Published:Updated:

மனமே நீ மாறிவிடு - 22

மனமே நீ மாறிவிடு - 22
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நீ மாறிவிடு - 22

மனமே நீ மாறிவிடு - 22

மனமே நீ மாறிவிடு - 22

ன் புத்தக அடுக்குகளைப் பார்ப்பவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி, “இதில் உள்ள எல்லா புத்தகங்களையும் படித்துவிட்டீர்களா?” என்பதுதான். “இல்லை” என்றவுடன், என்னை வித்தியாசமாகப் பார்ப்பார்கள். பாதி படித்த புத்தகங்களும், முதல் பக்கத்தைக்கூடப் புரட்டாத புத்தகங்களும் ஏராளம். “இத்தனையையும் முழுதாகப் படித்திருந்தால், ஞானியாகி இருப்பீர்கள்” என்றார் ஒரு நண்பர். பலமாக மறுத்தேன். “எத்தனை படித்தாலும், அவை அறிவை மட்டும்தான் வளர்க்கும். மனமலர்ச்சிக்கு இந்தப் புத்தக அறிவு பெரிதாக உதவாது. ஆனால், இவை உதவாது என்று தெரிந்துகொள்ளக்கூட வாசிப்பு அவசியம்” என்றேன்.

ஆயிரம்தான் படித்தாலும், நம் சுபாவம் மாறுவது என்பது பிரம்மப் பிரயத்தனம்தான். தெரியாமல் செய்யும் பிழைகள் குறைவுதான். எல்லாம் தெரிந்தேதான் நாம் பல தவறுகளை செய்கிறோம். படிக்கும்போது நம் அறியாமை விலகி, நம் தவறுகளும் தெளிவாகத் தெரிகின்றன. எல்லா படிப்பும் ஒரு நொடி தவறில் சிதைந்துவிடுகிறது. படிப்பை விடுங்கள்; கோயிலுக்குப் செல்கிறோம்... திரும்பும்போது, புது மனிதர்களாகவா திரும்புகிறோம்? அதன்பின் பாவங்களே செய்வது இல்லையா? ஒவ்வொரு ஊரிலும் இன்று ஒரு சுவாமிஜி இருக்கிறார். யோகா, ஆயுர்வேதம் எல்லாம் கலந்து, சுலபமான டெக்னிக்குகளாகச் சொல்லித் தருவதற்கு இன்று பலப்பல ஆன்மிக மையங்கள் முளைத்துவிட்டன. அந்த வகுப்புகளுக்குப் போய் வந்தவர்கள் எல்லாம் முழு மன, உடல் நலத்தோடு இருக்கிறார்களா என்ன?

‘பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம்’ போல எல்லாம் கொஞ்சம் நேரம் நம்மோடு இருக்கின்றன. பின்பு, இயல்பு நிலையில் நம் சுயரூபம் வந்துவிடுகிறது. அப்படியெனில், வாசிப்பது, சிறப்பு வகுப்புகளுக்குச் செல்வது, கோயிலில் வழிபடுவது எல்லாம் வீணா? நிச்சயமாக இல்லை. எதிர்மறை எண்ணங்களும் நம்பிக்கையின்மையும் நம்மை அசுர வேகத்தில் கீழே இழுக்கையில், நம்மை மேலே எழுப்ப நிறைய முயற்சிகள் தேவை. நம் எண்ணங்களை மேம்படுத்தி, நம் பிறவிச் சுபாவங்களிலிருந்து நம்மை விடுதலை செய்ய முயற்சிகள் தேவை. அது வாசிப்பு, இசை, பக்தி, தியானம், பயணம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அது தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதுதான் விதி. காரணம், ஒரு தீய எண்ணத்தைச் சரிசெய்ய, ஆயிரம் முறை எண்ணங்கள் வேண்டும். அதற்குத்தான் இத்தனைப் பிரயத்தனங்களும்.

