
மயோனைஸ் தேவையா?

சாண்ட்விச், தந்தூரி, கிரில்டு சிக்கன், ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ், சமோசா, கட்லெட்... என எந்த உணவைச் சாப்பிட்டாலும், கூடவே ஒரு வெள்ளை நிற க்ரீம் வைக்கப்படும். அதுதான் மயோனைஸ் (Mayonnaise). முன்பிருந்த தக்காளி சாஸ் இடத்தை இப்போது மயோனைஸ் பிடித்துவிட்டது. குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் அதிகம் விரும்பிச் சாப்பிடும் உணவு இது. முட்டை, எண்ணெய், உப்பு சேர்த்து தயாரிக்கப்படும் இது அதிகக் கொழுப்புச் சத்து நிறைந்தது. கார்போஹைட்ரேட் அதிகம் சாப்பிடும் நம் ஊரில், அதிகக் கொழுப்பையும் சேர்த்து எடுக்கும்போது உடல்பருமன் முதல் பல்வேறு பாதிப்புகளுக்கு அதுவே காரணமாகிவிடும்.

இதில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன...
*இதில், 70 - 80 சதவிகிதம் கொழுப்பு மட்டுமே இருக்கிறது.
*அதிக கலோரிகள் கொண்டது. ஒரு டேபிள்ஸ்பூனில் 100 கலோரிகள் உள்ளன.
*சோடியம் (Sodium) அதிக அளவில் இருக்கிறது. ஒரு டேபிள்ஸ்பூனில் 80 மி.கி சோடியம் இருக்கிறது.
*கடைகளில் தயாரிக்கப்படும் மயோனைஸ்களில், சுவைக்காக மைதா, வொயிட் சாஸ், மோனோ சோடியம் குளூட்டமேட் (MSG) கலக்கப்படுகின்றன. இது, சிலருக்கு தலைவலி, வாந்தி, குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
*வாரத்துக்கு மூன்று முறை என்ற கணக்கில் மயோனைஸைச் சாப்பிட்டு வந்தால், இதய நோய் வரலாம்.
*சராசரியாக ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளும் எண்ணெயின் அளவை விட 40 சதவிகிதம் அதிகமான எண்ணெயை மயோனைஸ் மூலமாகச் சாப்பிடுகிறோம்.
*மீண்டும் மீண்டும் சாப்பிடும் உணர்வைத் தூண்டும்; உடல் எடை அதிகரிக்கும்.
மயோனைஸுக்கு மாற்று
வேகவைத்த உருளைக்கிழங்கை சிறிது பால் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்து க்கொண்டு அதில் மிளகு, உப்பு தூவி தொட்டு சாப்பிடலாம்.
தயிர் அல்லது யோகர்ட்டில், எலுமிச்சை சாறு, பூண்டு சாறு தலா அரை டீஸ்பூன், சிறிதளவு மிளகு தூவலாம். புதினா சட்னி, ராய்த்தாகூட நல்ல சைடுடிஷ்தான்.
மயோனைஸ் இல்லாத சாண்ட்விச் வாங்கி சாப்பிடுவது நல்லது. முட்டை இல்லாத மயோனைஸிலும் அதிக எண்ணெய், செயற்கை க்ரீம், கொழுப்பு சேர்க்கப்படுகின்றன. ஆதலால் மயோனைஸை முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது.
- ப்ரீத்தி