Published:Updated:

மனமே நீ மாறிவிடு - 24

மனமே நீ மாறிவிடு - 24
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நீ மாறிவிடு - 24

மனமே நீ மாறிவிடு - 24

மனமே நீ மாறிவிடு - 24

மைதியைத் தேடி மனிதன் அலையும் அளவுக்கு எந்த உயிரினமும் அலைவது இல்லை. எந்தப் பாதுகாப்பும் இல்லாத மிருகங்கள் இயற்கையுடன் ஒத்திசைந்து வாழும்போது, வாழ்நாள் முழுக்கத் தனக்கு வேண்டியதைச் சேகரிக்கும் மனிதன், எல்லாம் பெற்ற பின்னரும் நிலை இல்லாமல் தவிக்கிறான். மனிதனின் வரம், சாபம் இரண்டுமே அவனுடைய மனம்தான்.

ஒன்றை நூறாக யோசிக்கும் வல்லமை, இல்லாததை இருப்பதுபோலவும், இருப்பதை இல்லாததுபோலவும் நினைக்கும் மனம் சதா சிந்தனைகளின் ஊற்று. சிந்தனைகள் பெரும்பாலும் எதிர்மறையானவை. காரணம், நல்ல எண்ணங்கள் அதிகம் பெருகாது. மகிழ்ச்சியும் அமைதியும் சிந்தனைகளை நிறுத்திவிடும். ஆனால், கவலையும் ஆத்திரமும் பதற்றமும் ஆயிரக்கணக்கான எண்ணங்களாக பெருகிக்கொண்டே இருக்கும். அதனால், மனதை அமைதியாக வைத்திருக்க செய்ய வேண்டியது என்ன? சிந்தனைகளில் இருந்து விடுபடுதல்தான்.

காதல்வசப்படுபவர்கள், சுற்றியுள்ள உலகை மறக்கிறார்கள். மனம் ஒன்றிப் பிரார்த்திக்கையில் வேறு சிந்தனைகள் ஏற்படுவது இல்லை. நுட்பமான வேலை, துல்லியமான கவனம் பிற சிந்தனைகளை மறக்கடிக்கவைக்கிறது. அற்புதமான இயற்கைக் காட்சியைக் கண்டவுடன் ஒரு விநாடியில் தன்னை மறந்துபோவது இதனால்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு செயல் அப்படி மனதை ஒன்றவைக்கும். தன்னையும் புற உலகையும் மறக்கச்செய்யும். இந்தச் செயல்கள் மனதை ஒருமைப்படுத்தி அமைதிகொள்ள வைக்கின்றன. இந்த மனதின் நிலையைத்தான் பௌத்தத் தத்துவத் தில் `சதி’ (Sati - Mindfulness) என்கிறார்கள்.

மனமே நீ மாறிவிடு - 24

விபாஷனா பயிற்சியில் 10 நாட்களுக்கு மேல் மெளனமாக இருந்து, தியானத்தில் மூச்சில் மட்டும் கவனம் செலுத்தப் பயிற்சித் தருகிறார்கள் ஏன்? மனதில் சிந்தனைகளே இல்லாமல் காலியாக சூனிய நிலையை அடைவதுதான் இலக்கு. அதற்கு முதலில் பல்லாயிரம் சிந்னைகளிலிருந்து அதை ஒரு ஒரே சிந்தனை எனக் குறைப்பதுதான் வழி. அதுதான் தியானம். அந்த ஒரே சிந்தனைகொள்ள புத்தர் சொன்ன சிறந்த வழி, மூச்சை நோக்கித் தியானிப்பது என்பதுதான்.

கோயிலுக்குள் எல்லா சிந்தனைகளும் களையப்பட்டு இறைவன் நாமம் மட்டும் மனதில் நிறைந்தால் அதுதான் தியானம். கூட்டத்தில் அடித்துப்பிடித்து, முன் நிற்பவரை நிந்தித்து, வாசல் செருப்பு பற்றியக் கவலையுடன், செய்யப்போகும் எல்லா வேலைகளையும் மனதில் அசைபோட்டால், அங்கு சிந்தனைகள் தியானத்தில் குப்பைபோட ஆரம்பித்துவிட்டன என்றுதான் பொருள். நிறையச் சிந்திப்பவர்கள் நிச்சயம் மகிழ்வோடு இருப்பது இல்லை. சிந்தனைகளை நிறுத்தத் தெரிந்தவர்கள் மனதின் போக்கை மாற்றத் தெரிந்தவர்கள். அவர்கள் தேடாமல் அமைதி அவர்களைத் தேடி வரும்.

