மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எலும்பின் கதை! - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

எலும்பின் கதை! - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0
பிரீமியம் ஸ்டோரி
News
எலும்பின் கதை! - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்

ந்த இதழில் கணுக்கால் மூட்டு மற்றும் அதில் ஏற்படும் வலி பற்றித் தெரிந்துகொள்வோம்.

கணுக்கால் (Ankle joint) மூட்டானது, மூன்று எலும்புகளைக்கொண்ட ஓர் அமைப்பாகும். கால் எலும்புகளின் கீழ்ப்பகுதி, வலது மற்றும் இடது கணுக்கால் என்ற பாத எலும்பின் பகுதிகள் சேர்ந்து கணுக்கால் மூட்டுச் செயல்படுகிறது. இந்த மூட்டும் கீல் வகையைச் சேர்ந்த ஒரு மூட்டாகும். இந்த மூட்டைச் சுற்றி இருக்கும் தசைநார்கள் (Ligaments) அதிகப்படியான உராய்வுகள் ஏற்படாமல் தடுக்கக்கூடியவை. அதுமட்டுமல்லாமல் கண்ணை மூடிக் கொண்டு நடந்தாலும் மூட்டு எங்கே இருக்கிறது என்று மூளைக்குத் தெரியப்படுத்தும் ஜாயின்ட் பொசிஷன் ரிசப்டர்ஸ் (Joint position receptors) எனப்படும் செயலிகளை இது கொண்டுள்ளது. இந்தத் தசைநார்களில் முக்கியமானது ஆன்ரிடீயர் டாலோஃபைபுலர் லிகமென்ட் (Anterior TaloFibular Ligament - ATFL) என்னும் முன்புறத் தசைநாராகும்.

எலும்பின் கதை! - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

கால் இடறி விழும்போது கால் சுளுக்கு (Ankle Sprain) ஏற்படும். அப்போது முன்புறத் தசைநார்கள் பாதிக்கப்படுகின்றன.

பொதுவாக, சுளுக்கு மூன்று வகைப்படும்.

கணுக்கால் பிசகி, குறைந்த அளவில் அடிபடுவதால் சுளுக்கு ஏற்படும். காலில் வீக்கம் மற்றும் வலி வரும். ஆனால், வலியுடன் நடக்க இயலும். இந்த வகையில் தசைநார் முழுவதுமாகக் கிழியாது. காலில் சுளுக்கு ஏற்பட்டால் வலி நிவாரணிகள், ஐஸ் ஒத்தடம் மற்றும் ஸ்க்ரப் பேண்டேஜ் போன்றவற்றின் உதவியோடு சரிசெய்யலாம். இரண்டு முதல் மூன்று வாரங்களில் பிரத்யேகக் கால் மூட்டுப் பயிற்சிகள் செய்வதன் மூலம் 95 சதவிகிதம் குணமாகும் வாய்ப்புகள் உண்டு.

எலும்பின் கதை! - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

இரண்டாவது வகை கால் சுளுக்கின்போது பாதியாகவும், மூன்றாவது வகை கால் சுளுக்கின்போது முழுவதுமாகவும் தசைநார்கள் கிழிந்துவிடுகின்றன. இது மிகவும் அதிகமான வலியை ஏற்படுத்தும்; சில சமயங்களில் நடக்க முடியாத நிலைமையும் ஏற்படலாம். இவற்றுக்கு முதலுதவியாக ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கலாம். அதேவேளையில் காலம் தாழ்த்தாமல் எலும்பு மூட்டு மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நல்லது. சிகிச்சையின்போது, எக்ஸ்-ரே எடுத்து எலும்பில் ஏதேனும் முறிவு உள்ளதா எனப் பார்க்கப்படும். தசைநாரில் அதிகப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவை குணமடைய இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குக் கட்டுப் போட பரிந்துரைக்கப்படும்.

இரண்டு சதவிகித நபர்களுக்குப் பல மாதங்கள் கழிந்தும் வலி நீடிக்கும். அது மட்டுமல்லாமல் கணுக்காலில் உறுதியற்றத் தன்மையும் ஏற்படலாம். இதற்குக் காரணம், முன்புறத் தசைநார் திசு முழுமையாக ஆறாமல் இருப்பதேயாகும். இந்த நிலையில் வேகமாக நடப்பது, திரும்புவது, படிகளில் கீழிறங்குவது போன்ற செயல்கள் மிகவும் கடினமாக இருக்கும். இதைக் கண்டறிய மூட்டுப் பகுதிகளில் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனையில் எந்த அளவுக்குத் தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது அறியப்படும். கால் மூட்டுப் பயிற்சிகளில் மிகவும் முக்கியமானது மூட்டு அசைவுகளை உணர்தல் மற்றும் சமநிலைத் தன்மைப் பயிற்சிகள் ஆகும்.

மூட்டுப் பயிற்சிகள் செய்தும் வலி மற்றும் உறுதியற்றத் தன்மை இருந்துகொண்டே இருந்தால் அவற்றை அறுவைசிகிச்சைகளின் மூலம் சரிசெய்யலாம். அந்த வகை அறுவைசிகிச்சையானது நுண்துளை
(Arthroscopy) என்ற புதிய சிகிச்சைமுறையில் செய்யப்படுகிறது. இந்த அறுவைசிகிச்சையின் மூலம் கிழிந்த தசை நார்கள் சீர் செய்யப்படும். இந்த நுண்துளை சிகிச்சை துரிதமாகக் குணமடைய உதவுகிறது.

அடுத்த இதழில் குதிகால் வலி...