Published:Updated:

அலர்ஜியை அறிவோம் - 19

அலர்ஜியை அறிவோம் - 19
பிரீமியம் ஸ்டோரி
News
அலர்ஜியை அறிவோம் - 19

சூரியஒளி ஒவ்வாமை

அலர்ஜியை அறிவோம் - 19

‘உலகில், சூரியனுக்குக் கீழ் உள்ள எந்தப் பொருளும் மனிதருக்கு அலர்ஜி ஆகலாம், சூரியன் உட்பட!’ - அலோபதி மருத்துவத்தில் இந்தப் பழமொழி மிகவும் பிரபலம். சூரிய ஒளிதான் உலகில் ஜீவராசிகள் உயிர் வாழ்வதற்கு மிக முக்கியக் காரணம். ஆனால், அந்த ஒளியே பலருக்கு அலர்ஜியாகவும் அமைகிறது என்பது வியப்புக்குரிய விஷயம்.

என்ன காரணம்?

இதுவரை நாம் பார்த்த உணவு ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை போன்றவற்றில், உடலில் ஒவ்வாமையைத் தூண்டும்படியான, உடலுக்குப் பிடிக்காத ஒரு புரதப்பொருள் அந்த உணவிலும் மருந்திலும் இருக்கும். அந்தப் பொருளை உடலில் இருந்து வெளியேற்ற ‘இம்யூனோகுளோபுலின் இ’ (IgE) எனும் எதிர்ப்புரதம் ரத்தத்தில் உருவாகிக் காத்திருக்கும். மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இது ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து வினைபுரிந்து அதை வெளியேற்றும். இதுதான் ஒவ்வாமை வினையின் பொதுவான அம்சம்.

ஆனால், சூரிய ஒளியில் இம்மாதிரியான புரதப்பொருள் எதுவும் இல்லை. அப்படியானால், இது எப்படி ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது? இந்தக் கேள்விக்கு இன்னமும் சரியான அறிவியல் விளக்கம் கிடைக்கவில்லை. என்றாலும், சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் நம் சரும அணுக்களைச் சீண்டும்போது, அங்கு ஏற்படும் மாறுபட்ட தன்மையை, ஆன்டிஜென் என்று தற்காப்பு மண்டலம் தவறாகக் கருதி, வினைபுரிகிறது. அப்போது எதிர்வினையாக ‘இம்யூனோகுளோபுலின் இ’ (IgE) உற்பத்தியாகிறது. இதைத் தொடர்ந்து, வழக்கம்போல் மாஸ்ட் செல்கள் தூண்டப்பட்டு, ஒவ்வாமை குணங்கள் உண்டாகின்றன.

அலர்ஜியை அறிவோம் - 19

சூரிய ஒளி ஒவ்வாமை

சூரிய ஒளி ஒவ்வாமை உள்ளவர்கள் வெயிலில் சென்றதும், உடலெங்கும் அரிப்பு ஏற்படும். சருமம் சிவந்து, வட்டமாகத் தடிப்புகள் தோன்றும். அவற்றில் நீர்கோத்துக்கொள்ளும். அதைத் தொடர்ந்து, சருமம் உரியும். ரத்தக்கசிவும் ஏற்படலாம். முக்கியமாக, வெயில்படும் பகுதிகளான முன் கழுத்து, மார்பு, கை, கால்கள், வெளியில் தெரியும் பகுதி ஆகியவற்றில் இந்த அறிகுறிகள் தோன்றும். இதற்கு ‘சோலார் அர்ட்டிகேரியா’ (Solar Urticaria) என்று பெயர்.

சருமம் ஏன் கறுப்பாகிறது?

சருமத்துக்குப் போதிய பாதுகாப்பு இல்லாமல் வெயிலில் அதிக நேரம் அலைகிறவர்களுக்குச் சருமம் கறுப்பாகிவிடுவதைக் கவனித்திருக்கலாம். சூரியக் கதிர்கள் அதிக வெப்பத்துடன் நேரடியாகச் சருமத்தைத் தாக்கும்போது, அதிலுள்ள பி வகை புற ஊதாக் கதிர்கள் சருமத்தின் செல்களில் உள்ள டி.என்.ஏவை அழிக்கின்றன. அந்த அழிவை ஈடுகட்டுவதற்காகச் சருமத்துக்குக் கறுப்பு நிறம் தருகிற மெலனின் நிறமிகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இதன் விளைவால், சருமம் கறுத்துவிடுகிறது. சருமம் தன்னைத்தானே சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக எடுத்துக்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கை என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.

சருமத்தில் எரிச்சல்

அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது, 42 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் கொளுத்தும். அப்போது, புற ஊதாக் கதிர்களின் உக்கிரத்தைத் தாங்கமுடியாமல், சருமமும் அதைச் சார்ந்த ரத்தக்குழாய்களும் விரிந்து, சிவந்துவிடும். அந்த வேளையில் சிஎக்ஸ்சிஎல்5 (CXCL5) எனும் புரதம் சருமத்தில் உற்பத்தியாகும். இது, அருகில் உள்ள நரம்புகளைத் தூண்டும். இதன் விளைவால் சருமத்தில் எரிச்சலும் வலியும் ஏற்படும். இதை ‘வெப்பப் புண்’ (Sun Burn) என்கிறோம்.

யாருக்கு வாய்ப்பு அதிகம்?

