மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 19

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 19
பிரீமியம் ஸ்டோரி
News
உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 19

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 19

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 19

மூளை நரம்பு மண்டல பாதிப்புகளில், நான்காவது மிகப் பெரிய பிரச்னையாக இருப்பது எபிலெப்சி (Epilepsy) எனப்படும் வலிப்பு நோய். பொதுவாக, வலிப்பு வந்தவர்களின் கையில் இரும்பைக் கொடுத்தால் வலிப்பு சரியாகிவிடும் போன்ற பல்வேறு தவறான நம்பிக்கைகள் உள்ள மூளை பாதிப்பு இது. நம் உடலின் ஒவ்வொரு செயல்பாட்டையும் இயக்குவது, கட்டுப்படுத்துவது மூளைதான். மூளையில் கோடிக்கணக்கான நியூரான்கள் உள்ளன. இவற்றுக்கு இடையேயான மின்னணுத் தொடர்பு மூலம்தான் நம் இயக்கம், நடத்தை, உணர்ச்சிகள், விழிப்புஉணர்வு போன்றவை ஏற்படுகின்றன. இந்த மின்னணுத் தொடர்பில் உருவாகும் தடை அல்லது மாறுதலால் ஏற்படுவதே வலிப்பு நோய். வலிப்பு மட்டும் அல்ல... இயல்புக்கு மீறிய நடத்தை மாறுபாடு, அதீத உணர்வுநிலை, சுயநினைவுஇன்மை போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

மின்சார ஒயர்களில் காப்பர் கம்பிகளைச் சுற்றிலும் பிளாஸ்டிக் ஸ்லீவ் இருப்பதுபோல மூளை நரம்புகளைச் சுற்றிலும் கொழுப்புகள் பாதுகாப்பாக உள்ளன. இந்தக் கொழுப்பின் அளவு குறைந்து, இரண்டு நரம்புகள் நேரடியாகத் தொடர்புகொள்ளும்போது, ஒயரில் ஸ்பார்க் ஏற்படுவது போன்ற பிரச்னைதான் ஃபிட்ஸ். மூளையில் எந்தப் பகுதியில் உள்ள செல் பாதிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, அதன் அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடும். சிலருக்கு கை, கால் வலிப்பு ஏற்படும். சிலருக்கு வலிப்பு சில விநாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை நீடிக்கும். சிலருக்குச் சில விநாடிகள் வெறுமையான நிலை ஏற்படும்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 19

காரணம் என்ன?

குழந்தை பிறக்கும்போது, மூளைக்குப் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் போனால், மூளை திசுக்களில் தழும்புகள் ஏற்படும். இதுவே, வலிப்பு நோய்க்கான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதே போன்று, பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போதும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம். பிறவிக் குறைபாடு, மூளையில் காசநோய், தலையில் காயம் ஏற்படுதல், கிருமித் தொற்று, கட்டி, மூளையின் அபரிமிதமான வளர்ச்சி போன்றவை வலிப்பு வருவதற்கான முக்கியக் காரணங்கள். சிலருக்கு, எதனால் வலிப்பு நோய் வருகிறது என்று கண்டறிய முடியாத நிலைகூட ஏற்படும். இவர்களுக்கு மரபியல்ரீதியான காரணிகளால் ஏற்பட்டு இருக்கலாம்.

குறிப்பாக, 15 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த நோயைப் பொறுத்தவரை 1000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. முறையான மருத்துவ ஆலோசனை பெற்று, சரியான சிகிச்சைமுறைகளைப் பின்பற்றினால் இதன் தாக்கத்தைக் குறைக்கலாம்.

மருத்துவ வரலாறு கேட்டறிவதுடன், ரத்தப் பரிசோதனை, இ.இ.ஜி (EEG), சி.டி, எம்.ஆர்.ஐ, ஃபங்ஷனல் எம்.ஆர்.ஐ போன்ற பரிசோதனைகள் மூலம் வலிப்புக்கான காரணத்தைக் கண்டறியலாம். பெட் ஸ்கேன் (PET Scan) மூலம் மூளையில் எந்தத் திசு அதிகவேகமாகச் செயல்படுகிறது என்பதைக் கண்டறிய முடியும்.

பல நேரங்களில், மாத்திரை மூலமாகவே வலிப்பு நோய் வராமல் தடுக்கலாம். மாத்திரை பலன் அளிக்காத சூழலில், அறுவைசிகிச்சை உள்ளிட்ட வேறு வகையான சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்படும். வலிப்பு நோய் உள்ளவர்களில் இரண்டு சதவிகிதம் பேருக்குத்தான் அறுவைசிகிச்சை தேவைப்படும். அதிலும், மைக்ரோ அறுவைசிகிச்சை மூலமாக, அதீதச் செயல்பாடு கொண்ட திசுவை அகற்றுவதன் மூலம் சரிசெய்துவிடலாம். மிகச் சிறிய இடத்தில் பாதிப்பு இருந்தாலோ, பேச்சு, மொழி, இயக்கம், பார்வை மற்றும் கேட்கும் திறனுக்குக் காரணமான பகுதியில் பாதிப்பு இருந்தாலோ முழுமையான  பரிசோதனைக்கு பின், தூக்கம்-விழிப்பு-தூக்கம் என்ற முறையில் இந்த அறுவைசிகிச்சை செய்யப்படும்.

சிலருக்கு, வேகஸ் நரம்பைத் தூண்டும் அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும். இதில், மார்புப் பகுதியில் பேஸ்மேக்கர் போன்ற கருவி பொருத்தப்படும். இந்தக் கருவியில் இருந்து வெளிவரும் ஒயர்களின் முனையை மூளையின் வேகஸ் நரம்பில் இணைத்துவிடுவர். இந்த ஒயரும் தோலுக்கு அடியிலேயே கொண்டு செல்லப்படும். அதீத செயல்திறன் வெளிப்படும் நேரத்தில், வேகஸ் நரம்பு ஸ்டிமுலேட்டர் கருவியில் இருந்து வெளிப்படும் மின் ஆற்றல் மூளையைத் தூண்டி, பாதிப்பை நிறுத்துகிறது. இதன் மூலம், ஓரளவுக்கு நல்ல பலனைப் பெற முடியும்.

- அலசுவோம்!

வலிப்பு எதிர்கால சிகிச்சை!

டீப் பிரெய்ன் ஸ்டிமுலேஷன் என்ற முறைப்படி, வலிப்புநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆய்வுகள் நடந்துவருகின்றன. இந்தச் சிகிச்சை பயன்பாட்டுக்கு வரும்போது, மூளையிலேயே ஸ்டிமுலேட்டர் கருவி பொருத்தப்படும். வலிப்பு பாதிப்பு ஏற்படப்போகிறது என்பதை அறிந்து, அதற்கு முன்னதாகவே இந்தக் கருவியில் இருந்து மின்சாரம் வெளிப்பட்டு, வலிப்பைத் தடுத்துவிடும்.

அறுவைசிகிச்சை இல்லாத சிகிச்சைமுறைகளும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எம்.ஆர்.ஐ-யில் பார்த்தபடி லேசர் கதிரைச் செலுத்தி பாதிப்புள்ள பகுதிகளை அழிக்கும் தொழில்நுட்பமும் வரக்கூடும். இதன்மூலம், மூளைப் பகுதியில் அறுவைசிகிச்சை செய்து, வலிப்புநோயைத் தடுக்கும் முறைகளுக்கு முடிவு ஏற்படலாம்.