மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாடர்ன் மெடிசின்.காம் - 6 - கருப்பை மாற்றுச் சிகிச்சை!

மாடர்ன் மெடிசின்.காம் - 6 - கருப்பை மாற்றுச் சிகிச்சை!
பிரீமியம் ஸ்டோரி
News
மாடர்ன் மெடிசின்.காம் - 6 - கருப்பை மாற்றுச் சிகிச்சை!

கு.கணேசன், பொதுநல மருத்துவர்

சிறுநீரக மாற்றுச் சிகிச்சை, சரும மாற்றுச் சிகிச்சை, கல்லீரல் மாற்றுச் சிகிச்சை என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். கருப்பை மாற்றுச் சிகிச்சையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகிலேயே முதன்முறையாக ஒரு பெண்ணுக்குக் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து, குழந்தை பிறக்கவைத்து, மிகப் பெரிய சாதனை புரிந்தார்கள், ஸ்வீடன் நாட்டு மருத்துவர்கள். இது நிகழ்ந்தது 2014-ம் ஆண்டு. இப்போது இந்தியாவிலும் இது மேற்கொள்ளப்படுகிறது. இந்த அதிசயத்தை அறிந்துகொள்ளும் முன்பாக, கருத்தரிக்கும் ரகசியத்தைத் தெரிந்துகொண்டால் நல்லது.

மாடர்ன் மெடிசின்.காம் - 6 - கருப்பை மாற்றுச் சிகிச்சை!

கருத்தரிப்பது எப்படி?

மாதவிலக்கு ஆனதிலிருந்து பதினான்கு அல்லது பதினைந்தாவது நாளில் பெண்ணின் வலது அல்லது இடது பக்கச் சினைப்பையில் இருந்து ஒரு சினைமுட்டை வெளிவருகிறது.     இது, கொஞ்சம் கொஞ்சமாகக் கருக்குழாய்க்குள் நகர்ந்து, கருப்பையை நோக்கிப் பயணிக்கிறது. இது, ஒரே ஒருநாள்தான் உயிருடன் இருக்கும். அதற்குள் உடலுறவு நடந்து, பெண்ணின் கருப்பைக்குள் ஆணின் விந்தணு நுழைந்து, கருக்குழாயில் சேர்ந்தால்தான், சினைமுட்டையுடன் கலந்து கருவாக உருவாக முடியும்.

இப்படி உருவெடுத்த கருவானது, முதலில்    ஒரே ஒரு ‘செல்’லாக இருக்கும். பிறகு, இரண்டாக, நான்காக, பல மடங்குச் செல்களாக வளரும். மெதுவாக நகர்ந்து, ஒரு வாரத்தில் கருப்பையை அடையும். அங்கே மெத்தை போன்று இருக்கும் எண்டோமெட்ரியத்தில் குடியேறும். அப்போது, கருவுக்கு உணவு கொடுக்க நச்சுக்கொடி (Placenta) உருவாகும். இந்த உணவைச் சாப்பிடும் கருவானது, குழந்தையாக வளர வளர எண்டோமெட்ரியத்தின் பின்னால் இருக்கும் மயோமெட்ரியத் தசைகள் விரிந்துகொடுக்கும். ஒன்பது மாதங்களும் ஒரு வாரமும் முடிந்து குழந்தை முழுவளர்ச்சி அடைந்ததும், பிரசவ வலி ஏற்படுகிறது. பனிக்குடம் உடைகிறது. கருப்பை வாய் திறந்து, குழந்தை வெளியுலகுக்கு வருகிறது. இப்படித்தான் ஒரு பெண், தாயாகிறாள்.

சோதனைக்குழாய் குழந்தை

சினைமுட்டை உருவாவதில் அல்லது அது கருக்குழாய்க்குப் பயணிப்பதில் தடை இருப்பவர்களுக்கு, ஹார்மோன் ஊசிகள் போடப்பட்டு சினைமுட்டையை வளர்த்து, அதை வெளியில் எடுப்பார்கள். அதைக் கணவர் அல்லது தானம் செய்பவரின் விந்துடன் கலந்து, சோதனைக் குழாயில் வளர்த்து, மறுபடியும் பெண்ணின் கருப்பையில் வைத்துக் குழந்தையை வளர்ப்பார்கள். இதையே ‘சோதனைக்குழாய் குழந்தை’ என்கிறோம்.

