மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 21

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 21
பிரீமியம் ஸ்டோரி
News
உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 21

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 21

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 21

திங்கட்கிழமை, பனி விழும் காலை நேரம்... அலுவலகம் செல்ல, சாலையைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தார் சாந்தி. நடைபாதைவாசிகள் சாலையைக் கடப்பதற்கான பச்சை சிக்னல் எரிகிறது. சாந்தி உடனே சாலையில் இறங்கி, கடக்க ஆரம்பிக்கிறார். அப்போது, வேகமாக வந்த ஒரு கார் சாந்தியை மிக அருகில் விருட்டென்று கடந்து செல்கிறது. நல்லவேளையாக, சாந்தி மீது கார் மோதவில்லை. என்றாலும், சாந்திக்கு அதீத படபடப்பு, மூச்சுவாங்குதல், பயம், பதற்றம் காரணமாக உடலில் நடுக்கம் ஏற்பட்டது. எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராக இருந்ததால், அழுகையும் வந்தது. கூடவே, சிக்னலை மதிக்்காமல் காரை வேகமாக ஓட்டி வந்த அந்த ஓட்டுநர் மீது கோபம், எரிச்சல் என பலவிதமான உணர்ச்சிகள் அவரிடம் வெளிப்பட்டன. சாந்திக்குள் நடந்த அத்தனை நிகழ்வுகளுக்கும் காரணம், அவரது மூளை. உணர்ச்சிகளைத் தோற்றுவிப்பது மற்றும் வெளிப்படுத்துவதன் மூலம், மூளை நம்மை இயக்குகிறது என்பது எவ்வளவு ஆச்சர்யம்!

இந்தச் சம்பவத்தில், மூளை இரண்டு வகையான சிக்னலை அனுப்பியிருக்கிறது. முதல் தகவல், கார்டெக்ஸ் பகுதிக்குச் செல்கிறது. அங்கு உணர்ச்சிகள் உருவாகின்றன. அதே நேரத்தில், மற்றொரு தகவல் ஹைபோதாலமஸ் பகுதிக்குச் சென்றிருக்கிறது. ஹைபோதாலமஸ், உடலின் எதிர்வினையைக் கட்டுப்படுத்தக்கூடியது. இது பிரச்னையை எதிர்கொள்ளும் வகையில் உடலைத் தயார்படுத்துவதற்கான சிக்னலை அனுப்புகிறது. இதன் வெளிப்பாடுதான் அதிர்ச்சி, மூச்சுவாங்குதல், அழுகை உள்ளிட்டவை.

அன்பு, காதல், மகிழ்ச்சி, துக்கம், கோபம், வெறுமை, வெறுப்பு, சலிப்பு எனப் பலவகை உணர்ச்சிகள் உள்ளன. அது என்ன உணர்ச்சி என்று கேட்டால், யாராலும் இதைத் தெளிவாகச் சொல்ல முடியாது. மருத்துவ உலகமே இன்னமும் இதுகுறித்து ஆராய்ச்சிதான் செய்துகொண்டிருக்கிறது. நம்முடைய உணர்ச்சிகளுக்கு மூளையின் ‘லிம்பிக் சிஸ்டம்’ என்ற பகுதிதான் பொறுப்பு. இதை `உணர்ச்சிபூர்வமான மூளை’ என்று சொல்வார்கள். இங்கேதான், ஹைபோதாலமஸ் சுரப்பி மற்றும் அமிக்டலா (Amygdala), தாலமஸ், ஹிப்போகாம்பஸ் எனும் முக்கியப் பகுதிகள் உள்ளன. ‘பாதாம் வடிவத்தில் இருக்கும் அமிக்டலா’, ஹைபோதாலமஸ் உள்ளிட்டவைதான் இந்த உணர்ச்சிகள் ஏற்படுவதற்கான காரணங்கள்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 21

உணர்ச்சிகள் ஒவ்வொன்றும் நெருங்கிய தொடர்புடையவை; சிக்கலானவை. பெரும்பாலும், இவை குறுகிய காலமே இருக்கக்கூடியவை. அதனால்தான், கோபமாக விவாதிக்கும்போது, `ஏன் நெஞ்சு புடைக்கப் பேசுறே?’ என கேட்பார்கள்.

