மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 19 - தரமான வாழ்வு... நிம்மதியான மரணம்... இந்தியாவின் இடம் எது?

டாக்டர் வெ.ஜீவானந்தம்
வாழ்க்கைத்தரம் தொடர்பான பல ஆய்வுகளைப் படித்திருப்போம். ‘வாழத் தகுதியான நாடுகள் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது?’ என்பது தொடர்பாக பல முறை விவாதங்கள் எழுந்திருக்கின்றன. வாழ்வு ஒருபக்கம் இருக்கட்டும்; மரணம்? ‘தி எகனாமிஸ்ட்’ பத்திரிகை ஒரு ஆய்வை 2016-ம் ஆண்டு வெளியிட்டது. ‘நிம்மதியான மரணத்தைத் தழுவ முடிகிற நாடுகள் பட்டியலில் இந்தியா 67-வது இடத்தில் இருக்கிறது’ என்றது அந்த ஆய்வு. மொத்தம் 80 நாடுகளில்தான் இந்த ஆய்வு செய்யப்பட்டது. இதிலேயே இந்தியாவுக்கு இவ்வளவுக் கீழேதான் இடம்.

அது என்ன நிம்மதியான மரணம்? வேதனை தரும் விஷயம்தான் என்றாலும், ஒருவர் மரணத்தை மகிழ்வோடு எதிர்கொள்ளும் சூழலை அவர் வாழும் தேசம் ஏற்படுத்தித் தர வேண்டும். உறவுகளற்ற தனிமையில் மரணமடைவது துயரமானது; மரணப்படுக்கையில் எல்லோருக்கும் தொந்தரவு கொடுத்துவிட்டு, ‘நம் உறவுகளுக்கு இப்படி ஒரு வேதனையைத் தருகிறோமே’ என வலியோடு மரணத்தைத் தழுவுவது அதைவிடவும் துயரமானது. வாழ்க்கையில் மிக மோசமான கஷ்டங்களைச் சந்திக்கும் நபர்கள் ‘நிம்மதியா சாகக்கூட முடியாது போலிருக்கு’ எனப் புலம்புவதில் நிறைய அர்த்தம் உண்டு.
மரணத்தின் பிடியிலிருந்து ஒருவரை மீட்கும் வல்லமை மருத்துவத்துக்கு உண்டு. ஆனால், ‘இனி பிழைக்கவே வழியில்லை’ எனக் கைவிடப்படும் ஒரு முற்றிய நோயாளிக்கு நிம்மதியான மரணத்தைத் தருவதற்கான இடம், வீடோ, மருத்துவமனையோ அல்ல. இறுதிநிலைக் காப்பகம் (Hospice) அதைச் செய்யும். ‘சாகக் கிடக்கும் நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், அவரது குடும்பத்தினரின் பிரச்னைகளைக் குறைப்பதுமே ஆதரவு சிகிச்சை (Palliative care)’ என வரையறுக்கிறது உலக சுகாதார நிறுவனம். அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் முக்கியமில்லை. பரிவு, ஆலோசனை, கருணை போதுமானது.
ஒரு நண்பர் தன் தாயாரை என்னிடம் அழைத்துவந்தார். அந்த அம்மாவுக்கு மார்பகத்தில் கட்டி உள்ளது. ‘‘பல நாட்களாகவே இது இருக்கிறது. இப்போது தாங்க முடியாத வலி தருகிறது’’ என்றார். அவரது மார்பகத்தைப் பரிசோதனை செய்துதான் சொல்ல முடியும் என்றேன். மிகுந்த தயக்கத்துடன் பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டார். தொடர் பரிசோதனையில் அவருக்குப் புற்றுநோய் இருப்பது உறுதியானது. ‘உடனடியாக அறுவை சிகிச்சை செய்துகொண்டு, கதிர்வீச்சு சிகிச்சை தேவைக்கேற்ப செய்ய வேண்டும். வேறு இடங்களுக்கு நோய் பரவும்முன் மருத்துவம் பார்த்துக்கொண்டால், நீண்ட நாட்கள் பிரச்னையின்றி வாழலாம்’ என்று அறிவுரை கூறி, கடிதமும் கொடுத்து அனுப்பினேன்.