‘கருப்பையே இல்லாத அல்லது கருப்பை கடுமையாகப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எப்படிக் குழந்தை பிறக்கவைப்பது?’ என்ற கேள்விக்கான விடையாக உருவானதுதான், ‘வாடகைத் தாய்’ முறை. இது, அடுத்தவரின் கருப்பையில் கருவை வளர்த்துக் குழந்தை பிறக்க வழி செய்கிறது. இயற்கை குழந்தையாக இருந்தாலும் சரி, சோதனைக்குழாய் குழந்தையாக இருந்தாலும் சரி, வாடகைத் தாய் குழந்தையாக இருந்தாலும் சரி, சிசு வளர்வதற்கு கருப்பை கட்டாயம் தேவை.

மாடர்ன் மெடிசின்.காம் - 6 - கருப்பை மாற்றுச் சிகிச்சை!

இந்தியாவில் 4,000 பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை கருப்பை இல்லாமல் பிறப்பதாகவும், மொத்தம் நான்கு லட்சம் பெண்களுக்குப் பிறவியிலேயே கருப்பை இல்லை என்றும் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முன்வந்தாலும், இதில் உள்ள சட்டப் பிரச்னை மிகப்பெரிய தடையாக இருக்கிறது. இந்தச் சூழலில் இவர்கள் அனைவரின் வயிற்றிலும்  பால் வார்க்கும்படியாக மருத்துவத் துறையில் நுழைந்திருக்கிறது, கருப்பை மாற்றுச் சிகிச்சை.

முதல் கருப்பை மாற்றுச் சிகிச்சை

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 36 வயதுப் பெண் ஒருவர், ‘ரொகிடான்ஸ்கி’ (Rokitansky) எனும் மரபணுக் கோளாறால் கருப்பை இல்லாமல் பிறந்தார். ஆனாலும், அவருக்குச் சினைப்பைகளும் சினைமுட்டைகளும் இருந்தன. அவை, கருவாக உருவாவதற்கு ஏற்றதாகக் கருக்குழாயும் கருப்பையும்தான் இல்லை. அவருக்குத் தாயாக வேண்டும், அதுவும் தன் வயிற்றில்தான் அந்தக் குழந்தை வளர வேண்டும்’ என்று ஆசை. ‘அதற்குக் கருப்பை மாற்றுச் சிகிச்சை மட்டுமே ஒரே வழி’ என்றனர் மருத்துவர்கள். அதற்குச்் சம்மதித்தார். அந்தப் பெண்ணின் அதிர்ஷ்டம், அவரின் குடும்ப நண்பரான     61 வயது பெண்மணி ஒருவர், கருப்பையைத் தானமாகத் தருவதற்கு முன்வந்தார்.

அதைப்பெற்று, கருப்பை மாற்றுச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துமுடித்தனர். அதற்கு முன்னர் அவருடைய சினைமுட்டைகளை எடுத்து, கணவரின் விந்தணுவுடன் சேர்த்து, சோதனைக்குழாயில் வளர்த்தனர். இப்படி    13 சினைமுட்டைகளைக் கருவாக்கினர். வளர்ந்த கருவை ஆய்வகத்தில், ‘கிரையோபிரிசர்வேஷன்’ முறையில் பாதுகாத்தனர். அந்தப் பெண்ணுக்குக் கருப்பை மாற்றுச் சிகிச்சை முடிந்த ஒரு வருடத்துக்குப் பிறகு, பாதுகாத்துவைத்த கருமுட்டைகளில் ஒன்றை எடுத்து, அவரின் கருப்பையில் வைத்தனர். மூன்று வாரம் கழித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவரின் கருப்பையில் கரு வளர்ந்திருப்பது உறுதியானது. சிசேரியன் மூலம் குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தை 1.8 கிலோ எடை இருந்தது. தற்போது, தாயும் குழந்தையும் நலம். குழந்தைக்கு வின்சென்ட் என்று பெயர் வைத்துள்ளனர். உலகில் முதன்முதலாகக் கருப்பை மாற்றுச் சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்குப் பிறந்த குழந்தை இதுதான். இதன் மூலம், உலகம் முழுவதிலும் கருப்பைப் பிரச்னையால் கருத்தரிக்க வாய்ப்பில்லாத பெண்கள் பலருக்கும் புதிய தீர்வு கிடைத்துள்ளது.

