன் கெட்ட கேடுக்கு யு.எஸ் போயிட்டான். நான் இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் என் மகன் பெரிசா வரலையே” என ஏங்குகிற அப்பாக்களைப் பார்த்திருக்கிறோம். நம் பிரச்னைகளை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதில்தான் நிம்மதிக்கான சூட்சுமம் அடங்கியுள்ளது.

கணவனின் அகால மரணமும், அவர் வாங்கி வைத்திருந்த கடன்களும், ஆறு குழந்தைகளின் எதிர்காலமும் அந்தப் பெண்ணின் வாழ்க்கையை தடாலென்று புரட்டிப்போட்டன. ஆனால், அந்தப் பெண்மணி சற்றும் நிலைகுலையாமல், கணவனின் கண்டுபிடிப்பை மூத்த மகனிடம் கொடுத்துத் தொழிலாய் செய்யச்சொன்னார். கடன்காரர்களை அழைத்து, அத்தனை பேரின் கடனையும் குறிப்பிட்ட காலத்துக்குள் அடைப்பதாய் நம்பிக்கை வாக்குறுதி தந்து அனுப்பினார். தன் சிறு பள்ளியை இன்னும் கவனமுடன், அர்ப்பணிப்புடன் நடத்தி, தன் வாழ்க்கையை மட்டும் அல்ல, தன் பிள்ளைகளின் வாழ்க்கையையும் கம்பீரமாகத் தூக்கி நிறுத்தியவர் மறைந்த ஹேமலதா சென்னிகிருஷ்ணன். ‘வெல்வெட்’ சாஷே ஷாம்பு மூலம் தொழிற்புரட்சி செய்த குடும்பத்தின் அன்னை.

அவரின் வாழ்க்கை வரலாற்றை அண்மையில் படித்தேன். ஓரிடத்தில்கூடக் குற்றம் சொல்லுதல் இல்லை; சுயபச்சாதாபம் இல்லை; கிடைத்த வாழ்க்கையை ஏற்று, அதைச் செம்மையாகச் செய்யும் பக்குவம்தான் தெரிந்தது.

‘எக்கார்ட் டோலே’ என்னும் தத்துவ ஆசிரியர் சொல்வார்... ‘எல்லா பிரச்னைகளிலும் உங்களுக்கு மூன்றே மூன்று வழிகள்தான் உள்ளன. ஒன்று, அதை மாற்றுதல்; இரண்டாவது, கைவிட்டு ஓடுதல்; மூன்றாவது, ஏற்றுக்கொள்ளுதல்.’

முதல் இரண்டும் முடியாது என்னும் பட்சத்தில், பிரச்னைகளை ஏற்றுக்கொள்ளுதல்தான் முதிர்ச்சிக்கான அடையாளம். அதுவே, நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். தன்னை, பிறரை, விதியை, கடவுளைக் குற்றம் சொல்லுதல், உங்களை அந்தப் பிரச்னையுடன் காலம் முழுவதும் கட்டிவைக்கும்.

குற்றம் சொல்லுதல் என்பது காலில் கல்லைக் கட்டிக்கொண்டு ஓடுவதற்குச் சமம். அது பெரும் சுமை! காலில் கட்டிய கல்லைக் கழற்றி எறிந்துவிட்டுக் காலாற நடந்து பாருங்கள். வாழ்க்கை இனிக்கும்!

- மாறுவோம்