Published:Updated:

மனமே நீ மாறிவிடு - 21

மனமே நீ மாறிவிடு - 21
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நீ மாறிவிடு - 21

குடும்பம்

மனமே நீ மாறிவிடு - 21

ம் வாழ்க்கை என்பது நம்முடன் தினசரி அதிக நேரம் பழகும் முக்கியமான சில மனிதர்களின் எண்ணங்களின் தொகுப்பு எனச் சொல்லலாம். எப்படி?

நீங்கள் உங்கள் வாழ்க்கையையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களோடு அதிக நேரம் செலவு செய்யும் நபர்கள் யார், யார்? வாழ்க்கைத் துணை,  பிள்ளைகள்,  மேலதிகாரி,  உடன் பணியாற்றுபவர்கள், பணியாட்கள், வாடிக்கையாளர்கள்... இப்படி ஒரு பட்டியல் போடுங்கள். அதில், யார் யாருடைய எண்ணங்கள் எல்லாம் உங்களை அதிகம் பாதிக்கிறது எனப் பாருங்கள். நீங்கள் அதிக நேரம் செலவழிக்கும் முதல் ஐந்து நபர்களின் பாதிப்பு உங்களிடம் நிச்சயம் இருக்கும். உங்களை அறியாமல் அவர்களின் உணர்வுகள், எண்ணங்கள், பழக்கங்கள், பாவனைகள் என எல்லாவற்றையும் அவர்கள், உங்கள் மீது மெள்ளத் திணிக்கிறார்கள். அது உங்களுக்கு மட்டும் அல்ல; அவர்களுக்கும் தெரியாது. (அதேபோலத்தான் நீங்களும் அவர்களைப் பாதிக்கிறீர்கள் என்பது வேறு விஷயம்!)

எவ்வளவு சுய சிந்தனை இருந்தாலும், தனித்துக் கிடந்தாலும் நாம் அனைவருமே சமூக விலங்குகள் தான். பிறரைப் பார்த்து, கவனித்து இந்த உலகத்தைக் கற்றுக்கொள்கிறோம். அவர்களுக்கும் நமக்கும் இடையே வேறுபாடுகள் தெரிந்தால், ஒன்று நாம் நம்மை மாற்றிக்கொள்ள நினைப்போம்; அல்லது, அவர்களை மாற்ற முயற்சிப்போம். நமக்குள் ஒற்றுமைகளை வளர்ப்பது நம் உறவுகளுக்கு நல்லது; நாம் கூட்டாக வளர்ந்த காலம் முதல் நமக்குள் பொதிந்துகிடக்கும் ஒரு சமூக உளவியல் செய்தி இது. அதனால்தான் நாம் யாரிடமிருந்தும் எதை வேண்டுமானாலும் நகலெடுக்கத் தயாராக இருக்கிறோம்.

கையில் காசு இல்லை என்றாலும், கடன் வாங்கியாவது தீபாவளிக்கு அதிக விலையில் புடவை எடுக்கும் பணிப்பெண் நம்மைப் பாதிக்கிறார். `நாம மட்டும் இப்படிச் சேர்த்துச் சேர்த்துவெச்சு என்னத்தைக் கண்டோம். இந்த முறை போனஸ் பணம் முழுக்கப் போட்டாவது, அந்தக் கல்வெச்ச வளையலை வாங்கிடணும்` என முடிவு செய்வோம். டார்கெட்டில் குறியாக இருக்கும் பாஸ் உங்கள் பிராணனை வாங்குகிறார். எவ்வளவு சபித்தாலும், அவரின் நிர்வாகத் திறனை உள்ளூர வியக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளைத் திட்டுகையில், அவர் வார்த்தைகளை இரவல் வாங்கிக்கொள்வீர்கள். ‘எனக்கு டிஸிப்ளின் முக்கியம்!’, ‘எனக்கு ரீசன்ஸ் வேண்டாம்; ரிசல்ட்தான் வேணும்!’. உங்கள் நாத்தனார் கேரளா சென்று, ஆயுர்வேத சிகிச்சை பெற்றுப் புத்துணர்ச்சியோடு திரும்புகிறார். உடனே, `அலோபதிக்குப் பதிலா நாமும் ஆயுர்வேதம் ட்ரை பண்ணிப் பார்த்தா என்ன?’ என்ற சிந்தனை உங்கள் உள்ளத்தில் ஓடும்.

விற்பனை உளவியலில் ஒரு கூற்று உண்டு. பொருளை விற்க சக்தி வாய்ந்த விளம்பரமுறை, அந்தப் பொருளை வாங்கிப் பயன்படுத்தியவர் அது நன்றாக உள்ளதாகச் சொல்லும் வார்த்தைகள் தரும் நம்பிக்கைதான். இதைத்தான் ‘மவுத் பப்ளிசிட்டி’ என்பார்கள்.