தற்போது இந்தச் சிகிச்சை இந்தியாவுக்கும் வந்துள்ளது. 2017, மே 14 அன்று புனேயில் உள்ள கேலக்ஸி கேர் லேப்ராஸ்கோப்பிக் இன்ஸ்டிடியூட்டில், தேஜஸ்வினி என்கிற பெண்ணுக்கு இந்தியாவிலேயே முதன்முதலாகக் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விரைவிலேயே மற்ற நகரங்களிலும் இது நடைமுறைக்கு வந்துவிடும்.

(தேடுவோம்...)

 ‘ரொகிடான்ஸ்கி’ நோய் என்றால் என்ன?

பிறவியிலேயே கருப்பை மற்றும் பெண்ணின் பிறப்பு உறுப்பு இல்லாமல் இருக்கும் நிலைமைக்கு ‘ரொகிடான்ஸ்கி கஸ்டர் ஹௌசர் சிண்ட்ரோம்’ (Rokitansky Kuster Hauser Syndrome) என்று பெயர். மரபணுப் பிரச்னையே இந்த நோய்க்கு முக்கியக் காரணம். தாயின் கருவில் குழந்தை வளரும்போது, தாய்க்கு ஏற்படும் சில நோய்கள் மற்றும் அவர் சாப்பிடும் மருந்துகள், குழந்தையின் வளர்ச்சி அணுக்களைச் சிதைத்துவிடுவதால் இந்நோய் ஏற்படுகிறது. சிறு குழந்தையாக இருக்கும்போது இது தெரியாது. ஒரு பெண் 16 வயதுக்குள் பூப்பெய்தவில்லை என்றால், அவருக்கு இந்த நோய் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். பொதுவாக, இவர்களுக்குச் சினைப்பைகள் (Ovaries) இருக்கும். வயதுக்கு ஏற்ப மார்பக வளர்ச்சியும் இருக்கும். பெண்மைத் தன்மையில் எந்தக் குறைபாடும் இருக்காது. இவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம். பெண்ணின் சினைப்பையில் இருந்து சினைமுட்டையை எடுத்து, கணவரின் விந்தணுவோடு கலந்து, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது இதுவரை வழக்கத்தில் இருந்தது. இனி, கருப்பை மாற்றுச் சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணே குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மாடர்ன் மெடிசின்.காம் - 6 - கருப்பை மாற்றுச் சிகிச்சை!

யாரெல்லாம் கருப்பை தானம் செய்யலாம்?

55 வயதுக்கு உட்பட்ட பெண்கள். அம்மா, சித்தி, பெரியம்மா போன்ற மிக நெருங்கிய உறவினர்கள், சிக்கல் இல்லாமல் குழந்தைப்பேறு பெற்றவர்கள், பொது ஆரோக்கியம் சிறப்பாக உள்ளவர்கள் ஆகியோர் கருப்பை தானம் செய்யலாம்.

யாரெல்லாம் கருப்பை தானம் பெறலாம்?

35 வயதுக்கு உட்பட்ட பெண்கள், சினைப்பையில் குறைபாடு இல்லாதவர்கள். தேவையான அளவுக்குச் சினைமுட்டை உள்ளவர்கள். பொது ஆரோக்கியம் சிறப்பாக உள்ளவர்கள் ஆகியோர் கருப்பை தானம் பெறலாம்.