
ஹெல்த்கு.கணேசன், பொது மருத்துவர்
உங்கள் இடதுபக்க நெஞ்சை உள்ளங்கையால் தொட்டுப் பாருங்கள். ‘லப் டப்… லப் டப்’ என்று இதயம் துடிப்பதை உணர முடிகிறது அல்லவா? அந்தத் துடிப்பு எப்படி ஏற்படுகிறது என்பதை எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா? தாயின் வயிற்றில் கரு உருவான நான்காவது வாரத்தில் தொடங்கும் இதயத் துடிப்பின் இயக்கம், நம் உயிர்மூச்சு இருக்கிறவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

காரணம் என்ன?
இதயத்தின் வலது மேலறையில் ஒரு சிறிய ஜெனரேட்டர் மாதிரியான பயன்பாட்டில் ‘மின் கணு’ (SA Node) உள்ளது. இதுதான் மின்சாரத்தை உற்பத்தி செய்து இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. இந்த மின்சாரத்தை இதயம் முழுவதும் கொண்டு செல்வதற்கு ‘பர்கின்ஞி நார்கள்’ (Purkinje fibers) என்ற அமைப்பும் உள்ளது. இது இதயத்தின் ஒவ்வோர் அறைக்கும் மின்சாரத்தைக் கொண்டு செல்கிறது. இதன் பலனால் இதயம் ஒரே சீராகத் துடிக்கிறது.
நம்முடைய உடல் முழுவதும் ரத்தம் செல்ல வேண்டுமானால் இதயம் ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 100 முறை வரை துடிக்க வேண்டும். இந்த எண்ணிக்கை ஒருவரின் உடல்வாகு, செயல்பாடு, விளையாட்டு, உடற்பயிற்சி, அச்சம், பதற்றம், கவலை, கோபம், நோய்நிலை, மருந்துகள் போன்ற பல காரணங்களால் கூடுவதும் உண்டு; குறைவதும் உண்டு.

இந்த மின் கணுவில் போதுமான அளவுக்கு மின்சாரம் உற்பத்தியாகாவிட்டால் இதயத்துடிப்பு குறைந்துவிடும். அதே நேரம், அதிகமாக மின்சாரம் உற்பத்தியாகி விட்டால் துடிப்பு அதிகரித்துவிடும். இந்த இரண்டுமே ஆரோக்கி யத்துக்கு ஆபத்துதான். துடிப்பு சரியில்லை என்றால், உடல் முழுவதும் ரத்தம் செல்வது தடைப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
உதவிக்கு வரும் பேஸ்மேக்கர்
இதயத்துடிப்பு குறைந்தவர்களின் இதயத்தைச் செயற்கைமுறையில் தூண்டி மீண்டும் சீராகத் துடிக்கச் செய்வதற்கு ‘பேஸ்மேக்கர்’ (Pacemaker) எனும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இதயத்தில் மின் கணு செய்ய வேண்டிய கட்டளையைத் தன் வேலையாக எடுத்துக்கொண்டு செயல்படுவதால், இதைச் ‘செயற்கை மின்கணு’ (Artificial Pacemaker) என்றுகூடச் சொல்லலாம்.

இது ஒரு சிறிய தீப்பெட்டி அளவுக்குத்தான் இருக்கும். 30 கிராம் எடை கொண்ட இக்கருவியில் பேட்டரி, மின் தூண்டல்களை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர், சிறிய எலெக்ட்ரானிக் சர்க்யூட், இதயத்தின் அறைகளுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்லும் வயர்கள் ஆகியவை இருக்கும்.
நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, சிறிய அறுவை சிகிச்சை செய்து, மார்பில் வலது காரை எலும்புக்கு (Clavicle) அருகில், அதிக ஆழம் இல்லாதபடி புதைத்து, தோலைத் தையல்போட்டு மூடிவிடுவார்கள். இதயத்துக்குச் செல்லும் கழுத்துச்சிரை ( Carotid Vein ) எனும் ரத்தக்குழாய் வழியாக இதன் வயரை இதய அறைக்குள் கொண்டுசென்று பொருத்திவிடுவார்கள். இது ஒரு கடிகாரத்தைப் போல இயங்கிக் கொண்டிருக்கும். இதில் இதயம் எத்தனைமுறை இயங்க வேண்டும் என்று புரொகிராம் செய்யப் பட்டிருக்கும். அதற்கேற்ப மின்தூண்டல்களை உருவாக்கி இதயத்துக்கு அனுப்புவதுதான் பேஸ்மேக்கரின் வேலை. இதன் பலனால் இதயத்துடிப்பு சீராகிவிடும்.
என்னென்ன குறைகள்?
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மார்பில் எந்த நேரமும் அழுத்துவது போன்ற ஓர் உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இதன் வயர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் நோய் தொற்று வதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இத்தொல்லைகள் அடிக்கடி ஏற்படும். இவற்றின் வயர்களில் கோளாறு ஏற்படலாம். இதயத்திலிருந்து வயர்கள் விடுபட்டுவிடலாம். இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குத்தான் வேலை செய்யும். அதன் பிறகு புதிய பேட்டரியைப் பொருத்திக்கொள்ள வேண்டும். இந்த பேஸ்மேக்கரைப் பொருத்திக்கொண்டவர்கள் மற்ற நோய்களுக்காக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்க்க முடியாது.