மனமே நீ மாறிவிடு - 22

ஒரு சண்டையின்போது சொல்லப்படும் ஒரு தவறான சொல், பல ஆண்டுகள் நினைவில் நிற்கும். ஒரு கடுமையான விமர்சனத்துக்குப் பின், ஆயிரம் பாராட்டுக்கள் இடம் தெரியாமல் போகும். அதனால்தான் உறவுகளில் நல்ல சொற்களும் நல்ல செயல்களும் நிறையத் தேவைப்படுகின்றன.  உறவுகள் பலவீனப்படாமல் இருக்க, அத்தனை நல்ல எண்ணங்களும், சொற்களும், செயல்களும் உரமாகத் தேவைப்படுகின்றன.

மனித உறவுகளைப் புரிந்துகொள்ள, மேம்படுத்த, ‘டிரான்சேஷனல் அனாலிஸிஸ்’ என்னும் உளவியல் சிகிச்சைமுறை ஒன்று உண்டு. அதில், ‘ஸ்ட்ரோக்ஸ்’ (Strokes) என்று ஒரு கருத்தாக்கம் உண்டு. நம்மைத் தொடும் எல்லா விஷயங்களும் ஸ்ட்ரோக்ஸ்தான். கண்பார்வையில் படுதல், தொடுதல், முத்தமிடுதல், கை தட்டுதல், புன்னகைத்தல் எல்லாம் பாசிட்டிவ் ஸ்ட்ரோக்ஸ். கோபமாகப் பார்த்தல், திட்டுதல், அடித்தல், வசைச் சொற்கள் எல்லாம் நெகட்டிவ் ஸ்ட்ரோக்ஸ்.

100 பாசிட்டிவ் ஸ்ட்ரோக்ஸ் கொடுப்பதை ஒரு நெகட்டிவ் ஸ்ட்ரோக் சமன் செய்துவிடுமாம். உறவு என்பது வங்கிக் கணக்கு போன்றது. நிறையச் செலுத்தியிருந்தால் கையிருப்பு மிஞ்சும். நிறைய பாசிட்டிவ் ஸ்ட்ரோக்ஸ் கொடுத்திருந்தால், கொஞ்சம் நெகட்டிவ் ஸ்ட்ரோக்ஸ் கொடுத்தாலும், உறவுகள் பாதிக்காமல் இருக்கும்.

யோகா தெரிந்தால், விடாமல் செய்யுங்கள். இசையோ, பாடலோ, பக்தியோ, கொள்கைப் பிடிப்போ இலக்கியமோ, சமூக சேவையோ எது மனதுக்குப் பிடிக்கிறதோ அதைப் பற்றிக்கொள்ளுங்கள். ஏதோ ஒன்று அவசியம் வேண்டும். நம்மை நாமே நகர்த்திச் செல்ல, நம்பிக்கையைப் புதுப்பிக்க, நேர்மறை எண்ணத்தை ஊக்கப்படுத்த இந்த முயற்சிகள் அவசியமாகின்றன.

ஒரு புத்தகத்தைப் படித்து முடிக்கையில் திருப்தியும், கோயில் சென்றபின் வரும் மனநிம்மதியும், இசையில் லயிக்கும்போது ஏற்படும் அமைதியும், மக்கள் சேவை தரும் நிறைவும் நல்ல வாழ்வின் கிரியா ஊக்கிகள். பிரச்னைகளும், எதிர்மறை எண்ணங்களும், உடலை ஊறு செய்யும் உணர்வுகளும் நம்மைக் கீழே இழுக்கையில், நாம் மேலே பிடித்து ஏறி வர உதவுபவை இவைதான். மேலோட்டமாகப் பார்க்கையில், இவை பெரிய பயன் அளிக்காத செயல்களாகத் தோன்றலாம். ஆனால், இவற்றைத் தொடர்ந்து வெறும் சடங்குகளாகச் செய்துவந்்தால்கூட மாபெரும் பலன்கள் கிடைக்கும். பண்டிகையும், ஊர் கூடலும், திருவிழாவும், கச்சேரியும், விளையாட்டும் எனத் தொடர்ந்து நம் சமூகத்தில் சடங்குகளாக நடைபெறுவது ஏன்? அவை வெறும் ஊர் நிகழ்வுகள் அல்ல; மனித மனங்களின் நலம் காக்கும் காப்பீடுகள்!

- மாறுவோம்!