மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எலும்பின் கதை! - 9 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

எலும்பின் கதை! - 9 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0
பிரீமியம் ஸ்டோரி
News
எலும்பின் கதை! - 9 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்ஹெல்த்

எலும்பின் கதை! - 9 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

சென்ற இதழில் கால் மூட்டுத் தேய்மானம் பற்றித் தெரிந்துகொண்டோம். இந்த இதழில் மூட்டுத் தேய்மானத்தைச் சரி செய்ய என்னென்ன வழிமுறைகள் உள்ளன எனத் தெரிந்துகொள்வோம்.

கால் மூட்டுத் (Knee Joint) தேய்மானம் ஏற்படும்போது, மூட்டில் உள்ள சைனோவியல் திரவத்தின் (Synovial fluid) அளவு குறைந்து காணப்படும். நாளடைவில் மூட்டின் குருத்தெலும்பானது (Cartilage) தேய ஆரம்பிக்கும். மூட்டுத் தேய்மானம் அதிகமாகும்போது, குருத்தெலும்பு முற்றிலுமாகத் தேய்ந்து, அதன் அடியில் இருக்கும் எலும்பும் பாதிக்கப்படும். இதனால் அந்த இடத்தில் அதிக வலி உண்டாகிறது. இதனைத் தீவிர முழங்கால் மூட்டுவாதம் (Severe Knee Arthritis) என்கிறோம். 

நமது மூட்டின் அமைப்பானது மூன்று எலும்புகளைக் கொண்டது. தொடை எலும்பின் கீழ்ப் பகுதி ஃபெமூர் (Femur), கால் எலும்பின் மேற்பகுதி டிபியா (Tibia) மற்றும் பாட்டெல்லா (Patella) எனப்படும் சிறிய பந்து போன்ற எலும்புகளைக் கொண்டது.

நமது உடலின் எடையானது, மூட்டின் உள்பகுதியில் அதிகம் விழுவதால் தேய்மானம் ஆரம்பிக்கிறது. இதை மீடியல் கம்பார்ட்மென்டல் ஆர்த்ரைட்டிஸ்  (Medial Compartmental Arthritis) என்கிறோம்.

முதல்நிலை தேய்மானத்துக்கு இயன்முறை சிகிச்சை, எடைக்குறைப்பு, மூட்டுத் தசைகளுக்குப் பயிற்சி போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன. குளூக்கோசமைன் (Glucosamine) எனப்படும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

எலும்பின் கதை! - 9 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

மூட்டுத் தேய்மானத்துக்கு அடுத்தநிலை சிகிச்சையாக மூட்டின் உள்ளே ஊசி மூலம் மருந்து செலுத்தலாம். இந்த ஊசி செலுத்தப்படும் முறை மிகவும் முக்கியம்.

மூட்டுக்காக, ஊசியில் செலுத்தப்படும் மருந்துகள் மூன்று வகைப்படும். ஸ்டீராய்டு (Steroid) எனப்படும் மருந்துகள் மூட்டில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. இந்த வகை மருந்துகள் முதல் நிலை தேய்மானத்துக்குச் செலுத்தப்படுகின்றன. இதனால், ஏற்படும் பலன்கள் சிலருக்குச் சில மாதங்களே நிலைக்கும். இரண்டு ஊசிகளுக்கு மேல் செலுத்துவது பாதுகாப்பானதல்ல. மற்றொரு வகை ஊசியானது, செயற்கை சைனோவியல் திரவம் (Synovial Fluid) ஊசி வகையைச் சேர்ந்தது. இந்த வகை ஊசியும் முதல் நிலை தேய்மானத்துக்குப் பயன்படுத்தப்படும்.

மூட்டுத் தேய்மானப் பிரச்னை அதிகமாக இருந்தால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சையே பரிந்துரைக்கப் படுகிறது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை (Knee Replacement) என்பதில் தேய்ந்துபோன குருத்தெலும்பை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து விட்டு, செயற்கை மூட்டு பொருத்தப் படும். அறுவை சிகிச்சையின்போதும் அதன்பிறகும் வலி இல்லாமல் இருப்பதற்காக மயக்க மருந்து நிபுணர் மருந்துகள் மற்றும் ஊசிகளைப் பரிந்துரைப்பார்.

எலும்பின் கதை! - 9 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

அறுவை சிகிச்சை முடிந்து, ஓரிரு நாள்களில் நடைப்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படும். இயன்முறை பயிற்சி அறுவை சிகிச்சைக்குப் பிறகு செய்து கொள்வது மிக முக்கியம். இதனால், சிகிச்சை முடிந்த ஆறு வாரங்களில் நடை சீராகும்.
இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சையானது வலியை நிவர்த்தி செய்வதற்காகச் செய்யப்படும் சிகிச்சை. நோய்த்தொற்று, ரத்தக் கசிவு மற்றும் டிவிடி (DVT(Deep vein thrombosis)) எனும் ரத்தம் உறைதல் ஆகிய  பிரச்னைகளை தடுப்பதற்கும்,  தகுந்த வழிமுறைகளைப் பின்பற்றியும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை (Knee Replacement) செய்த பிறகு, 25 அல்லது 30 வருடங்களுக்குப் பிறகு இவற்றை இன்னொரு அறுவை சிகிச்சையின் மூலம் மாற்ற வேண்டிய தேவை இருக்கலாம்.

- தொடரும்