
ஹெல்த்கு.கணேசன், பொது மருத்துவர்
உங்களுக்கு நாற்பது வயது ஆகிவிட்டதா? அல்சர் இருக்கிறதா? அதான் சார்….. சாப்பிட்டதும் வயிற்றில் வலி, குமட்டல், வாந்தி, ஏப்பம், வயிற்று உப்புசம் போன்றவை தொந்தரவு செய்தது உண்டா? “ஆம்” என்றால், உங்கள் மருத்துவர் “எண்டோஸ்கோப்பி’ (Endoscopy) செய்ய வேண்டும்” என்று சொல்லியிருப்பார். அப்படியானால், இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்.

‘எண்டோஸ்கோப்பி’ என்றால் என்ன?
ஒருவருக்கு அறுவைசிகிச்சை செய்யாமல், உடலுக்குள் இருக்கிற நோய்களை மிக எளிதாகக் கண்டறிய உதவும் ‘உள்நோக்கல் கருவி’க்குப் பெயர் எண்டோஸ்கோப். நம் உடலில் இயற்கையாகவே வாய், காது, மூக்கு, தொண்டை, ஆசனவாய், சிறுநீர்க் குழாய் ஆகிய இடங்களில் துவாரங்கள் அமைந்துள்ளன. இவற்றின் வழியாக வயிறு மற்றும் உடலின் உள் உறுப்புகளைக் காண உதவும் கருவிக்குப் பொதுவான பெயர்தான் எண்டோஸ்கோப். இந்தப் பரிசோதனை முறைக்குப் பெயர் ‘எண்டோஸ்கோப்பி’.
இதில் பல வகை உண்டு. (பார்க்க: பெட்டிச் செய்தி). மருத்துவர்கள் எண்டோஸ்கோப்பி என்று பொதுவாகச் சொன்னால், அது ‘இரைப்பை எண்டோஸ்கோப்பி ’(Gastro endoscopy)யைத்தான் குறிக்கும்.

இரைப்பை எண்டோஸ்கோப்பி
‘இரைப்பை எண்டோஸ்கோப்’ என்பது தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை, முன் சிறுகுடல் ஆகிய உணவுப் பாதை உறுப்புகளைப் பரிசோதிக்க உதவும் கருவி. இதில் ஒரு மீட்டர் நீளத்தில் ஒரு ஃபைபர் குழாய் உள்ளது. இது வளைந்து நெளிந்து செல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
இதைப் பயனாளியின் வாய் வழியாக இரைப்பைக்குள் செலுத்துவார் மருத்துவர். உள்ளே சென்ற குழாயின் முனையில் பல்பு ஒன்று இருக்கும். அதை வெளியிலிருந்தே இயக்கலாம். இக்குழாயின் வெளிமுனையில் லென்ஸ் இருக்கும். பல்பை எரியவிட்டு, அந்த வெளிச்சத்தில் வெளிமுனையில் உள்ள லென்ஸ் வழியாக உணவுப்பாதையை மருத்துவர் ஆராய்வார். இந்த லென்ஸானது, மேற்சொன்ன உணவுப் பாதையின் பகுதிகளைப் பல மடங்கு பெரிதுபடுத்திக் காண்பிக்கும். அப்போது அங்கே நோய் உள்ளதா என்பது தெரிந்துவிடும்.

