மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாடர்ன் மெடிசின்.காம் - 4 - அல்ட்ரா சவுண்ட் அற்புதங்கள்!

மாடர்ன் மெடிசின்.காம் - 4 - அல்ட்ரா சவுண்ட் அற்புதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மாடர்ன் மெடிசின்.காம் - 4 - அல்ட்ரா சவுண்ட் அற்புதங்கள்!

கு.கணேசன், பொதுநல மருத்துவர்ஹெல்த்

மாடர்ன் மெடிசின்.காம் - 4 - அல்ட்ரா சவுண்ட் அற்புதங்கள்!

யிற்றுப் பிரச்னைக்காக அடிக்கடி மருத்துவரிடம் சென்றால், ‘ஸ்கேன்’ செய்து பார்க்க வேண்டும் என்று சொல்வது உண்டு. அந்த ஸ்கேன்களில் முதன்மையானது ‘அல்ட்ரா சோனோகிராபி’ (Ultra sonography) என்று அழைக்கப்படுகிற அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். இதில் எக்ஸ் கதிர் வீச்சு பாதிப்பு இல்லை என்பதால், மருத்துவத்துறையில் பெரிய அளவில் பயன்பாட்டில் இருக்கிறது.

செயல்படும் விதம்

கேளா ஒலி அலைகளைப் (Ultrasound) பயன்படுத்தி இது செய்யப்படுகிறது. பொதுவாக, 1 - 20 MHz ஒலியலை அதிர்வுகளை (Frequencies) உடலுக்குள் செலுத்தினால், அவை எதிரொலித்துத் திரும்பிவரும். அவற்றை பிம்பங்களாக மாற்றினால், உடல் உறுப்புகளின் தன்மை தெரியும். இந்த அறிவியலை அடிப்படையாகக் கொண்டு ‘அல்ட்ரா சவுண்ட்’ ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மாடர்ன் மெடிசின்.காம் - 4 - அல்ட்ரா சவுண்ட் அற்புதங்கள்!

எப்படி வௌவால்கள் தங்களிடமிருந்து மிக நுண்ணிய ஒலி அலைகளைக் காற்றில் அனுப்பி, அவை திரும்பிவரும் திசையைக் கண்டறிந்து, தங்கள் இரையைத் தெரிந்துகொள்கிறதோ அல்லது இரவில் தங்கள் பயணப் பாதையை அமைத்துக்கொள்கிறதோ, அதே அறிவியல்தான் இதற்கும் பயன்படுகிறது.

எப்படி மேற்கொள்ளப்படுகிறது?

பார்ப்பதற்கு ஒரு கணினிப் பெட்டி மாதிரிதான் இந்த ஸ்கேன் கருவி இருக்கும். அமைப்பிலும் அளவிலும் ஒரு டார்ச் லைட் போல் இருக்கிற ‘புரோப்’ (Probe) எனும் நுண்ணாய்வுக் கருவி இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒலி அலைகளை உடலுக்குள் அனுப்பவும் உடலிலிருந்து எதிரொலித்து வரும் அலைகளைத் திரும்பப் பெற்றுக் கணினிக்குள் அனுப்பவும் இதுதான் உதவுகிறது.

பயனாளியை மேஜையில் படுக்கவைத்து பரிசோதிக்க வேண்டிய உடல் பகுதியில் ஒரு பசையைத் தடவுகிறார்கள். இந்தப் பசை, புரோபுக்கும் சருமத்துக்கும் இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்கிறது. அப்போதுதான் ஒலி அலைகளைத் துல்லியமாக அனுப்பவும் திரும்பப் பெறவும் முடியும். புரோபைப் பரிசோதிக்க வேண்டிய பகுதிக்குக் கொண்டு செல்லும்போது, கேளா ஒலி அலைகளை உடலுக்குள் அனுப்புகிறது. உடனே அந்த உறுப்பிலிருந்து ஒலி அலைகள் எதிரொலித்துத் திரும்பி கணினிக்கு வருகின்றன. ஆனால், திரும்பி வரும் ஒலி அலைகள் அனைத்தும் ஒன்றுபோல் இருப்பது இல்லை. திசுவின் தன்மையைப் பொறுத்து அந்த அலைகளின் அதிர்வுகள் வேறுபடும். அவற்றைக் கணினி புரிந்துகொண்டு, மின் சமிக்ஞைகளாக மாற்றி, உடல் உறுப்புகளை வெவ்வேறு வடிவங்களில் படங்களாகத் தயாரித்துக் கணினித் திரையில் காண்பிக்கும். இவற்றை மருத்துவர் ஆராய்ந்து நோய்களைக் கணிப்பார். மேலும், அந்தப் படங்களை ஃபிலிமில் பிரின்ட் செய்து நோயாளியிடம் கொடுத்துவிடுவார்.

