இளைஞர்களுக்கு மட்டுமல்ல... பெரிய ஆளுமைகளுக்குமேகூட இருக்கும் பெரிய பிரச்னை எது தெரியுமா? உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் போவதுதான். சமூக வலைதளங்களில் பல பிரபலங்கள் மீம்ஸ்களில் வலம் வருவதற்குக் காரணம்கூட அவர்கள், தங்கள் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருக்காததுதான். தேவையான இடத்தில், தேவையான அளவு உணர்வுகளை வெளிப்படுத்தாமல், தாறுமாறாக எமோஷனலாகி, அதனால் ஏற்படும் பிரச்னைகளை நாம் ஒவ்வொருவருமே எதிர்கொண்டிருப்போம். அதற்காக..? அலுவலகத்தில், வீட்டில், நட்பு வட்டத்தில்... என எல்லா இடங்களிலும், எந்தப் பிரச்னை வந்தாலும், பொங்கிவிடாமல் நிதானமாக இருக்க முடியுமா? முடியும். அதைத்தான் ‘எமோஷனல் இன்டலிஜென்ஸ்’ ( Emotional Inetelligence) என்கிறார்கள்.
ஐ.டி துறையில் பணியாற்றும் பலருக்கு, இந்த வார்த்தை மிகப் பிரபலம். இப்போது, அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களும் இது குறித்து அறிய ஆர்வம் காட்டுகிறார்கள். உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருந்து, மன அழுத்தம், மன உளைச்சல், பயம், தூக்கமின்மை உள்ளிட்டவற்றிலிருந்து எப்படி விடுபடலாம் என்பது குறித்து விளக்குகிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.
``எமோஷனல் என்பது ஓர் உணர்வு. உணர்வுகளைக் கொட்டிவிட்டால், மனம் ரிலாக்ஸ் ஆகிவிடும் என்பதால்தான் பலரும் கோபம், சந்தோஷம், துக்கம்... என எந்த உணர்வாக இருந்தாலும் அதை உடனே வெளிப்படுத்திவிடுகிறார்கள். ஆனால், இன்டலிஜென்ஸ் என்பது அறிவுப்பூர்வமானது. எதையும், அதன் வேர் வரை சென்று, அலசி, ஆராய்ந்து, முடிவெடுப்பதுதான் அதன் இயல்பாக இருக்கும். எந்தப் பிரச்னைக்கும் எமோஷனல் மற்றும் இன்டலிஜென்ஸ் என இரண்டு தீர்வுகள் இருக்கும். இரண்டுமே எதிரெதிர்த் திசைகளில் பயணம் செய்பவை. இடம், பொருள், நபர் தெரிந்து, கட்டுப்படுத்தவேண்டிய உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, வெளிப்படுத்தவேண்டியதை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதுதான் எமோஷனல் இன்டலிஜென்ஸ்!
பொதுவாக ஆண், பெண் இருவருமே உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மாறுபட்டவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுவதிலும், அதிகமாக எமோஷனலை வெளிக்காட்டுவதிலும் பெண்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில், ஆண்கள் பின்தங்கியே இருக்கிறார்கள்.
`ப்ரீ ஃபிரன்ட்டல் கார்டெக்ஸ்’ (Pre frontal cortex) என்பது முன் மூளை. இதுதான் உடனடியாக முடிவுகளை எடுக்கிறது. `ஒருத்தரைத் தாக்க வேண்டுமென்றால், உடனே தாக்கிவிடு’ என்று இதுதான் நமக்கு அறிவுறுத்தும். விலங்களுக்கு ப்ரீ ஃபிரன்ட்டல் காக்டெக்ஸ் முன் பக்கம் இருக்கும். குரங்குகளைக் கவனித்தால், அதன் நெற்றிப் பகுதி முன்னால் தூக்கியிருக்கும். முன் மூளை பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். இந்த முன் மூளை மனிதர்களுக்கு மிகச் சிறிய அளவில் இருக்கும். அதனால்தான் நமக்கு நெற்றி துருத்திக்கொண்டு தெரியாமல், நேராக இருக்கிறது.
அதேபோல, மூளையில் லிம்பிக் சிஸ்டம் (Limbic system) என்று ஒன்று உண்டு. அதுதான் எமோஷனலையும் இன்டலிஜென்ஸையும் இணைக்கும் வேலையைச் செய்கிறது. இது விலங்குகளுக்கு இல்லை. நாம் பகுத்தறியும் மனிதர்களாக இருப்பதற்குக் காரணமும் லிபிக் சிஸ்டம்தான்.
