மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0
பிரீமியம் ஸ்டோரி
News
உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0

எலும்பின் கதை!புதிய பகுதி!

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0

மது உடலுக்கு வடிவத்தை, உருவத்தைத் தருவது எலும்புகள். உடலின் அசைவிவுக்கு, இடப்பெயர்ச்சிக்கு எலும்புதான் ஆதாரம். மருத்துவம் பற்றிய அறிவு வரத் தொடங்கியதில் இருந்தே எலும்பு தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. கி.மு 6ம் நூற்றாண்டிலேயே அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ முறைகள் பண்டைய இந்தியாவில் முன்னேறியிருந்தன. அறுவைசிகிச்சையின் தந்தை என்று போற்றப்படும் சுஸ்ருதர், எலும்பு முறிவு, எலும்பு அழற்சி மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறார். இதுபற்றி அவரது, ‘சுஸ்ருத ஸம்ஹிதா’ எனும் நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.

நவீன எலும்பு மருத்துவம் என்பது தொடங்கி சில நூற்றாண்டுகள் ஆகின்றன. எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவத்துக்கு ஆங்கிலத்தில், ஆர்த்தோபீடிக்ஸ் என்று பெயர். 1741-ல் நிகோலஸ் ஆன்ட்ரி என்பவர் ஆர்த்தோபீடிக்ஸ் என்று பெயரிட்டார். கிரேக்க மொழியில் ஆர்தோ என்றால் சீராக்கு தல், பீடிக்ஸ் என்றால் குழந்தைகள் என்று அர்த்தம். முதன் முதலில் இது குழந்தைகளுக்கான எலும்பு மருத்துவமாக இருந்தது. பின்னர் அது பெரியவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

மனித எலும்பு ஆறு முக்கியமான பணிகளை செய்கிறது. உடலுக்கு ஆதாரமாக இருக்கிறது, இயக்கத்துக்கு உதவுகிறது, பாதுகாப்பை அளிக்கிறது, ரத்த செல்களை உற்பத்தி செய்கிறது, தாதுஉப்புக்களை சேமித்துவைக்கிறது, நாளமில்லா சுரப்புக்களை ஒழுங்குபடுத்துகிறது. எலும்பின் அமைப்பானது, எலும்பு செல்கள், கால்சியம், பாஸ்பேட் போன்ற தாதுப்புக்கள், எலும்பு மேட்ரிக்ஸ் என எல்லாம் இணைந்த அமைப் பாகும். எலும்பு மேட்ரிக்ஸ் என்பது மிக நுண்ணிய வலை போன்ற பின்னல் அமைப்பு. இந்த அமைப்புதான் எலும்பிற்கு வடிவத் தையும், தாதுஉப்புகள் மற்றும் எலும்பின் செல்களை சேமித்து வைக்கவும் உதவுகின்றது. நம் உடலில் உள்ள கால்சியத்தில் 99 சதவிகிதமும், 85 சதவிகித பாஸ்பேட்டும் எலும்புகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. கால்சியம், பாஸ்பேட் தேவை என்றால் எலும்பில் சேமித்துவைக்கப்பட்ட இந்த தாதுஉப்புக்களை உடல் மீண்டும் பெற்றுக்கொள்ளும். மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பதைப்போல் எலும்பானது தினமும் மாறுதலடைந்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாய் இருப்பது எலும்பு செல்களான ஆஸ்டியோபிளாஸ்ட் (Osteoblasts), ஆஸ்டியோசைட்ஸ் (Osteocytes) மற்றும் ஆஸ்டியோக்ளாஸ்ட்ஸ் (Osteoclasts).

எலும்பு கட்டமைப்பின் உள்ளே வலைபின்னல் போன்ற மேட்ரிக்ஸில் செயலற்று இருக்கும் ஆஸ்டியோபிளாஸ்ட்களை ஆஸ்டியோசைட் என்று அழைக்கின்றோம். இதுதான், கால்சியம் மற்றும் பாஸ்பேட் போன்ற தாதுப்புக்களின் அளவை சரியான அளவில் வைக்க உதவுகின்றது.

புதிய எலும்பு துகள் உருவாக ஆஸ்டியோசைட்ஸ் தூண்டப்பட்டு ஆஸ்டியோபிளாஸ்ட்டுகளாக மாற்றப்படும். உடலுக்கு கால்சியம் அல்லது பாஸ்பேட் தேவையெனில் ஆஸ்டியோக்ளாஸ்ட் ரத்தத்தில் தாதுஉப்புக்களின் அளவை அதிகரிக்க உதவும்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0

கால்சியம் போன்ற தாதுப்புக்களின் தேவையின்போது, எலும்பைச் சுற்றி ஒரு அமிலச்சூழலை உருவாக்கி எலும்பு மேட்ரிக்ஸில் இருந்து கால்சியத்தை வெளியேற்றி, மீண்டும் ரத்ததில் கலக்கச் செய்வது ஆஸ்டியோக்ளாஸ்ட்டின் வேலை. மிகவும் சிக்கலான எலும்புகளின் அமைப்பு, செயல்பாடுகள் பற்றி வரும் இதழ்களில் காண்போம்.

- தொடரும்

எலும்பின் வகைகள்

கார்டிகல் (Cortical) எலும்பு

கார்டிகல் எலும்பானது அடர்த்தி மிகுந்தது, வலிமையானது. கார்டிகல் எலும்பின் முக்கிய பணியானது உள் உறுப்புகளை பாதுகாப்பதாகும். நமது உடலின் எடைக்கு 80 சதவிகிதம் இந்த கார்டிகல் எலும்பே காரணமாகும்.

கேன்சலஸ் (Cancellous) எலும்பு

கேன்சலஸ் வகை எலும்பானது கார்டிகல் வகை எலும்பை விட அடர்த்தி குறைந்து காணப்படுவதால் இது மென்மையான, பலவீனமான எலும்பாகும். பெரும்பாலும் இந்த எலும்பானது ஒரு பெரிய எலும்பின் நுனியில் காணப்படும். கால்சியம் அயனிகள் பரிமாற்றத்தில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. கேன்சலஸ் எலும்பில், ரத்த நாளங்கள் மிகுந்து காணப்படுவதால் ரத்த அணுக்கள் உருவாகும் இடமாகவும் உள்ளது.

எலும்பு அமைப்பு

குழந்தை பிறக்கும்போது அதற்கு 300க்கும் மேற்பட்ட எலும்புகள் இருக்கின்றன. குழந்தை வளரும்போது அது, 206 ஆக குறைந்துவிடுகிறது. எலும்பு தன்னுடைய உச்சகட்ட அடர்த்தியை தோராயமாக 20 வயதில் அடைகிறது.

மனித எலும்புக் கூடானது சில விலங்குகளைப் போல, ஆண், பெண் என்று இரு வேறு அமைப்புகளைக் கொண்டது அல்ல. ஆனால், ஆண், பெண் எலும்புக்கூட்டில், சில மாறுதல்கள் மட்டும் இருக்கிறது.பெண்ணின் எலும்புக்கூடு, ஆணின் எலும்புக்கூட்டை ஒத்து இருந்தாலும், பிரசவத்துக்காக இடுப்பு எலும்பில் சில மாறுதல்கள் இருக்கிறது.