மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 23

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 23
பிரீமியம் ஸ்டோரி
News
உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 23

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 23

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 23

னித மூளையைப் புரிந்துகொள்ளும் ஓட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ‘மூளையைப் புரிந்துகொண்டோம் என்றால், மனித வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்’ என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனால்தான், உலகின் மிகப் பெரிய தொழில்துறை வல்லுநர்கள் எல்லாம் மூளை தொடர்பான ஆராய்ச்சிக்கு அதிக நிதி உதவியும் ஆதரவும் அளித்துவருகின்றனர். 2014-ம் ஆண்டு கணக்குப்படி, அமெரிக்கா மட்டுமே 179.4 பில்லியன் அமெரிக்க டாலரை மூளை தொடர்பான ஆராய்ச்சிக்கு ஒதுக்கியிருக்கிறது. 2020-ம் ஆண்டில் இது 238 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் செலவுசெய்யும் தொகை இன்னும் பலமடங்கு அதிகமாக இருக்கும்.

இன்றைக்கு, பார்க்கின்சன், அல்சைமர் உள்ளிட்ட பல்வேறு மூளை நரம்பு தொடர்பான நோய்கள்தான் மிகப் பெரிய பிரச்னை. 1,000-க்கும் மேற்பட்ட மூளை தொடர்பான பிரச்னைகள் உள்ளதாக ‘சொசைட்டி ஆஃப் நியூரோசயின்சஸ்’ சொல்கிறது. உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் இதனால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். `இவற்றுக்குத் தீர்வுகாண, மூளை தொடர்பான ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என்கின்றனர். சாதாரண தலைவலி முதல் மூளை மாற்று அறுவைசிகிச்சை வரை பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. `மூளையை மாற்ற முடியுமா... அப்படி மாற்றினால், புதிய மூளை பொருத்தப்பட்ட உடல் யாரைப் பிரதிபலிக்கும்?’ என்று தோன்றலாம்.

இதுவரை, மூளை மாற்று அறுவைசிகிச்சை நடந்தது இல்லை. ஆனால், தலைமாற்று அறுவைசிகிச்சை நடந்திருக்கிறது. எலிகளுக்கும் நாய்களுக்கும் குரங்குகளுக்கும் நடந்த அறுவைசிகிச்சை தற்போது மனிதர்களுக்கு நடக்கப்போகிறது. இத்தாலியைச் சேர்ந்த ஓர் அறுவைசிகிச்சை நிபுணர், மனிதர்களுக்குத் தலையை மாற்றும் அறுவைசிகிச்சையைச் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 23

சிலர், தலை மாற்று அறுவைசிகிச்சை செய்வது தொடர்பான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 1908-ம் ஆண்டில் ஒரு நாயின் தலைக்கு அருகில், மற்றொரு தலையைப் பொருத்தி அறுவைசிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. இப்படி, கொஞ்சம் கொஞ்சமாக ஆராய்ச்சி முன்னேற்றம் அடைந்து, நாய்களுக்குத் தலை மாற்று அறுவைசிகிச்சை நடத்தப்பட்டது. மூளை நரம்பு அறுவைசிகிச்சை நிபுணரான ராபர்ட் ஜெ.வெயிட், 1970-ம் ஆண்டில் குரங்குகளின் தலையை மாற்றிப் பொருத்தி, அறுவைசிகிச்சை செய்தார். அறுவைசிகிச்சை வெற்றிபெற்றது. ஆனால், புதிதாகத் தலை பொருத்தப்பட்ட குரங்கின் உடல், செயலிழந்துவிட்டது. அதனால் கேட்க, உணர, சுவைக்க, சாப்பிட முடிந்தது. அதன் முன் ஒரு பொருளைக் கொண்டு சென்றால், அதைப் பார்த்தது. பொருளை நகர்த்தும்போது, அதை நோக்கிக் கண்களையும் அசைத்தது. `உடல் உறுப்பு ஏற்றுக்கொள்ளாமை’ என்ற நோய் எதிர்ப்பு சக்தி பிரச்னை காரணமாக ஒன்பது நாட்களில் அந்தக் குரங்கு இறந்துவிட்டது. என்னதான் குரங்குக்கு இந்த ஆராய்ச்சி நடந்திருந்தாலும், இதை `மிக மோசமான காட்டுமிராண்டித்தனம்’ என்று அப்போதே விஞ்ஞானிகள் கண்டனம் தெரிவித்தனர். 
2017-ம் ஆண்டின் இறுதிக்குள், மனிதத் தலையை மாற்றி அறுவைசிகிச்சை செய்யப்போவதாக இத்தாலிய மூளை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர், சார்ஜியோ கேனாவீரோ அறிவித்திருக்கிறார். இதற்காக,

30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறார். இந்த அறுவைசிகிச்சை சீனா அல்லது அமெரிக்காவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதுகெலும்புத் தொடரை வெட்டும் மிகச் சிக்கலான அறுவைசிகிச்சைக்கு மட்டும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் டைமண்ட் நேனோபிளேட் மற்றும் மைக்ரோஸ்கோப் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். சார்ஜியோவின் ஆராய்ச்சியை அடிப்படையாகக்கொண்டு, சமீபத்தில் சீனாவின் பல்கலைக்கழகம் ஒன்று, குரங்குக்கு தலைமாற்று அறுவைசிகிச்சை செய்து பரிசோதனை செய்திருக்கிறது. சில ஆய்வுகளுக்காக, இந்தக் குரங்கின் முதுகெலும்புத் தொடரை இணைக்கவில்லை. இந்தக் குரங்கு 20 மணி நேரங்களுக்கு மேல் உயிரோடு இருந்திருக்கிறது.

மூளை மாற்று அறுவைசிகிச்சை ஒருபுறம் இருக்க, மூளையின் ரகசியங்களைக் கண்டறிவதன் மூலம், அல்சைமர், ஸ்கீஸோப்ரனியா (Schizophrenia) உள்ளிட்ட பல்வேறு மூளை தொடர்பான பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. இதற்காக, மூளையை மேப்பிங் செய்துவருகின்றனர். மூளை நரம்புகளின் தொடர்புகளைக் கண்டறிவதன் மூலம், மூளையின் செயல்பாட்டைக் கண்டறிய ஆய்வுகள் நடக்கின்றன. தற்போது, இந்த ஆய்வுகளின் மூலம், அல்சைமர் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னதாகவே, ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் நிலை உருவாகியுள்ளது.

இதுதான் நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனாலும், ஆய்வு முடிவுகள் ஒவ்வொன்றும் புது நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. இவை அனைத்தும் சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

எழுத்தாக்கம்: பா.பிரவீன் குமார்

மூளைத் தகவலை டவுண்லோடு செய்யலாம்

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 23

மூளையின் ரகசியத்தை வெளிக்கொண்டுவர `நியூரோசயின்ஸ்’ என்ற துறை மிக வேகமாகச் செயல்பட்டுவருகிறது. ஒரு காலத்தில் சூப்பர் கம்ப்யூட்டராகக் கருதப்பட்டவை, இன்று ஒன்றும் இல்லாததாக மாறிவிட்டன. அதேபோல், நம் மூளை உத்தரவுகளுக்குக் கட்டுப்படும் வகையிலான சூப்பர் கம்ப்யூட்டர்களைக்கொண்டு வருவதற்கான ஆய்வுகள் நடந்துவருகின்றன. `2050-களில் மனித மூளையை பேக்அப் எடுக்கும் அளவுக்கு அறிவியல், தொழில்நுட்பம் முன்னேறி இருக்கும்’ என்கின்றனர் விஞ்ஞானிகள்.