வயரில்லாத பேஸ்மேக்கர்
சாதாரண பேஸ்மேக்கரில் காணப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் நியூயார்க்கில் பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் ரெட்டி என்பவர் வயர், ஜெனரேட்டர் என்று எதுவுமில்லாத புதிய பேஸ்மேக்கரைக் கண்டுபிடித்தார்.
பழைய பேஸ்மேக்கருக்கும் இந்தப் புதிய பேஸ்மேக்கருக்கும் வித்தியாசம் என்ன?
இதற்கு முந்தைய பேஸ்மேக்கரை நெஞ்சில் பொருத்துவார்கள். இந்தப் புதிய பேஸ்மேக்கரை இதயத்தில் நேரடியாகவே பொருத்திவிடுகிறார்கள். அடுத்ததாக ஒரு பெரிய வித்தியாசம், இதில் வயர் கிடையாது. பதிலாக, ரிஸ்ட் வாட்ச் போன்ற ஓர் அமைப்பை கருவியில் அமைத்துள்ளார்கள். அதனுள் ஒரு ஸ்பிரிங் இருக்கிறது. இதயம் துடிக்கும்போது உருவாகிற இயக்க விசையைப் பயன்படுத்தி இந்த ஸ்பிரிங் தன்னை முறுக்கேற்றிக் கொள்கிறது. முழுவதுமாக முறுக்கேறியதும் அந்த முறுக்கேற்றம் ரிலீஸ் ஆகிறது. அப்போது அது பேஸ்மேக்கர் கருவியில் உள்ள பேட்டரியை இயக்குகிறது. ஆட்டோமேட்டிக் கைக் கடிகாரத்தில் முள் நகர்கிற தத்துவம்தான் இது.
வழக்கம்போல பேட்டரி இயங்கும்போது மின்தூண்டல்கள் கிளம்பி இதயத்துடிப்பை சரி செய்கிறது. பழைய பேஸ்மேக்கர் கருவியில் 5 முதல் 10 ஆண்டுகளில் பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிடும். அப்போது அதை மாற்றுவதற்காக மீண்டும் ஒருமுறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இந்த வேலை இதில் தேவை இல்லை. ஒருமுறை இதயத்தில் பொருத்திவிட்டால் உயிர்மூச்சு உள்ளவரை இது இயங்கிக் கொண்டிருக்கும். இந்தக் கருவியால் கிடைக்கிற மிகப் பெரிய பலன் இது.
இப்போது இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்வகையில் ‘கேப்சூல் பேஸ்மேக்கர்’ (Capsule Pacemaker) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேப்சூல் பேஸ்மேக்கர்
மருத்துவத்தின் அதிவேக வளர்ச்சியின் வெளிப்பாடாகவும் புதிய தொழில்நுட்பத்தின் பலனாகவும் சமீபத்தில் வந்துள்ள கேப்சூல் பேஸ்மேக்கர் பார்ப்பதற்குச் சற்றே பெரிய கேப்சூல் மாதிரி இருக்கிறது. இதன் எடை மொத்தமே 2 கிராம்தான். இதில் ஜெனரேட்டர் மட்டுமே உள்ளது; மின்சார வயர்கள் இல்லை. இதை இதயத்தில் பொருத்துவதற்கு அறுவை சிகிச்சை தேவை இல்லை.
தொடையில் உள்ள ரத்தக்குழாய் வழியாக ஒரு மீட்டர் நீளம் உள்ள கத்தீட்டர் எனும் குழாயின் மூலம் இதைக் கொண்டு சென்று நேரடியாக இதயத்தின் வலது கீழறைக்குள் பொருத்திவிடுகிறார்கள். இதிலுள்ள கால்கள் போன்ற அமைப்பு இதயத்தைக் கவ்விப் பிடித்துக்கொள்கிறது. இதில் இதயம் எத்தனை முறை துடிக்க வேண்டும் என புரொகிராம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதயத்தை இது இயக்குகிறது; 10 ஆண்டுகளுக்கு மேல் பலன் தருகிறது. இதன் விலை ரூபாய் 8 லட்சம். தற்போது பயன்பாட்டில் உள்ள இந்த பேஸ்மேக்கர் வெளிநாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பதால் விலை அதிகம்.
யாருக்கு உதவும்?
அறுவை சிகிச்சை செய்ய முடியாத அளவுக்கு உடல் நலம் குன்றியவர்களுக்கு, முதியோர்களுக்கு, மிகவும் அவசரமாக பேஸ்மேக்கரைப் பொருத்த வேண்டும் என்ற நிலைமையில் உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவுகிறது. இதைப் பொருத்திக்கொண்டவர்களுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்க்க முடியும் என்பது இதன் கூடுதல் பலன்களில் ஒன்று. அறுவை சிகிச்சை செய்யப்படாமல் இது இதயத்தில் பொருத்தப்படுவதால், வலி என்ற பேச்சுக்கே இடமில்லை. சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இந்த வசதி இப்போது கிடைக்கிறது.
(தேடுவோம்...)