
உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 22

‘மூளை என்றால் என்ன?’ என்று கேட்டால், `தலைக்குள், வெள்ளை மற்றும் க்ரே வண்ணப் பொருளால் ஆன, நம் உடல் மற்றும் மனதின் அனைத்துச் செயல்பாடுகளையும் இயக்கும், கட்டுப்படுத்தும் உறுப்பு’ என்று இந்தத் தொடரைப் படித்துவரும் எல்லா வாசகர்களும் சொல்லிவிடுவீர்கள். சரி... மனம் என்றால்? யோசிக்கிறீர்களா? சரியாகக் கணிக்க முடியவில்லையா?
பல வாசகர்கள் என்னிடம், `மனம் என்றால் என்ன? எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவது மூளை என்றாலும் மகிழ்ச்சியாக இருந்தாலும் துக்கமாக இருந்தாலும் நெஞ்சுப் பகுதியில் அதை உணர்வது ஏன்? அப்படி என்றால் மனம் என்பது நம் இதயத்தைக் குறிக்குமா என்றெல்லாம் பல்வேறு கேள்விகளைக் கேட்கின்றனர். மனதுக்கும் மூளைக்குமான ஒற்றுமை, வேற்றுமை பற்றிய விவாதம் இன்று நேற்று அல்ல... கி.மு 300-களில் வாழ்ந்த அரிஸ்டாட்டில் காலத்துக்கு முன்புகூட இருந்திருக்கிறது. அரிஸ்டாட்டிலும் பிளேட்டோவும் மனம் என்பது உடலுக்கு வெளியே உள்ள ஒரு விஷயம் என்று விவாதித்திருக்கின்றனர். அரிஸ்டாட்டில் தன் புத்தகத்தில், ‘மனிதன் பிறக்கும்போது வெற்றுப் பலகைபோல பிறக்கிறான். அனுபவங்கள் மற்றும் உணர்ச்சிகள் அவன் மனதை உருவாக்குகின்றன’ என்று தெரிவித்திருக்கிறார்.
விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலத்தில்தான் முடிவு எட்ட முடியவில்லை. நவீன மருத்துவ அறிவியல் முன்னேறி உள்ள இந்தக் காலத்திலாவது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்களா என்றால், ஆச்சர்யப்படும் வகையில், இல்லை என்பதுதான் பதில். மனம் என்றால் இதுதான் என்று பொதுவான, ஒரே தீர்க்கமான முடிவுகள் இதுவரை எட்டப்படவில்லை. மனநல மருத்துவர்கள், மனநல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் என அவரவர் தனித்தனியே ஒரு வரையறையை வைத்திருக்கின்றனர்.
சரி, `மூளைக்கும் மனதுக்கும் என்ன சம்பந்தம்’ என்று கேட்கலாம். மூளையை கம்ப்யூட்டருடன் ஒப்பிடுகிறோம். கம்ப்யூட்டர் இயங்க ஹார்டுவேர் வேண்டும். அந்த ஹார்டுவேரை இயக்க சாஃப்ட்வேர் வேண்டும். சாஃப்ட்வேர் இல்லாமல் வெறும் கம்ப்யூட்டரை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அதேபோல், சாஃப்ட்வேரை மட்டும் வைத்துக்கொண்டு கம்ப்யூட்டரை இயக்க முடியாது. கொஞ்சம் இதுபோன்றதுதான் நம் மூளையும் மனமும். மூளை என்பது ஹார்டுவேர் போன்றது. மனம் என்பது சாஃப்ட்வேர் போன்றது. ஆனால், ஹார்டுவேர், சாஃப்ட்வேர் போன்று அல்லாமல் மிகவும் சிக்கலானது இந்த இரண்டுக்குமான தொடர்பு. இதன் இயக்கம் சூப்பர் கம்ப்யூட்டரைவிட மிக மிக அதிகம்.

`அறிவுக்குத் தெரியுது, மனசுக்குப் புரியலையே’ எனப் பிரச்னையின் போது சொல்வோம். அதாவது, மூளையையும் மனதையும் வெவ்வேறாகக் கருதும் சமுதாயம் நம்முடையது. மூளை ஓர் உறுப்பு, ஆனால், மனம் அப்படி அல்ல. மூளையை நாம் பார்க்க முடியும், மனதைப் பார்க்க முடியாது என்ற கருத்தும் உள்ளது.
ஏன்? எதற்கு? எப்படி? என ஒவ்வொன்றையும் அலசி ஆராய்வது நம் மனது. மனம் என்பது, நினைவுத்திறன், உணர்ச்சிகள், உருவகப்படுத்தும் திறன், காதல், பயம், மகிழ்ச்சி, வெறுப்பு, சலிப்பு, மற்றும் பாலியல் விழைவுகள் எனப் பல பரிமாணங்களில் பயணிக்கிறது என்று சொல்வார்கள். இத்தனைப் பரிமாணங்களையும் தன்உணர்வு எனப்படும் கான்ஷியஸ் என்பதையும் முடிவுசெய்வது நியூரான்கள். மூளைச் செயல்பாட்டின் விளைவுதான் மனம் என்பது மூளை ஆய்வாளர்களின் முடிவு.
மனித மூளையின் அத்தனை ஆச்சர்யங்களும் கான்ஷியஸ்னெஸ் (Consciousness) என்ற தன் உணர்வில்தான் அடங்கியிருக்கின்றன. நம்மை நாமே அறிந்திருக்கும் இந்த உணர்வுதான் விலங்குகளிடம் இருந்து மனிதனை வேறுபடுத்துகிறது. ஒவ்வொரு விலங்கையும் எடுத்துக்கொண்டால், அது தன்னைத் தற்காத்துக்கொள்ள வேகம், வலிமை என்று ஏதாவது ஓர் ஆயுதத்தை வைத்திருக்கிறது. மனிதனிடம் இப்படி எதுவுமே இல்லை. ஆனால், அவனைப் பாதுகாக்கும் ஆயுதமாக கான்ஷியஸ்னெஸ் இருக்கிறது. நியூரான்களுக்கு இடையே ஏற்படும் மின் மற்றும் ரசாயனத் தொடர்பு மூலமாக இது நிகழ்கிறது என்று நியூராலஜி ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனாலும், உண்மையில் அது என்ன என்று அவர்களாலும் விளக்க முடியவில்லை. மூளை யின் ஒவ்வொரு செயல்பாடும் மின்னணு சிக்னல் மூலமாக நடக்கிறது. நியூரான்கள் மூலமாகப் பயணிக்கும் இந்த சிக்னல்கள் அந்தந்்த இடத்தில் ஆராயப்பட்டு, முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சிக்னல்கள் வந்து சேர்வதைப் பொறுத்தே நம்முடைய உணர்ச்சிகள், எண்ணங்கள் உள்ளிட்டவை நிகழ்கின்றன.
இன்றைக்கும் மருத்துவ உலகில், மனித மனம் பற்றிய ஆராய்ச்சி மிகத் தீவிரமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஃபங்ஷனல் எம்.ஆர்.ஐ உள்ளிட்ட கருவிகளைப் பயன்படுத்தி, தொடர்ந்து ஆய்வுகள் நடந்துவருகின்றன. இன்னும் நிறைய ஆய்வுகள் மேற்கொண்டால் மட்டுமே, இன்னும் ஓரளவுக்கு மனித மனதைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள முடியும்.
- அலசுவோம்!