1950-களில், கனடா நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் ஓல்ட்ஸ் மற்றும் பீட்டர் மில்னர் இருவரும் எலியின் மூளையில் ஒரு மெல்லிய ஊசியைச் சொருகி, அதில் சிறிய அளவில் மின்சாரத்தைப் பாய்ச்சி ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். சந்தோஷத்தில் எலி துள்ளிக் குதித்தது. அதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகள் பெடல் போன்ற ஒரு கருவியை எலியின் கூண்டில் உருவாக்கினர். அந்த பெடலை எலி அழுத்தினால், மூளையில் சொருகியுள்ள ஊசியில் மின்சாரம் பாயும். அது அதற்கு ஒருவித மகிழ்ச்சியை, கிளர்ச்சியை ஊட்டும். கூண்டைச் சுற்றி சுற்றி வந்த எலி அவ்வப்போது அந்த பெடலையும் மிதித்தது. எப்போதெல்லாம் பெடலை அழுத்துகிறதோ, அப்போதெல்லாம் மகிழ்ச்சியில் எலி துள்ளிக் குதித்தது. இந்தச் சந்தோஷத்துக்கு ஆசைப்பட்ட எலி, தொடர்ந்து அந்தப் பெடலை அழுத்திக்கொண்டே இருந்தது. 12 மணி நேரத்தில் அந்த எலி 7,500-க்கும் மேற்பட்ட முறை அந்தப் பெடலை அழுத்தியதாம். இதுதான் மூளையின் `ரிவார்ட் சிஸ்டம்’ எனப்படும் பரிசளிக்கும் அமைப்பைக் கண்டறிய உதவியது. இன்பம் மட்டுமல்ல... வேறு பல உணர்ச்சிப் பகுதிகளும் ஹைபோதாலமஸில் இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

“நள்ளிரவில் நடந்து செல்கையில், சந்தேகப்படும்படி ஒரு நபர் உங்களைத் தொடர்கிறார்” என்றால் உங்கள் இதயம் கனத்து, வேகமாகத் துடிப்பதை உணரலாம். இதற்கு உங்களுடைய அமிக்டலா மிகவும் துடிப்புடன் வேலை பார்க்கிறது என்று அர்த்தம்.

இந்த உணர்ச்சி அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதை விஞ்ஞானிகளால்கூட விளக்க முடியவில்லை. கார்டெக்ஸ் பகுதியில் இருந்து லிம்பிக் சிஸ்டம் பகுதிக்கு உத்தரவு வருகிறது. அங்கு உணர்ச்சி தீர்மானிக்கப்பட்டு, தூண்டப்படுகிறது. இந்தத் தூண்டுதலுக்கு ஏற்ப இன்பம் என்றால் நாரட்ரினலின், எண்டார்பின், செரட்டோனினும் துன்பம் என்றால், அஸிடில்கோலின் (Acetylcholine) என நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் செயல்படுகின்றன.

எல்லோருக்கும் இது ஒரே அளவில் நிகழ்வது இல்லை. நகைச்சுவை காட்சியை பார்க்கிற ஒருவர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்; இன்னொருவர் லேசாகப் புன்னகைக்கிறார்; மூன்றாம் நபர் சிரிக்காமலே உம்மென்று இருக்கிறார். அவரவர் லிம்பிக் சிஸ்டத்தைப் பொறுத்து உணர்ச்சி மாறுபடுகிறது. மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவுக்கு ஏற்ப, நம்மை அறியாமலேயே நாம் செயல்படுகிறோம்; அவ்வளவுதான்!

- அலசுவோம்

சாதுவா? சேதுவா? நிர்ணயிக்கும் அமிக்டலா

அமிக்டலாவின் செயல்பாட்டைக் கண்டறிய பிரத்யேக ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதற்காக, மூளை அறுவைசிகிச்சை செய்யும்போது நோயாளிகளை விழிப்புநிலைக்குக் கொண்டுவந்து, அமிக்டலாவைத் தூண்டி, என்ன மாதிரியான உணர்ச்சிகள் ஏற்படுகின்றன என ஆய்வு செய்தனர். அவர்களில் சிலர், மிகவும் பயம், அபாயமான உணர்வு ஏற்படுவதாகத் தெரிவித்தனர். சிலரது முகமே சோகமாக மாறியதும் தெரிந்தது. அமிக்டலா பாதிக்கப்பட்டாலோ அல்லது நீக்கிவிட்டாலோ கோபம் என்ற உணர்ச்சியே ஏற்படாத சாதுவாகிவிடுவார்களாம்.