நாம் நெருக்கடியான, அவசரமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எதுவாக இருந்தாலும் உடனடித் தீர்வு கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம். பணமே இல்லாமல்கூட, பல பொருள்களை நாம் வாங்கி, குவித்துவிட முடியும். கிரெடிட் கார்டைத் தேய்த்தால் போதும். ஆனால், சரியான நேரத்தில் பணத்தைச் செலுத்த முடியாமல் போனால், மனஅழுத்தத்துக்கு ஆளாகி, சிரமப்படுகிறோம். `நமக்கு இது சரிப்படுமா, இதெல்லாம் தேவைதானா?’ என்பதை யோசித்து எதையும் வாங்கினால் இதுபோன்ற பிரச்னைகள் இல்லை. விருப்பத்துக்கும் அத்தியாவசியத் தேவைக்குமான வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு நடந்தாலே வாழ்க்கை இன்னும் அழகாக மாறிவிடும்.
இதுவரை இயற்கையான நெருக்கடிகளிள்தான் மனிதன் வாழ்ந்து வந்திருக்கிறான். இப்போது, அவன் செயற்கையான நெருக்கடிகளுக்குள்ளும் மாட்டிக்கொண்டு, விழிபிதுங்கி நிற்கிறான். மனிதனுக்குத் தூக்கமும் ஓய்வும் மிக அவசியம். வாழ்க்கையில் நெருக்கடி என்பது இருக்கத்தான் செய்யும். விருப்பங்கள் மாறக்கூடியவை. தேவைகள் மாறாதவை. இதை இளம் தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும். உள்ளுணர்வு சொல்வதையெல்லாம் உடனே செய்துவிடாமல், கொஞ்சம் யோசித்துச் செயல்பட வேண்டும்.
மன உளைச்சலா? பிரச்னையை நண்பர்களிடம் சொல்லுங்கள். ஒருவேளை அதைத் தீர்க்கும் வழிகளை அவர்கள் சொல்லாம்; வழிகாட்டலாம். சோஷியல் மீடியாக்களிலும் செல்போனிலும் உரையாடும் நண்பர்கள்தான் இப்போது பலருக்கும் வாய்த்திருக்கிறார்கள். அதனால்தான், தங்களுடைய பிரச்னைகளுக்கு யாருடைய ஆலோசனையையும் கேட்காமல், தாங்களே உடனடியாக ஏதோ ஒரு முடிவை எடுத்து, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். ஆரோக்கியமான நண்பர்கள் வட்டத்தை உருவாக்கிக்கொண்டால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டுவிடலாம்.
ஐ.டி., அரசியல், விளையாட்டு, வியாபாரம், சினிமா... எந்தத் துறையாக இருந்தாலும், ஒருவர் அதில் மாஸ்டராக வேண்டுமென்றால், அவருக்கு அறிவும் பயிற்சியும் மட்டும் போதாது. எமோஷனல் இன்டலிஜென்ஸ் அவருக்குக் கைவந்தால் மட்டுமே அது சாத்தியம்.
உணர்வுகளை எப்போதும் கட்டுப்பாட்டோடுதான் வெளிப்படுத்த வேண்டும். மனதில் தோன்றிய எல்லாவற்றையும் முழுமையாக வெளிப்படுத்திவிடக் கூடாது. `என் எமோஷன், மற்றவர்களிடம் என்ன மாதிரியான உணர்வை ஏற்படுத்தும்?’ என்பதை யோசித்து, அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும். கூடுமானவரை, உங்களுடைய உணர்வுகள், பிறரைக் காயப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உங்களுடைய மகிழ்ச்சிக்காக செய்கிற ஒரு செயல், பிறரைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். பணத்தைச் செலவழிப்புபோல, நேரத்தைத் திட்டமிட வேண்டும். நம் செயல்களில், எதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்கிற புரிதல் அவசியம். ஆடம்பர விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது. விருப்பங்களைத் தள்ளி வைத்துவிட்டு, அத்தியாவசியத் தேவைகளுக்கு முதலிடம் தர வேண்டும்.