மனமே நீ மாறிவிடு - 21

தினசரி நீங்கள் பேசிப் பழகும் சிலரால் உங்கள் எண்ணங்கள் பாதிக்கப்படுகின்றன என்றால், அதைத் தவிர்ப்பது எப்படி? ஒன்று, அவர்களின் எண்ணங்களைத் தொடர்ந்து தர நிர்ணயம் செய்துபார்ப்பது ஒரு வழி; அல்லது, நல்ல எண்ணங்கள் உள்ளவர்களைத் தேடிச் சென்று அணுக்கமாதல் இன்னொரு வழி.

உங்கள் எண்ணங்களைப் பாதிக்கிறவர்களை நீங்கள் நேரில் பார்த்திருக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. தொலைபேசி முதல் தொலைக்காட்சி வரை இன்று பிறர் கருத்துக்களை நம்மிடம் கொண்டு வந்து குவிக்கின்றன. ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் பல நேரங்களில் நம் மூளையைக் குப்பைக்கூடமாகவே மாற்றிவிடுகின்றன.

 இதனால், ஓர் ஆய்வு செய்வது அவசியமாகிறது. உங்கள் கருத்துக்களைப் பாதிப்பவர்கள் யார், எந்த வழியில் பாதிக்கிறார்கள் என்று பட்டியல் போட்டு எழுதுங்கள். அவர்களை நெருக்கமாகவோ, தள்ளியோ வைக்கும் வசதி உள்ளதா என்றும் கணக்குப் போடுங்கள். உங்கள் மனதுக்குள் குப்பை போட, யாரையும் அனுமதிக்காதீர்கள்.

சில உறவுகளை விலக்குவது கடினம். உங்கள் தந்தையோ, கணவனோ,  எப்போதும் நெகட்டிவ்வாகப் பேசும் நபராக இருக்கலாம். அவர்களைத் தவிர்க்க இயலாது. ஆனால், அவர்களின் இந்தத் தன்மையை உணர்ந்து, அவர்கள் சொல்வதில் சற்று வடிகட்டி ஏற்கப் பழகிக்கொள்ளுங்கள். சொந்தங்கள், சுற்றம், நட்பு, அலுவலகத் தொடர்புகள், பஸ் சிநேகிதம் போன்றவற்றில் கூடுமான அளவு ஆரோக்கிய மானதாகத் தேர்ந்தெடுத்து உறவாடுவது நல்லது. அவசியமானால், பிறர் மனம் நோகாதவாறு சற்று விலகிக்கொள்ளவும் செய்யலாம்.

அதே நேரம், அற்புத எண்ணங்களையும், உணர்வுகளையும், செயல்களையும் கொண்ட மனிதர்களோடும், அமைப்புகளோடும், இயக்கங்களோடும் தூரத்திலிருந்தாவது தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முயலுங்கள். நெருங்கி உறவாடக்கூடத் தேவை இல்லை; ஆனால், அவர்களின் எண்ணங்களை உள்வாங்கிக் கொள்ளலாம். நல்ல புத்தகங்கள், நல்ல தொண்டு நிறுவனங்கள், நல்ல நிகழ்ச்சிகளைத் தேடிச் செல்லுங்கள். இவைதான் நல்ல மனச் செயல்பாட்டுக்கான மூலதனங்கள்.

இசையும் இலக்கியமும் விளையாட்டும் இயல்பாக நல்ல உணர்வுகளைத் தரவல்லவை. இவை போக, உங்கள் ஆர்வத்துக்கும் திறமைக்கும் ஏற்ற வகையில் இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. தேடிச் சென்று சிலவற்றைப் பற்றிக்கொள்ளுங்கள். அவைதான் சின்ன மனிதர்களின் சின்ன எண்ணங்களை மாற்றக்கூடிய மாமருந்துகள்.

மனிதர்களோ, ஊடகமோ, நிகழ்ச்சிகளோ... எதுவானாலும், வருவதை எல்லாம் வாரிச்சுருட்டிக் கொள்ளாதீர்கள். தேர்ந்தெடுத்து இணைத்துக் கொள்ளுங்கள். நம் மனம், தானாக வருவதில் எல்லாம் நேரம் பார்க்காமல் திளைத்துக்கிடக்கும். தேடிப்போகச் சொன்னால், நேரம் பார்க்கும். யோகா வகுப்பு என்றால், ‘எங்கே அதுக்கெல்லாம் நேரம்?’ என்று சாக்குச் சொல்லும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்றால், நேரம் தானாக முளைக்கும். எனவே, உங்கள் எண்ணங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் ஊற்றுக்கள் எவை என்பதைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருங்கள். உங்கள் எண்ணங்களின் பலம்தான், உங்கள் வாழ்க்கையின் பலம்!

- மாறுவோம்