மனதை ஓர் எண்ணத்தில் அல்லது ஒரு செயலில் நிறுத்த, பெரிய உத்திகள்கூடத் தேவை இல்லை. செய்யும் செயலைத் தியானமாக நினைத்துச் செய்தால் போதும். அது எந்த வேலை யாக இருந்தாலும் சரி... வேலையை ஈடுபாட்டுடன், மகிழ்வோடு செய்பவர்கள் எல்லோருமே தியானம் செய்பவர்கள்தான். அதனால்தான், வேலை உள்ளபோது மனம் ஆரோக்கியமாக இருக்கிறது. வேறு வேலை இல்லாதபோது சிந்திப்பதை மும்முரமாகச் செய்ய ஆரம்பிக்கிறது மனது. 

மனம் என்பது ஒரு மாய நிலம். ஒரு சின்ன விதை போதும். விநாடிக்குள் அது ஒரு காட்டையே உருவாக்கிவிடும். சின்ன அக்கறை, பயமாக மாறும். ‘இப்படி நடந்தால் என்னாகும்?’ என்று யோசிக்கும். நடக்காத ஒவ்வொரு விஷயத்தையும் நடந்தது போலவே எண்ணித் துடிக்கவைக்கும். பின், அதன் தாக்கம் சொல்லிலும் செயலிலும் பற்றிக்கொள்ளும். மற்றொருவரிடம் பகிர்ந்தால், அவர் தன் பங்குக்குச் சில விதைகள் தந்துவிட்டுப் போவார். எதிர்மறை எண்ணங்கள் காடாக வளர்ந்து பரவும்.

யோசித்துப்பார்த்தால் நாம் கவலைப்படுவதை விட வாழ்க்கை நன்றாகத்தான் போகிறது. கிடைத்ததற்கு நன்றி செலுத்தாமல், கிடைக்காததை எண்ணி அலைவதுதான் நம் இயல்பு. கவலையும் அச்சமும் கோபமும் தேவையற்ற சிந்தனையைப் பெருக்கும் உணர்வுகள். அவற்றை முளையிலேயே கிள்ள, மனம் ஒன்றிச் செய்யும் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடுவது நல்லது. கோபம் வந்தால், வீட்டைக் கழுவி சுத்தம் செய்யுங்கள். பயம் வந்தால், அதை எதிர்கொள்ளும் செயல்களைச் செய்யுங்கள். கவலை என்றால், முதலில் கற்பனையை விட்டுவிட்டு, நிறுத்த முடியாத தொடர் வேலை ஒன்றை எடுத்துச்செய்யுங்கள்.

மனம் அதிகச் சிந்தனைகளால் நிரப்பப்படாமல் இருந்தால், அதை மாற்றுவது எளிது. நம் இலக்கு மனதைக் காலியாகவைத்திருப்பது. மனம், தன்னை மறக்கும் செயல்கள் தெய்வீகமானவை.

வாயில் உள்ள உணவைக் கண்ணை மூடி ருசியுங்கள். காதில் விழும் இசையை முழுமையாக ரசியுங்கள். முகத்தை வருடும் மெல்லிய பூங்காற்றை மேனி சிலிர்க்க நுகருங்கள். நிலாவின் அழகை மெய்மறந்து பாருங்கள். காதலின் களிப்பில் உலகை மறந்து திளையுங்கள்.

மனதைக் கொள்ளையடிக்கும் மந்திரக் கணங்கள் நம் வாழ்வு எங்கும் கொட்டிக்கிடக்கின்றன. மனதை மென்மையாக வைத்திருக்கும் ரகசியம் வாழ்க்கையை ரசித்து வாழ்வதில்தான் உள்ளது!

- நிறைந்தது

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்