ஏற்கெனவே குடும்பத்தில் யாருக்காவது சூரிய ஒளி ஒவ்வாமை இருந்தால், அந்தக் குடும்ப வாரிசுகளுக்கும் இந்தத் தொந்தரவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதுபோல் கரப்பான் நோய், தோல் அழற்சி நோய் போன்ற சருமம் சார்ந்த ஒவ்வாமை குணங்களைக் கொண்டவர்களுக்கும் சூரிய ஒளி ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உண்டு. டெட்ராசைக்ளின், கீட்டோபுரொஃபென் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தும்போதும், சருமத்தில் பூசும் சில அழகு சாதனப்பொருட்கள் மீது சூரிய ஒளி படும்போதும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். ‘லூப்பஸ் எரித்திமட்டோசஸ்’ (Lupus Erythematosus) எனும் ‘தன் ஒவ்வாமை’ நோய் உள்ளவர்களுக்கும் சூரிய ஒளி ஒவ்வாமை ஏற்படுவது உண்டு.

பரிசோதனைகள் என்னென்ன?

ஒவ்வாமைக்கான ரத்தப் பரிசோதனைகள் மற்றும் லூப்பஸ் எரித்திமட்டோசஸ் நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும். புற ஊதாக் கதிர்களைக்கொண்டு பரிசோதிக்கப்படும் ‘போட்டோ டெஸ்ட்’ (Photo test) ஒரு முக்கியமான பரிசோதனை. மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கு ஒவ்வாமை உள்ளதா என்பதை ‘போட்டோ பட்டைப் பரிசோதனை’ (Photo patch test) மூலம் கண்டறியலாம். சருமத்தில் சிறிதளவு திசுவை வெட்டி எடுத்துத் திசுப் பரிசோதனை (Biopsy) செய்தும் ஒவ்வாமைக்குக் காரணம் அறிவது உண்டு.

சிகிச்சை என்ன?


சருமம் எரியத் தொடங்கியதுமே சருமத்தின்மீது குளிர்ந்த நீரால் ஒத்தடம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைத் தொடர்ந்து, அலர்ஜிக்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு மருந்துகள் சாப்பிடலாம். ஆன்டிஹிஸ்டமின் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் உடனே கைகொடுக்கும். மருத்துவர் யோசனைப்படி ஸ்டீராய்டு கலந்த களிம்புகளைச் சருமத்தில் பூசிக்கொள்ளலாம். அழகு சாதனப் பொருட்களால் அலர்ஜி உள்ளவர்கள் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தாலே நோய் கட்டுப்படும். அடிக்கடி இந்த அலர்ஜி ஆகிறவர்களுக்கு ‘போட்டோதெரபி’ (Phototherapy) சிகிச்சை தரப்படும். சிலருக்கு, ஹைட்ராக்சி குளோரோகுயின் எனும் மலேரியா மருந்தும் பலன் தரும்.

- எதிர்வினை தொடரும்

தடுப்பது எப்படி?

அலர்ஜியை அறிவோம் - 19

*கோடையில் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கடுமையான வெயிலில், தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் அலையக் கூடாது. அதிலும் குறிப்பாக, பகல் 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பதுதான் சருமத்துக்குப் பாதுகாப்பு.

*இந்த நேரத்தில் அவசியம் வெளியில் செல்ல வேண்டுமென்றால், எஸ்.பி.எஃப் 25 (Sun Protecting Factor) என்று குறிப்பிடப்பட்டு உள்ள சன்ஸ்கிரீன் லோஷனை உடலின் வெளிப்பகுதிகளில் தடவிக்கொண்டு செல்லலாம். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை இதைத் தடவிக்கொள்ள வேண்டும்.

*வெயிலில் செல்வதற்கு முன்பாக, இந்த லோஷனைத் தடவி, அரை மணி நேரம் கழித்துச் செல்வது, புற ஊதாக்கதிர் வீச்சிலிருந்து சருமத்தை முழுமையாகப் பாதுகாக்க எளிய வழி. உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் குளோஸ் நெக் மற்றும் முழுக்கை ஆடைகளை அணிவது நல்லது.

*புற ஊதாக் கதிர்களைத் தடுக்கிற பிரத்யேக ஆடைகள் தற்போது கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம்.

*கறுப்பு நிற ஆடைகளை அணிந்தால், அவை சூரிய ஒளிக்கதிர்களை அதிகமாக உறிஞ்சும். இது சரும எரிச்சலை அதிகப்படுத்திவிடும். ஆகவே, கோடையில் வெள்ளை நிறப் பருத்தி ஆடைகளை அணிவதே நல்லது.

*மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அதற்கேற்ப அழகு சாதனப்பொருட்களைப் பயன்படுத்தினால், ஒளி ஒவ்வாமையைத் தவிர்க்கலாம்.

அலர்ஜி டேட்டா!

*உலகில் 100-ல் சுமார் 20 பேருக்குச் சூரியஒளி ஒவ்வாமை இருக்கிறது.

*ஆண்களைவிடப் பெண்களுக்கே இந்த     ஒவ்வாமையின் பாதிப்பு அதிகம்.

*பெரும்பாலும் வளரிளம் பருவத்தில்தான் இந்த ஒவ்வாமை முதலில் ஏற்படுகிறது.

*மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தப்படும் சில சன் ஸ்கிரீன் லோஷன்களே இம்மாதிரியான ஒவ்வாமையைத் தூண்டக்கூடும்.

*சூரிய ஒளி ஒவ்வாமை உள்ளவர்கள் எவ்வளவு நேரம் சூரிய ஒளியில் இருந்தால் அதன் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றெல்லாம் யோசிக்க வேண்டியதே இல்லை; சூரிய ஒளி உடலில் பட்டாலே போதும், ஒவ்வாமைக்கான அறிகுறிகள் தோன்றிவிடும். எனவே, இவர்கள் பாதுகாப்பாய் இருக்க வேண்டியது அவசியம்.