மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வலி இல்லாத பயாப்சி பரிசோதனை! - மாடர்ன் மெடிசின்.காம் - 1

வலி இல்லாத பயாப்சி பரிசோதனை! - மாடர்ன் மெடிசின்.காம் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
வலி இல்லாத பயாப்சி பரிசோதனை! - மாடர்ன் மெடிசின்.காம் - 1

ஹெல்த்கு.கணேசன், பொது மருத்துவர்

டலில் கட்டி ஏற்பட்டவர்களுக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். கட்டி சாதாரணமானதா, புற்றுநோய் சார்ந்ததா என்பதைத் தெரிந்துகொள்ள ‘பயாப்சி’ எனப்படும் ‘திசுப் பரிசோதனை’யை (Tissue biopsy) மேற்கொள்வது உண்டு. மருத்துவர்களுக்கு நோய் கண்டுபிடிக்க உதவும் ஒரு முக்கியமான பரிசோதனை இது.

வலி இல்லாத பயாப்சி பரிசோதனை! - மாடர்ன் மெடிசின்.காம் - 1

‘பயாப்சி’ என்றால் என்ன?

பயாப்சி என்பது நோய் இருப்பதாகச் சந்தேகப்படும் உடல் திசுவிலிருந்து சிறு பகுதியை வெட்டி எடுத்து ஆய்வுக்கூடத்தில் பக்குவப்படுத்தி, சில கண்ணாடித் தகடுகளில் பரப்பி, நுண்ணோக்கியில் பரிசோதிக்கும் முறை. இதை நோயியல் (Pathology) படித்த மருத்துவர்கள்தான் மேற்கொள்ள முடியும்.

அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பயனாளியின் திசுவை வெட்டி எடுத்து, இதற்கென உள்ள குப்பியில் பாதுகாப்பாக வைத்து, இவர்களுக்கு அனுப்பிவைப்பார்கள். நோயியல் மருத்துவர்கள் அந்தத் திசுவில் காணப்படும் செல்களைப் பரிசோதித்து, அவற்றில் அழற்சி உள்ளதா, புற்றுநோய் உள்ளதா, அப்படி இருந்தால் எந்த வகைப் புற்றுநோய், அதன் நிலவரம் (Stages) என்ன என்பன போன்ற பல விவரங்களைத் தெரிவிப்பார்கள். புற்றுநோய்க்கான சிகிச்சைமுறைகளை அமைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது.

வலி இல்லாத பயாப்சி பரிசோதனை! - மாடர்ன் மெடிசின்.காம் - 1


பயாப்சி வகைகள்:

* உடலின் வெளிப்புறத்திலிருந்து திசுவை எடுப்பது ஒரு வகை. உதாரணம்: தோல் திசுப் பரிசோதனை.

* உடலின் உட்புறத்திலிருந்து திசுவை எடுப்பது இன்னொரு வகை. கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், குடல், எலும்பு, ப்ராஸ்டேட் போன்ற உறுப்புகளிலிருந்து திசுவை எடுப்பது இந்த வகை.

* வெளிப்புறத் திசுவை எடுப்பதற்குப் பெரும்பாலும் முன்தயாரிப்புத் தேவையில்லை. வெளிநோயாளியாகவே இதைச் செய்துகொள்ளலாம்.

* உட்புறத் திசுவை எடுப்பதற்கு முன்தயாரிப்பு தேவைப்படும். இதற்கென நேரம் ஒதுக்க வேண்டும். உள்நோயாளியாக இருந்து பரிசோதனைக்குத் தயாராக வேண்டும். மயக்க மருந்து தரவேண்டி இருக்கும்.

* எண்டோஸ்கோப்பி பரிசோதனை மூலம் உணவுக் குழாய், இரைப்பை, நுரையீரல், போன்றவற்றிலிருந்து திசுவை அகற்றிப் பரிசோதிப்பதும் உண்டு.

* அறுவை சிகிச்சைக்கு முன்பு திசுவை எடுத்துப் பரிசோதிப்பதும் உண்டு.

* அறுவை சிகிச்சையின்போது அகற்றப்படும் கட்டியிலிருந்து சிறிய துண்டுத் திசுவை அகற்றிப் பரிசோதிப்பதும் உண்டு.

* அல்ட்ரா சவுண்ட் அல்லது சி.டி.ஸ்கேன் உதவியுடன், பாதிக்கப்பட்ட உள்ளுறுப்பில் ஓர் ஊசிக் குழலைச் செலுத்தி, அங்குள்ள திசுவை அல்லது அங்கு தேங்கியிருக்கும் நீரை உறிஞ்சி எடுத்து, அதைப் பரிசோதனைக்கு அனுப்புவதும் உண்டு (Fine-needle aspiration biopsy - FNAB ). உதாரணமாக தைராய்டு கட்டி, மார்பகக் கட்டி, நெரிக்கட்டி, நீர்க்கட்டி போன்றவற்றைப் பரிசோதிப்பதற்கு இது உதவுகிறது.

