சிறுநீரகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டால் கட்டாயம் டயாலிசிஸ் செய்ய வேண்டும். ரத்தத்தில் நீர் மற்றும் தாது உப்புகள் அதிகரித்தால் அதைப் பிரித்தெடுப்பது சிறுநீரகம்தான். நாளொன்றுக்கு 1000 லிட்டர் ரத்தத்தை நமது சிறுநீரகங்கள் பிரித்தெடுக்கின்றன. உடல்நலப் பாதிப்புகளால் சிறுநீரகம் பாதிக்கப்படும்போது, நச்சுகளைப் பிரித்தெடுக்கும் திறன் பாதிக்கப்படும். அப்படிச் சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்குச் செய்யப்படும் சிகிச்சை முறைதான் `டயாலிசிஸ்'. ஆனால், டயாலிசிஸ் செய்துகொள்ளும் பெரும்பாலானோர் ஹெப்படைட்டிஸ் வைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இது மருத்துவ உலகத்தை அதிரவைத்திருக்கிறது.
தமிழகத்தில், 14 மாவட்டங்களில் டயாலிசிஸ் செய்துகொள்ளும் 18,589 பேரிடம் ரத்தப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 359 பேருக்கு ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் பாதிப்பும், 303 பேருக்கு, ஹெபடைட்டிஸ் பி பாதிப்பும், 56 பேருக்கு ஹெபடைட்டிஸ் சி பாதிப்பு இருந்ததும் கண்டறியபப்ட்டுள்ளது. தேனி, வேலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகமான பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஓர் அரசு மருத்துவமனையின் டயாலிசிஸ் யூனிட்டில் மட்டும் டயாலிசிஸ் செய்துகொண்ட அனைவருக்கும் ஹெபடைட்டிஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக 23 பேரின் ரத்தத்தைப் பரிசோதனை செய்து பார்த்ததில் நான்கு பேருக்கு ஹெபடைட்டிஸ் பி தொற்றும், 19 பேருக்கு ஹெபடைட்டிஸ் `சி' நோய்த் தொற்று இருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மேற்கண்ட இரண்டு வைரஸ்களும் ரத்தத்தின் மூலம் பரவக் கூடிய மிகவும் ஆபத்தான வைரஸ்கள். இதனால் உண்டாகும் மஞ்சள்காமாலையைக் குணப்படுத்துவது மிகவும் சவாலானது.
டயாலிசிஸ் செய்வதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. `பெரிட்டோனியல் டயாலிசிஸ்' மற்றும் `ஹிமோ டயாலிசிஸ்'. நம் வயிற்றில் உள்ள `பெரிட்டோனியம்' எனும் சவ்வைப் பயன்படுத்தி கழிவுகளை அகற்றும் முறை `பெரிட்டோனியல் டயாலிசிஸ்'. ரத்தத்தை வெளியே ஒரு கருவிக்குள் செலுத்தி ரத்தத்தைச் சுத்திகரிக்கும் முறை, ஹிமோடயாலிசிஸ். இதில், `பெரிட்டோனியல் டயாலிசிஸ்'
செய்துகொள்வதற்கு அதிகமாக செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுவது பெரும்பாலும் `ஹிமோ டயாலிசிஸ்'தான்.
`` டயாலிசிஸ் செய்வதில் ரிஸ்க் இருப்பது உண்மைதான். ரத்தத்தை வெளியில் எடுத்துச் சுத்திகரிக்கும்போது அதில் ஏதேனும் தொற்று உண்டாக வாய்ப்பிருக்கிறது. முறைப்படி, விதிமுறைகளை மதித்து டயாலிசிஸ் செய்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. தனியார் மருத்துவமனைகளில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட ட்யூப், ஃபில்டர் செட் போன்ற கருவிகளை மீண்டும் பயன்படுத்துவதில்லை. அதற்கேற்ப பணமும் வசூலித்துக் கொள்வார்கள். அரசு மருத்துவமனைகளில் அப்படிச் செய்வது கடினம். அதிகளவில் நோயாளிகள் வருவார்கள். அதனால் ஒருவருக்குப் பயன்படுத்திய கருவிகளையே அடுத்தவருக்கும் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. முறைப்படிச் சுத்திகரித்துப் பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. அதனால், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் நோய்த் தொற்றுகள் பரவ நிறைய வாய்ப்பிருக்கிறது. ஹெபடைட்டிஸ் பி தொற்று பாதித்தால் மஞ்சள்காமாலை உண்டாகும். ஹெபடைட்டிஸ் சி பாதிப்பு ஏற்பட்டால், கல்லீரல் புற்றுநோய் உண்டாகக்கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால், அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்துகொள்ளும் அனைவருக்குமே பாதிப்பு ஏற்படும் என்பது தவறான கருத்து `` என்கிறார் சிறுநீரகவியல் அறுவைசிகிச்சை நிபுணர் எம்.ஜி.சேகர் .
``டயாலிசிஸ் செய்தால் இது போன்ற நோய்த் தொற்றுகள் பாதிக்க வாய்ப்பிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். டயாலிசிஸ் செய்துகொள்வதற்கு முன்பாக அதற்கான தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் எந்தப் பாதிப்பும் வராது. ஆனால், எத்தனை பேர் சரியாக தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. இது ரத்தம் சம்பந்தப்பட்ட விஷயம். ஒருவர் மூலமாக மற்றவர்களுக்கு நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்பிருக்கிறது. பல மையங்களில் பெரும்பாலும் அவர்களின் ரெகுலர் கஸ்டமர்களுக்குத்தான் டயாலிசிஸ் செய்வார்கள். புதிதாக ஒருவர் வந்தால் கண்டிப்பாக ரத்தப்பரிசோதனை செய்யாமல் சிகிச்சையளிக்க மாட்டார்கள். அதேபோல, ஆறு மாதத்துக்கு ஒருமுறை எல்லோருக்கும் ரத்தப் பரிசோதனை செய்வார்கள்.
மேற்கண்ட ஆய்வை வைத்துப் பார்த்தால் இதுபோன்ற சோதனைகள் எதுவும் முறையாக நடைபெறவில்லை என்று தெரிகிறது. இதில், அரசு மருத்துவமனைகளை மட்டும் குறை சொல்லமுடியாது. அரசு மருத்துவமனைகளில் சோதனை நடைபெற்றுள்ளதால், அங்குள்ள நிலை தெரிய வருகிறது. பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில்தாம் அதிக நோயாளிகள் டயாலிசிஸ் செய்துகொள்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு செய்தால் இன்னும் பெரிய விபரீதங்கள் வெளியே வரலாம்.
சிறுநீரகப் பாதிப்புக்காக வருபவர்களுக்குக் கல்லீரலும் பாதிக்கப்பட்டால் அது வேதனையான விஷயம். இனிவரும் காலங்களில் முறையாகச் சிகிச்சையளிப்பதற்கு இந்த ஆய்வைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். `` என்கிறார் தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் சுப்ரமணியன்.