பயன் என்ன?
உணவுக்குழாய் வால்வுப் பிரச்னை, இரைப்பைப் புண், கட்டி, ரத்தக்கசிவு, முன் சிறுகுடல் புண், அடைப்பு, புற்றுநோய் போன்றவற்றை இதன் மூலம் நேரில் காணமுடியும். பரிசோதனைக்கு உள்ளாகும் பகுதியில் புற்றுநோய் உள்ளது எனச் சந்தேகம் வந்தால், அந்தத் திசுவைக் கிள்ளி எடுத்து, ‘பயாப்சி’ பரிசோதனைக்கு அனுப்பவும் இதில் வசதி உள்ளது. இரைப்பைச் சுரப்பிகளை உறிஞ்சி எடுத்துப் பரிசோதிக்கவும் இது உதவுகிறது. இதன்மூலம் செரிமானக் கோளாறுகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியும்.
மேலும், இந்தப் பரிசோதனையில் அல்சருக்குக் காரணமாக இருக்கிற ‘ஹெலிக்கோபாக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனும் பாக்டீரியா இரைப்பையில் இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
சிகிச்சையும் தர முடியும்!
இது பரிசோதனைக் கருவி மட்டுமல்ல. இதைப் பயன்படுத்தி சில நோய்களுக்குச் சிகிச்சையும் தர முடியும். முக்கியமாக, கல்லீரல் சிரோஸிஸ் மற்றும் குடல்புண் வந்தவர்களுக்கு ரத்தவாந்தியும் ரத்தக்கசிவும் ஏற்படுவதுண்டு. இவர்களுக்கு எண்டோஸ்கோப்பி மூலம் பேண்டிங், ஸ்கிலிரோதெரபி போன்ற சிகிச்சைகளை அளித்து குணப்படுத்த முடியும்.
உணவுக்குழாய் புற்றுநோய் வந்தவர்களுக்கு ERCP எண்டோஸ்கோப்பி மூலம் செயற்கையாக உணவுக் குழாயைப் பொருத்த முடியும். குழந்தைகள் தவறுதலாக நாணயம், ஊக்கு, குண்டூசி, கோலிக்குண்டு, கம்மல், ஹேர்பின் போன்றவற்றை விழுங்கிவிடுவார்கள். இவற்றை அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோப்பி மூலம் எளிதாக வெளியில் எடுத்துவிட முடியும்.
‘என்பிஐ’ (NBI) எண்டோஸ்கோப்பி
இரைப்பை எண்டோஸ்கோப்பியில் நுழைந்துள்ள நவீன தொழில்நுட்பக் கருவி இது. Narrow band imaging என்ற சொற்களின் முதல் எழுத்துச் சுருக்கம்தான் NBI. டிவியில் சாதாரண ஒளித் திரைக்கும் ஹெச்டி ஒளித்திரைக்கும் (HD-TV) வித்தியாசம் இருக்கிற மாதிரிதான் இதுவும்.பொதுவாக, இரைப்பையில் புற்றுநோய் ஓரளவு வளர்ந்த பின்னர்தான் அதை சாதாரண எண்டோஸ்கோப்பியில் காணமுடியும். ஆனால், என்பிஐ எண்டோஸ்கோப்பியில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே தெளிவாகக் காண முடிகிறது.

இது எப்படிச் சாத்தியப்படுகிறது?
அமைப்பில் சாதாரண எண்டோஸ்கோப்பி போலவே இருந்தாலும், இதன் இயக்கவியல் சற்றே வேறுபடுகிறது. வழக்கமாக, உடலில் எந்தப் புற்றுநோய் தோன்றினாலும், அதன் ஆரம்பக்கட்டத்தில் சர்க்கரை உள்ள இடத்தில் எறும்புகள் மொய்ப்பதைப்போல, அதிகமான ரத்தக் குழாய்கள் புதிதாகக் கிளம்பும். அவற்றைத் துல்லியமாக படம் எடுத்துக் காண்பிப்பதே இதன் அடிப்படை அறிவியல்.
உதவும் ஒளி அலைகள்
சாதாரண எண்டோஸ்கோப்பியில் மருத்து வர்கள் பல்பு ஒளியைப் பயன்படுத்தி உள்ளுறுப்புகளைக் கவனிக்கின்றனர் என்றால், என்பிஐ எண்டோஸ்கோப்பியில் நீலம், சிவப்பு, பச்சை என மூன்று ஒளி அலைகளைப் பயன்படுத்தித் திசுக்களைக் கவனிக்கின்றனர்.
நீல ஒளி உணவுப்பாதையின் மேற்புறத் திசுக்களையும், சிவப்பு ஒளி மத்தியப் பகுதிகளையும், பச்சை ஒளி ஆழமான திசுக்களையும் ஊடுருவுகின்றன. அப்போது அங்குள்ள ரத்தக்குழாய்கள் இந்த ஒளிகளை உறிஞ்சுகின்றன. இந்த நிகழ்வை எண்டோஸ்கோப் கருவி படம் பிடித்து வீடியோ திரையில் காண்பிக்கிறது.
மருத்துவர்கள், இயல்பான உணவுப்பாதையின் ரத்த ஓட்டத்துக்கும் புற்றுநோயுள்ள பகுதியின் ரத்த ஓட்டத்துக்கும் உள்ள வேறுபாட்டைக் கணித்து, புற்றுநோயைக் கண்டுபிடிக்கின்றனர். புற்றுநோய் வகை அறிய அப்போதே பயாப்சியும் எடுத்துக்கொள்கின்றனர். இதன் பலனால், புற்றுநோயை மிகவும் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சை கொடுத்து, முழுமையாகக் குணப்படுத்த முடிகிறது. இது தவிர, உணவுப்பாதையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதையும் இது முன்கூட்டியே தெரிவித்துவிடுகிறது. இதன் பலனால், புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ளவும் முடிகிறது.
(தேடுவோம்...)