எந்த நோய்கள் தெரியும்?

குடல்வால் அழற்சி, குடல் கட்டிகள், குடல் புற்றுநோய், வயிற்றில் தேங்கும் நீர், கல்லீரல் வீக்கம், கொழுப்புக் கல்லீரல், கல்லீரல் சுருக்கம், மண்ணீரல் வீக்கம் போன்ற பல பாதிப்புகளை இதில் காண முடியும். பித்தப்பை அழற்சி, பித்தப்பைக் கற்கள், பித்தக்குழாய் அடைப்பு ஆகிய நோய்களையும் இதில் தெரிந்துகொள்ள முடியும். கணைய அழற்சி மற்றும் கணையப் புற்றுநோயைக் கண்டறியவும் இது உதவுகிறது.

சிறுநீரக வீக்கம், சிறுநீரக நீர்க்கட்டி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர்ப்பை அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் மற்றும் புற்றுநோயை அறிவதற்கு உதவும் முதல் கட்டப் பரிசோதனை இதுதான். உமிழ்நீர்ச் சுரப்பி, நிணநீர்ச் சுரப்பி, தைராய்டு சுரப்பி மற்றும் பேராதைராய்டு சுரப்பியின் அமைப்பு, வீக்கம், அழற்சி, புற்றுநோய் போன்ற விவரங்களை இதில் அறியலாம். விரைப்பை (Scrotum) மற்றும் விரைகள் (Testes) தொடர்பான எல்லா நோய்களையும் இதில் அறிய முடியும்.

மாடர்ன் மெடிசின்.காம் - 4 - அல்ட்ரா சவுண்ட் அற்புதங்கள்!

பெண்களுக்குப் பெரிதும் உதவும்

பெண்களின் மார்பகத்தில் தோன்றும் நார்க்கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகள் மற்றும் கருப்பை, சூலகம் ஆகியவற்றின் நோய்களையும் இதில் காண முடியும். ஒரு பெண் கர்ப்பம் அடைந்துள்ளாரா என்பதில் தொடங்கி, சிசுவின் வளர்ச்சி, பிறவிக்கோளாறுகள், ஒற்றைக் குழந்தையா, இரட்டைக் குழந்தையா, பனிக்குடத்தின் தன்மை, நச்சுக்கொடியின் அமைப்பு, குழந்தை ஆணா, பெண்ணா, சுகப்பிரசவம் ஆகுமா எனப் பல விவரங்களை இதில் தெரிந்துகொள்ளலாம்.

பயாப்சி எடுக்கலாம்

திசுப் பரிசோதனை (Biopsy) செய்வதற்குத் திசுவை சரியான உடல் பகுதியிலிருந்து ஊசிக்குழல் மூலம் உறிஞ்சி எடுப்பதற்கு இது உதவுகிறது. முக்கியமாக, இந்தப் பரிசோதனையின்போது அருகில் உள்ள உறுப்புகளை ஊசிக்குழல் குத்திவிடாமல் பாதுகாக்க இது பெரிதும் கை கொடுக்கிறது.

