Published:Updated:

அலர்ஜியை அறிவோம் - 21

அலர்ஜியை அறிவோம் - 21
பிரீமியம் ஸ்டோரி
News
அலர்ஜியை அறிவோம் - 21

பணி சார்ந்த ஒவ்வாமை

அலர்ஜியை அறிவோம் - 21

டித்து முடித்து வேலைக்குச் செல்வது, வாழ்வில் ஒரு முக்கியமான காலகட்டம். இதை, நம் வாழ்க்கையின் திருப்புமுனை என்றுகூடச் சொல்லலாம். பல கனவுகளோடும் கற்பனைகளோடும் வேலைக்குச் செல்லும்போது, அங்குள்ள சூழல் உடலுக்கு ஒத்துப்போகவில்லை என்றால், அதுவே பல வழிகளில் நம் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்.

வேலை பார்க்கும் இடத்தில் நிலவும் அதிக வெப்பம், அதிகக் குளிர், அதிகக் காற்றழுத்தம், மாசுபட்ட சூழல், வாகனப் புகை, இயந்திரப் புகை, தொழிற்சாலைக் கழிவுகள், வேதிப்பொருட்களின் பயன்பாடு, இயந்திரப் பராமரிப்புப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள், சாயப் பொருட்கள் போன்ற பலவற்றால், சருமத்தில் தொடங்கி குடல் வரை ஒவ்வாமை ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் அதிகம். பணி சார்ந்த இத்தகைய ஒவ்வாமை நோய்கள் (Occupational allergies) உலக அளவில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. இவற்றில் முக்கியமான மூன்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

மூக்கு ஒழுகுதல் (Allergic Rhinitis)

பணி செய்யும் இடத்துக்குச் சென்றதும் தொடர்ச்சியாகத் தும்மல், மூக்கு அடைப்பு, மூக்கு ஒழுகல், மூக்கு அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அது பணி சார்ந்த ஒவ்வாமையால் ஏற்படுகிறது என்று பொருள். பணி செய்யும் இடத்தில் நிலவும் மாசுக்கள், தானியத் தூசு, மரத் தூசு, மாவுத் தூசு, வேதிப்பொருள் தூசு, உலோகத் தூசு, மகரந்தம், பூஞ்சை, நச்சுப் புகை போன்றவை காற்றில் கலந்து வந்து இந்த ஒவ்வாமையை ஏற்படுத்தும். இந்த ஒவ்வாமைப் பொருட்கள் தொடர்ந்து மூக்கினுள் நீண்ட காலம் நுழையும்போது, இவை நுரையீரலில் தங்கிக் குடித்தனம் செய்யும். அப்போது ஆஸ்துமாவும் சேர்ந்துகொள்ளும்.

அலர்ஜியை அறிவோம் - 21

மூச்சிரைப்பு

பணி செய்யும் இடத்தில் தூசு, வேதிப்பொருள், புகை உள்ளிட்ட ஏதாவது ஓர் அலர்ஜிப் பொருள் இருந்தால், ஆஸ்துமா ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. இந்தப் பொருட்களில் ஒன்றோ பலவோ சேர்ந்து நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் (Bronchus) தசைகளையும் மூச்சுச் சிறுகுழல்களையும் (Bronchioles) சுருக்கிவிடுகின்றன. இதனால், மூச்சுப் பாதை சுருங்கிவிடுகிறது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இளைப்பு, இருமல், மூச்சுத்திணறல், வீசிங் போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. ஏற்கெனவே ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் புகை பிடிப்பவர்களுக்கும் இந்த வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். இவர்களுக்கு விடுமுறை நாட்களில் மூச்சிரைப்பு மறைந்துவிடும். இதுவும், இந்த நோயை உறுதிசெய்யும் ஓர் அறிகுறி.

சரும அழற்சி நோய்

சருமம் உலர்ந்து, தடித்து, சொரசொரப்பாகிவிடும். அந்தப் பகுதி கறுஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். பிறகு, வட்ட வடிவில் மீன் செதில்கள் போன்ற தோற்றம் ஏற்பட்டு அரிப்பு, எரிச்சல் ஏற்படும். சிறிய கொப்புளங்கள் தோன்றி அதில் இருந்து நீர் வடியும். குழந்தைகளுக்குக் கன்னம், கழுத்து, உச்சந்்தலை, மணிக்கட்டு, தொடை இடுக்கு, கணுக்கால் ஆகிய பகுதிகளில் சரும அழற்சி கடுமையாகப் பாதிக்கும். பெரியவர்களுக்குக் கழுத்தின் பின்பகுதி, முழங்கால் மூட்டின் பின்பகுதி, முழங்கை மடியும் பகுதி ஆகிய இடங்களில் இந்தப் பாதிப்பு அதிகமாகக் காணப்படும்.