சவால்கள் நிறைந்த அல்லது மன அழுத்தம் தரக்கூடிய ஒரு புதிய இடத்துக்கு நீங்கள் செல்ல நேரலாம். அது போன்ற நேரத்தில், அந்தச் சூழல் பற்றி முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும்; அதற்கேற்பத் திட்டமிட வேண்டும். `அங்கே எப்படி நடந்துகொள்ளலாம்... யாராவது நம்மை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டால், எப்படி ரியாக்ட் செய்யலாம்’ என்கிற தெளிவு வேண்டும். கோபம் என்பது தற்காலிகத் தீர்வு. எனவே, ‘பிறர் நம்மைக் காயப்படுத்தினாலும், நாம் கட்டுப்பாட்டோடு நடக்க வேண்டும்’ என்ற உறுதியிருந்தால், சிக்கலானச் சூழலைக்கூட பதற்றமின்றி எதிர்கொள்ளலாம்!
உங்கள் மீது பிறர் வைத்திருக்கும் மதிப்பீடுகளைச் சிதறடிக்கும் வகையில், எந்த உணர்வையும் வெளிப்படுத்தக் கூடாது. எச்சரிக்கை உணர்வோடு நடக்கவேண்டியது அவசியம். ஒருவருடைய செயலைவைத்து, அவரைக் குறித்த மதிப்பீட்டை உருவாக்கிக்கொள்ளக் கூடாது. ‘சில சூழ்நிலைகளில் அவர்கள் அப்படி நடந்துகொள்கிறார்கள். உண்மையில், அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல’ என்பதை உணர வேண்டும். இதைத்தான் நம் முன்னோர்கள் `சமயோசிதமாகப் பேசு...’, `உஷாராக நடந்துகொள்!’ என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள்” என்கிறார் சிவபாலன் இளங்கோவன்.
``உணரச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கு சிகிச்சைகள், பயிற்சிகள் இருக்கின்றனவா?’’ - உளவியல் ஆலோசகர் சித்ராவிடம் கேட்டோம்...
“எதிரே இருப்பவரின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல்தான் பலரும் உணர்ச்சிவசப்பட்டு, பிரச்னைகளை வரவழைத்துக்கொள்கிறார்கள். இதற்கு சில பயிற்சிகளும் சிகிச்சைகளும் இருக்கின்றன.
அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்களை, இரண்டு வாரங்களுக்கு டைரி எழுதச் சொல்லுவோம். எப்போதெல்லாம் அவர்களுக்கு கோபம்,மகிழ்ச்சி ஏற்பட்டது (சில நேரங்களில் அதிக மகிழ்ச்சிகூட சிக்கலை ஏற்படுத்தும். தன்னிலை மறக்கச் செய்யும்), எந்தச் சூழலில், யாரால் ஏற்பட்டது, போன்றவற்றை குறித்துவைக்கச் சொல்வோம். அவர்கள் எழுதிவைத்திருக்கும் குறிப்புகளைப் பார்த்து, அதற்கு ஏற்றபடி சிகிச்சையளிப்போம்.
எமோஷனை கையாளத் தெரியாதவர்களுக்கு படபடப்பு, கை வியர்த்துப்போவது, மனதில் வேகமான எண்ணங்கள் தோன்றுவதெல்லாம் நடக்கும். வீட்டில் ஒரு குழந்தை பாலைக் கீழே கொட்டிவிட்டால், உடனே கோபப்பட்டு அந்தக் குழந்தையை அடித்துவிடக் கூடாது. ஒரு நிமிடம் யோசித்து, பின் செயல்பட வேண்டும். இதைத்தான் உணர்ச்சிவசப்படும் எல்லாச் சூழல்களிலும் கையாள வேண்டும். இதற்கு இந்த ‘சுயம் அறிதல்’ மிக முக்கியம்.
இதற்கான சில பிரத்யேகப் பயிற்சிகள் இருக்கின்றன.
* தினசரி மூச்சுப்பயிற்சி செய்வது.
* ஒன்றிலிருந்து நூறு வரை மெதுவாக எண்ணுவது.
* கோபம் வரும்போது அதை திசை திருப்ப தண்ணீர் குடிப்பது.
* ஒருவரால் பிரச்னை ஏற்பட்டு நமக்கு கோபம் வந்தால் உடனே அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவது.
* வேகமாக நடப்பது.
* பாட்டுக் கேட்பது போன்றவற்றைச் செய்யலாம்’’ என்கிறார் சித்ரா.