மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எலும்பின் கதை! - 2 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0

எலும்பின் கதை! - 2 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0
பிரீமியம் ஸ்டோரி
News
எலும்பின் கதை! - 2 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0

ஹெல்த்செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்

எலும்பின் கதை! - 2 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0

“பால் குடிக்கலாமா... வேண்டாமா? பாலில் இருந்து பெறப்படும் கால்சியம் உடலுக்குத் தேவையா?” என்று எல்லாம் இன்று சர்ச்சைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆரோக்கியமான, வலிமையான எலும்பு வேண்டும் என்றால் கட்டாயம் கால்சியம் தேவை. அந்த கால்சியத்தை கிரகிக்க வைட்டமின் டி-யும் தேவை. என்னதான் போதுமான கால்சியம் சத்து கிடைத்தாலும்... நம்முடைய உடல், எலும்பில் இருந்து சிறிது கால்சியத்தை வெளியேறச் செய்யும். அதற்கு மாற்றாக, அன்றாட உணவில் கிடைத்த கால்சியத்தை எலும்பில் சேர்த்துவைக்கும். இது எலும்பு தன்னை புதுப்பித்துக்கொள்ளவும், மறுகட்டமைப்பு செய்துகொள்ளவும் தினசரி நடக்கும் செயல்.

எலும்பின் கதை! - 2 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0

கால்சியம் ஏன் தேவை?

நம்முடைய உடலால் கால்சியத்தை உருவாக்க முடியாது. உணவின் மூலமாக மட்டுமே நமக்கு கால்சியம் கிடைக்கிறது. அதை எலும்பில் சேமித்து வைத்து, தேவையானபோது உடல் பயன்படுத்திக்கொள்கிறது. நம் உடலில் உள்ள கால்சியத்தில், 99 சதவிகிதம் எலும்புகளில்தான் இருக்கிறது. மீதம் உள்ள 1 சதவிகிதம் மட்டுமே ரத்ததில் கலந்துள்ளது. நமது உடலின் சீரான ரத்த ஓட்டத்துக்கும், ரத்தம் உறைவதற்கும், நரம்பின் இயல்பான இயக்கத்துக்கும் கால்சியத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். கால்சியம் பற்றாக்குறையால் எலும்பு வளர்ச்சி மற்றும் பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். குழந்தைகளுக்கு எலும்பின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்காது.

எலும்பின் அடர்த்தி என்பது, எலும்பில் எவ்வளவு கால்சியம் மற்றும் இதர தாதுஉப்புக்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து மாறுபடும். 25 முதல் 35 வயது காலக்கட்டத்தில் எலும்பு அடர்த்தி மிகச்சிறப்பாக இருக்கும். வயது அதிகரிக்கும்போது, அது குறையத் தொடங்கும். எலும்பு அடர்த்தி மிகவும் குறையும்போது, சாதாரணமாக தடுக்கி விழுந்தாலே எலும்பு உடைதல் பிரச்னை ஏற்படும்.

கால்சியத்தை கிரகிக்க வைட்டமின் டி தேவை என்று சொல்லியிருந்தேன். அதேபோல், கால்சியம் அளவை கட்டுப்படுத்துவதில் பாரா தைராய்டு ஹார்மோன், கால்சிடோனின் ஹார்மோனுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

வைட்டமின் டி

‘வைட்டமின் டி’யானது நமது உடலின் சிறுகுடல் பகுதியிலிருந்து கால்சியம் மற்றும் பாஸ்பேட் போன்ற தாது உப்புக்களை உறிஞ்சிட உதவுகிறது. எலும்பில் உள்ள ஆஸ்டியோகிளாஸ்ட் செல்களைத் (Osteoclast cell) தூண்டி கால்சியம் பெற உதவுகிறது.

வைட்டமின் டி எங்கிருந்து பெறலாம்?

வைட்டமின் டிஐ, நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து பெறுவதைக் காட்டிலும் சூரியனில் இருந்து பெறுவதே அதிகம். பால்  மற்றும் பால் சார்ந்த பொருட்கள், எண்ணெய் சத்து நிறைந்த டுனா போன்ற மீன்கள், காட்லிவர் ஆயில், முட்டைகோஸ், புரோக்கோலி போன்றவற்றிலிருந்தும் ‘வைட்டமின் டி’யைப் பெறலாம்.

சூரிய ஒளியிலுள்ள புற ஊதா பி கதிர்களானவை நமது சருமத்தின் மீது படும்போது வைட்டமின் டி3 உருவாகிறது. நம் சருமத்தின் மீது சூரிய ஒளி படும்போது அதில் உள்ள புறஊதா பி கதிர்கள் உறிஞ்சப்பட்டு வைட்டமின் டி3யின் முந்தைய நிலையை அடைகிறது. பின்னர் அது ரத்தத்தில் கலந்து கல்லீரலை அடைகிறது. அங்கு 25 ஹைட்ராக்சிவைட்டமின் டி (25 hydroxyvitamin d) ஆக மாற்றம் அடைகிறது. அங்கிருந்து சிறுநீரகங்களுக்கு அது கொண்டு செல்லப்பட்டு, சிறுநீரகத்தில் வைத்து டைஹைட்ராக்சி (Dihydroxy) ‘வைட்டமின் டி’யாக மாற்றப்படுகிறது.

வைட்டமின் டி  உற்பத்தியாகும் அளவு, அந்த நாளின் நேரம், நாம் இருக்கும் புவியியல் அமைப்பு மற்றும் சருமத்தின் அமைப்பு இவற்றைக் கொண்டு மாறுபடும். நாம் உபயோகிக்கும் சன்ஸ்க்ரீன்களாலும் வைட்டமின் டி உற்பத்தி தடைப்படுகிறது.

வைட்டமின் டி எவ்வளவு தேவை, வைட்டமின் டி குறைவால் எலும்பில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அறிகுறிகள் பற்றி அடுத்த இதழில் சொல்கிறேன்.

- தொடரும்

கால்சியத்தை டெபாசிட் செய்யுங்கள்...

எலும்பில் கால்சியம் சேமிக்கப்படுவதை, வங்கியில் டெபாசிட் செய்வதுடன் ஒப்பிடலாம். டீன் வயதில், எந்த அளவுக்கு கால்சியத்தை டெபாசிட் செய்கிறோமோ, அந்த அளவுக்கு எதிர்காலத்தில் உறுதியான எலும்பை பெற முடியும். டீன் ஏஜ் முடிந்த ஒரு சில ஆண்டுகளில் இந்த அக்கவுன்ட் க்ளோஸ் ஆகிவிடும். அதன்பிறகு, நீங்கள் என்னதான் முயற்சித்தாலும் டெபாசிட் செய்ய முடியாது. டீன் ஏஜில் எவ்வளவு டெபாசிட் செய்தீர்களோ அதைத்தான் பராமரிக்க முடியும்.

கால்சியம் யாருக்கு, எவ்வளவு தேவை? (தினசரி)


* குழந்தைகள்  600 மி.கி

 10 முதல் 25 வயதினர் 1,400 மி.கி

 25 முதல் 65 வயதினர் 750 மி.கி

* பாலூட்டும் தாய்மார்கள் 2,000 மி.கி

* மாதவிடாய் முடிந்த பெண்கள் 1,500 மி.கி