சிரமங்கள் என்ன?

பயாப்சி எடுத்த பிறகு சில நாள்களுக்கு வலி ஏற்படுவது இயல்பு. சிலருக்கு அந்த இடத்தில் ரத்தம் கசியவும், புண் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. வீக்கம், காய்ச்சல்கூட வரலாம். இப்பரிசோதனையின் முன் தயாரிப்புக்கு ரத்தப் பரிசோதனை தேவைப்படும். சில நேரம் பயனாளியை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிவரும். பயாப்சி முடிவு தெரிய சில நாள்களிலிருந்து சில வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

இந்தச் சிரமங்களை எல்லாம் களையும் விதமாக இப்போது மருத்துவத்துறைக்குள்  புதிதாக நுழைந்து உள்ளது, திரவத் திசுப் பரிசோதனை (Liquid biopsy).

புதுமையான பரிசோதனை

பயனாளியின் திசுவை அறுத்து  ஆய்வு  செய்வதற்குப் பதிலாக, 10 லிருந்து 15 மில்லி வரை  ரத்தம் மட்டுமே எடுத்துப்  பரிசோதிக்கும் புதிய முறை.

வலி இல்லாத பயாப்சி பரிசோதனை! - மாடர்ன் மெடிசின்.காம் - 1

எப்படி மேற்கொள்ளப்படுகிறது?

இது ஒரு மரபணுச் சரடு பரிசோதனை (DNA test). ரத்த செல்லின் உட்கருவைப் (Nucleus) பிரித்தெடுத்து இது செய்யப்படுகிறது. பொதுவாக, உடலில் புற்றுநோய் இருந்தால், அந்தப் புற்று செல்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து, உடலெங்கும் சுற்றிக்கொண்டிருக்கும். அந்தப் புற்று செல்களில் காணப்படும் மரபணுச் சரடை (ctDNA) வைத்து, புற்றுநோயின் வகை கண்டுபிடிக்கப்படுகிறது. புற்றுநோயின் ஆரம்பத்தில் ஒரு சில மரபணுச் சரடுகளே ரத்தத்தில் காணப்படும். அதையும் இப்பரிசோதனை மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்து புற்றுநோயை உறுதி செய்யலாம்.

தவிரவும், இந்த ஆய்வு மூலம் ஒருவருக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் வருமா என்பதையும், அவரது எதிர்கால சந்ததியினருக்குப் புற்றுநோய் வருமா என்றெல்லாம்கூட அறிய முடியும். குறிப்பாக, மரபணு ரீதியாக பரம்பரையாகத் தாக்கும் சாத்தியக்கூறுகள் கொண்ட நுரையீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், சூலக புற்றுநோய், தோல் புற்றுநோய் ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்து தடுக்கலாம். 

பலன்கள்  என்ன?


புற்றுநோயின் அபாயகரமான அம்சமே, அது பதுங்கியிருந்து தாக்குவதுதான். ஒருவருக்குப் புற்றுநோய் வந்தால் அது பல ஆண்டுகள் ஆனாலும் வெளியே தெரியாமல் போகலாம். ஆனால், மேற்கண்ட பரிசோதனையின் மூலம் குடல், கர்ப்பப் பை, சிறுநீர்ப் பை, நுரையீரல், இரைப்பை, மார்பகம், கணையம், ப்ராஸ்டேட் ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து முழுமையாகக் குணப்படுத்தி விடலாம். மேலும், புற்றுநோய்க்குத் தரப்படும் சிகிச்சை எவ்வளவு பலன் கொடுக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, இது மிக எளிய பரிசோதனை என்பதால், இதுவரை புற்றுநோயாளிகள் அனுபவித்த பயாப்சி வலி இனி இல்லை.

யாருக்கு இது அவசியம்?

பாரம்பர்யத்தில் புற்றுநோய் உள்ள குடும்பத்தினர்கள், புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், கதிர்வீச்சுக்கு ஆளாகிறவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோர் இப்பரிசோதனையைச் செய்துகொண்டால், அவர்களுக்குப் புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ளலாம்.

எங்கு மேற்கொள்வது?

சென்னை, கோவை, பெங்களூரு, புதுதில்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளில் இது மேற்கொள்ளப்படுகிறது.