பரிசோதனை, சிகிச்சை என்னென்ன?

அடுக்குத் தும்மல், ஆஸ்துமா, தோல் அழற்சி நோய் ஆகியவை குறித்து கட்டுரைகளில்  விரிவாகப் பார்த்திருக்கிறோம். சுருக்கமாகச் சொன்னால், அலர்ஜிக்கான அறிகுறியை வைத்துப் பரிசோதனை முறை அமையும். நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அமையும். ஆன்டிஹிஸ்டமின், டீகன்செஸ்டன்ட் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் அலர்ஜி குணங்களைக் குறைக்க உதவும். இதைத் தொடர்ந்து, அலர்ஜிக்கான தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

- எதிர்வினை தொடரும்

தடுப்பது எப்படி?

அலர்ஜியை அறிவோம் - 21

முகத்தில் மாஸ்க் அணிவது, பாதுகாப்பான ஆடைகள் அணிவது, கைகளுக்கு உறை அணிவது, கண்ணுக்கு ஒளி காப்புப் பட்டை (Visor) அணிவது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம்.

ஒவ்வாமை தொந்தரவு கடுமையாக இருந்தால், வேலையை மாற்றுவது அல்லது வேலை செய்யும் இடத்தை மாற்றுவது போன்ற ஏற்பாடுகள் தேவைப்படும்.

வேலை முடிந்து திரும்பியதும், வெந்நீரில் குளித்து உடலை நன்கு சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

ஒவ்வாமைத் தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆண்டுக்கு ஒரு முறை, நுரையீரல் மற்றும் தோல் தொடர்பான முழு உடல் பரிசோதனை மற்றும் ஒவ்வாமைப் பரிசோதனைகள் அவசியம்.

லேட்டக்ஸ் ஒவ்வாமை

அலர்ஜியை அறிவோம் - 21

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத் துணைப் பணியாளர்கள் போன்றவர்களுக்கும், சில சமயங்களில் நோயாளிகளுக்கும் ‘லேட்டக்ஸ்’ என்னும் வேதிப்பொருள் ஒவ்வாமை ஆகி, சரும அழற்சி நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. இவர்கள் பயன்படுத்தும் கையுறைகள் (Gloves), கத்தீட்டர், ட்ரிப் செட், வடிகுழாய், செயற்கை மூச்சுக்குழாய் போன்றவற்றில் லேட்டக்ஸ் பயன்படுத்தப்படுவதால், இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

புட்டிப்பால் பாட்டிலின் நிப்பிள், பொம்மைகள், பலூன், எலாஸ்டிக் பொருட்கள், டயர்கள், பூட்ஸ்கள், ஒட்டும் டேப்புகள், ஆணுறைகள், பிளாஸ்திரிகள் போன்றவற்றிலும் லேட்டக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இவற்றாலும் சரும அழற்சி நோய் ஏற்படலாம். தற்போது, பழங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்குக்கூட பழங்களின்மீது லேட்டக்ஸ் பூசுகிறார்கள். இம்மாதிரியான பழங்களை நன்றாகச் கழுவத் தவறினால், சரும அழற்சி நோய் வரலாம்.

அலர்ஜி டேட்டா!

அலர்ஜியை அறிவோம் - 21

ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களில் 100-ல் 15 பேருக்குப் பணி சார்ந்த ஒவ்வாமைதான் காரணமாக இருக்கிறது.

பிளாட்டினம் வேலை செய்பவர்களுக்குத்தான் பணி சார்ந்த ஆஸ்துமா அதிகம். 100-ல் 30 பேருக்கு இது ஏற்படுகிறது.

கட்டட வேலை செய்பவர்களுக்குப் பணி சார்ந்த ‘தொடு தோல் அழற்சி நோய்’ (Contact dermatitis) அதிகம்.

சரும ஒவ்வாமையை ஏற்படுத்துவதில் சிமென்ட் தூசுக்கு அதிகப் பங்கு உள்ளது.