நியூக்கல் ஸ்கேன் புதிய வரவு (Nuchal Scan)

சாதாரணமாக நம் வயிற்றைப் பரிசோதிக்கிற அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவியில் ஒரு பிரத்யேகமான சாஃப்ட்வேரை இணைத்து இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சிசுவின் கழுத்தின் பின்புறம் சேரும் நிணநீர் அளவை வைத்து அதற்குப் பிறவிக் கோளாறு உள்ளதா இல்லையா என்று கண்டுபிடிப்பதுதான் இதன் நிபுணத்துவம். தற்போது கர்ப்பிணிகளுக்கு மேற்கொள்ளப்படும் சிறப்புப் பரிசோதனைகளில் முக்கியமானது.

எப்போது செய்யப்படுகிறது?

கர்ப்பிணிக்கு 11லிருந்து 14 கர்ப்ப வாரங்களுக்குள் இது செய்யப்படுகிறது. இக்காலகட்டத்தில்தான் சிசுவின் கழுத்தில் தோலுக்கும் தோலடித் திசுவுக்கும் நடுவில் நிணநீர் தேங்குகிறது. அப்போது அங்கு தோலின் தடிமன் கூடுகிறது. இதற்கு `நியூக்கல் டிரான்ஸ்லூசன்ஸி’ (Nuchal translucency) என்று பெயர். இது 3 மி.மீ. எனும் அளவில் இருந்தால், அந்தக் குழந்தை `நார்மல்’ எனவும், 3 மி.மீட்டருக்கு மேல் அதிகரித்தால் டவுன் சிண்ட்ரோம், டிரைசோமி - 18 போன்ற மரபுக்குறைபாடுகள் உள்ளன என்றும் கணிக்கிறார்கள்.

யாருக்கு அவசியம்?

35 வயதுக்கு மேல் முதல்முறையாக கர்ப்பம் தரித்தால், சொந்தத்தில் திருமணம் செய்திருந்தால், முந்தைய குழந்தைக்கு மரபணுக் குறைபாடு இருந்தால், பரம்பரையில் யாருக்காவது மரபு சார்ந்த பிரச்னை இருந்தால், அந்தக் கர்ப்பிணிகளுக்கு இது மிகவும் அவசியம்.

மாடர்ன் மெடிசின்.காம் - 4 - அல்ட்ரா சவுண்ட் அற்புதங்கள்!

எண்டோஸ்கோப்பிக் அல்ட்ரா சவுண்ட்

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் மற்றொரு புதிய அறிமுகம் இது. இரைப்பை எண்டோஸ்கோப் கருவியின் உள்முனையில் உள்ள காமிராவுக்கு அருகில் அல்ட்ரா சவுண்ட் புரோபைச் சொருகி இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இக்கருவியின் பெயர் ‘எக்கோ எண்டோஸ்கோப்’ (Echo endoscope).

வாய்வழியாக எண்டோஸ்கோப் குழாயை இரைப்பைக்குச் செலுத்துகிறார்கள். இதன் முனையில் உள்ள புரோப் உணவுப் பாதையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதி களிலும் கேளா ஒலி அலைகளை அனுப்பி, எதிரொலித்து வரும் ஒலி அலைகளைக் கணினிக்கு அனுப்ப, அங்கு அவை பிம்பங் களாக மாற்றப் படுகின்றன. அவற்றைப் பார்த்து மருத்துவர்கள் நோயைக் கணிக்கிறார்கள். அக்காட்சிகளை வீடியோ காமிராவில் பதிவு செய்துகொள்ளவும், கணினித் திரையில் காணவும் வசதி உண்டு.

என்னென்ன நன்மைகள்?

உணவுக்குழாய், இரைப்பை, கணையம், மலக்குடல் ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்களையும், பித்தப்பைக் கல், புற்றுநோய் ஆகியவற்றையும் இதில் எளிதாகக் காணமுடியும். புற்றுநோய் எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதையும் இதில் அறியலாம். அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத கணையப் புற்றுநோய்க்கு வலி குறைக்கும் மருந்துகளை இதன் வழியாகச் செலுத்த முடியும். அங்கு நீர் சேர்ந்திருந்தால் அதை உறிஞ்சி எடுக்க முடியும்.

(தேடுவோம்...)