
உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 20

‘நம்முடைய மூளையில் 10 சதவிகிதத்தைக்கூட நாம் பயன்படுத்துவது இல்லை’ என்று சொல்வார்கள். இது சிந்திக்கும் ஆற்றலுக்கோ, படைப்பாக்கத் திறனுக்கோ வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் உண்மையில், முழு மூளையும் இயங்கினால்தான், நம் உடலின் இயக்கம் சீராக இருக்கும். நம் மூளையில், தோராயமாக 10,000 கோடி நியூரான்கள் உள்ளன. உடலில் நடக்கும் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் இந்த நியூரான்களின் இயக்கம்தான் காரணம். மூளையில் உள்ள நியூரான் என்ற செல்கள்தான் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் நடக்கும் விஷயங்களைத் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்ப செயல்படும்படி உடலில் உள்ள தசைகளுக்கும் உத்தரவு கிடைக்கிறது.
ஒவ்வொரு விநாடியும் மூளையில் லட்சக்கணக்கான ரசாயனப் பரிமாற்றங்கள் நடக்கின்றன. இவற்றின் மூலம்தான் தகவல் பரிமாறப்படுகிறது. இந்த ரசாயனங்களுக்கு, `நியூரோடிரான்ஸ்மிட்டர்’ என்று பெயர். இவைதான், நியூரான்களுக்கும் மற்ற செல்களுக்கும் இடையிலான தொடர் சிக்னல் பரிமாற்றத்துக்கு உதவுகின்றன. கிட்டத்தட்ட 10 மூலக்கூறுகள் (Molecules), 50-க்கும் மேற்பட்ட நியூரோஆக்டிவ் புரதங்கள் (Neuroactive Proteins)நியூரோடிரான்ஸ் மிட்டர்களாகச் செயலாற்றுகின்றன. இந்த நியூரோடிரான்ஸ்மிட்டர்கள்கூட, என்ன மாதிரியான செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பது இல்லை. சிக்னல் எந்த ஏற்பிகளால் ஏற்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அவை தீர்மானிக்கப்படுகின்றன.

20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், நியூரான்களுக்கு இடையிலான தொடர்பு, மின்னணு சார்ந்தது என்று கருதினர். ஆனால், ராமோன் ஒய் காஜல் (Ramon y Cajal) என்பவர் இரண்டு நியூரான்களுக்கு இடையேயான தொடர்பில் 20 முதல் 40 நானோமீட்டர் இடைவெளி இருக்கிறது என்று கண்டறிந்தார். இதைத் தொடர்ந்து, நியூரான்கள் ரசாயனங்களை வெளியிடுவதன் மூலம் தகவல்தொடர்பை மேற்கொள்கின்றன எனக் கண்டறிந்தார். பல்வேறு ஆய்வுகள், பரிசோதனைகளுக்குப் பிறகு முதன்முறையாக அசெட்டைல்கோலின் (Acetylcholine) என்கிற நியூரோடிரான்ஸ்மிட்டரைக் கண்டறிந்தார். நியூரோடிரான்ஸ் மிட்டர்களில் முக்கியமானவை காபா (GABA), செரட்டோனின், எண்டார்பின்ஸ், டோபமைன்.
அசெட்டைல்கோலின், நினைவாற்றலுடன் தொடர்புடையது. மேலும் இது, தசைகள் இயக்கம், கற்றல் உள்ளிட்டவற்றுக்கும் துணைபுரிகிறது. இது குறையும்போது, அல்சைமர் போன்ற மறதி பாதிப்பு ஏற்படும்.
வலி மற்றும் உணர்வுகள் சம்பந்தப்பட்ட நியூரோடிரான்ஸ்மிட்டர், எண்டார்பின். உடற்பயிற்சி, கிளர்ச்சியான மனநிலை மற்றும் தாம்பத்திய உறவின்போது இது சுரக்கிறது. பயம், அவசரம், விபத்து போன்ற சூழலிலும் எண்டார்பின் வெளியிடப்படும். மார்பின் (morphine) போன்ற மயக்க மருந்தாகச் செயல்படுகிறது. ஆனால், அதைவிட வலிமையானது இந்த நியூரோடிரான்ஸ்மிட்டர்.
செரட்டோனின், மகிழ்ச்சியான மனநிலை, தூக்கம், செரிமான மண்டல இயக்கம் ஆகியவற்றுக்குத் துணை புரிகிறது. கவனம், எதிர்வினை, போராடுதல் அல்லது தப்பித்து ஓடுதல் போன்ற செயல்பாடுகளுக்குக் காரணமாகிறது நோரெபினிஃப்ரைன் (Norepinephrine). ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. மகிழ்ச்சியான மனநிலைக்கு டோபமைன் எனும் காரணம். ஏதாவது ஒரு விஷயத்துக்கு நம்மை அடிமைப்படுத்தும் ரசாயனம் என்றும் இதைச் சொல்லலாம்.
கருவில் இருக்கும்போது நியூரான்கள் வேகமாக உற்பத்தியாகின்றன. குழந்தை பிறந்த சில காலத்தில், இதன் உற்பத்தி நின்றுவிடுகிறது. உடலின் மற்ற செல்களைப்போல இது மீண்டும் மீண்டும் உற்பத்தியாவது இல்லை. ஒன்று இறந்துவிட்டால், அதற்கு மாற்றாக வேறொரு நியூரான் புதிதாக உருவாவதும் இல்லை. ஆனால், ஒன்றுக்கு ஒன்று புதுப்புது தொடர்புகளை மட்டும் உருவாகிக்கொண்டே செல்கின்றன.
- அலசுவோம்!
நியூரான்கள் பலவிதம்!
கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட நியூரான்கள் உள்ளன. சென்சரி நியூரான்கள், உணர்வு தொடர்பான தகவலைப் பெற்று மூளைக்குக் கொடுக்கின்றன. மோட்டார் நியூரான்கள், உடல் இயக்கத்துக்குக் காரணமாகின்றன. இன்டர்நியூரான் இரண்டு வெவ்வேறு வகையான நியூரான்களுக்கு இடையேயான தொடர்புக்குக் காரணமாக இருக்கிறது.