ஆனால் அவர் சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. பிரார்த்தனை மூலமே சரியாகிவிடும் என்று நம்பினார்.
சில மாதங்களில் அந்த நண்பர் மீண்டும் வந்தார். தன் தாயார் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், வலி தாங்கமுடியாமல் இரவு முழுதும் அலறுவதாகவும் கூறினார். குழந்தைகள் தேர்வுக்குப் படிக்கும் காலமாக இருப்பதால் என்ன செய்வதென்றுப் புரியவில்லை என்றும் புலம்பினார். நான் அவருடைய வீட்டுக்குச் சென்றேன். இரண்டு அறைகள் கொண்ட வீடு. ஒரு அறையில் அவருடைய தாய் படுத்திருந்தார். உள்ளே நுழைந்தபோதே, நோயின் மிக முற்றிய நிலையை உணர்த்தும் மோசமான நாற்றம் வீசியது. இதில் எப்படிக் குழந்தைகள் இருக்க முடியும் என்ற பரிதாப உணர்வுதான் உண்டானது.
இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்கள், ஈரோடு நகரத்தின் நல்லுள்ளம் கொண்ட மக்களுடன் இணைந்து ‘இமயம் இறுதிநிலை நோயாளிகள் காப்பகம்’ என்ற பெயரில் காப்பகம் உருவாக்கியுள்ளனர். இந்தக் காப்பகத்தை அன்று குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் திறந்து வைத்துப் பாராட்டினார் என்பது பெருமைக்குரியது. அங்கு அவரை அனுப்பி வைத்தேன். ஒரு மாதம் அங்கு தனியறையில் அவர் இருந்தார். வலியின்றி உறங்க ஊசி மருந்துகள் கொடுத்து, கட்டியை சுத்தம்செய்து அனைத்துப் பரிவான கவனிப்புகளையும் அங்கிருந்த செவிலியர் செய்து உதவினர். நண்பரும், அவருடைய மனைவியும் அவ்வப்போது போய்ப் பார்த்து வந்தனர். குழந்தைகள் தேர்வை முடித்த பின் சென்று பாட்டியைப் பார்த்து வந்தனர். அவ்வப்போது அவரது பிரார்த்தனைக் குழுவினர் சென்று, அவரை மட்டுமின்றி, பிற நோயாளிகளையும் கூட்டிப் பாடல்கள் பாடிப் பிரார்த்தித்தனர். ஒரு மாத போராட்டத்துக்குப் பின், ஒரு நாள் அவர் தன் வேதனையிலிருந்து விடுதலை பெற்று மரணத்தை அடைந்தார்.
பிறகு ஒரு நாள் மாலை அந்த நண்பர் வந்து, கண்ணீருடன் நன்றி சொன்னார். டாக்டர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கும் பலரில் ஒருவர் அவர். மருத்துவர்கள் கூடி இத்தகைய உன்னதமான, மனிதாபிமானச் சேவையை முற்றிலும் இலவசமாகச் செய்துவருவது பற்றி வெகுவாகப் பாராட்டினார். இனி ஒவ்வொரு மாதமும் தன் தாயாரின் நினைவாக அரிசி வாங்கித் தருவதாகக் கூறினார். வருடங்கள் ஓடி விட்டன. அவர் ஒவ்வொரு மாதமும் தன் குடும்பத்துடன் ஒரு மூட்டை அரிசி கொண்டுவருவது தொடர்கிறது. தன் மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய மேமோகிராம் சோதனையைச் செய்ததையும் அவர் சொன்னார்.
புற்றுநோய், எய்ட்ஸ் என முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளைச் சாதாரணக் குடும்பங்கள், வீட்டில் வைத்துக் காப்பதென்பது இயலாத ஒன்று. மருத்துவமனைகளில் வைத்துப் பராமரிப்பதும் சாத்தியமில்லை. இத்தகைய சூழலில், மரணம் வரும் வரை வலியும், வேதனையுமின்றிக் குறைந்தபட்ச மருத்துவ உதவிகளைப் பரிவுடன் வழங்கும் ‘இறுதிநிலைக் காப்பகங்கள்’ தவிர்க்க முடியாத தேவையாகி உள்ளன.
இதற்கு டாக்டர்களின் மருத்துவச் சேவை பெரிதாகத் தேவையில்லை. குறைந்தபட்ச மருத்துவ வழிகாட்டலை வழங்கினால் போதும். மருத்துவ உதவியாளர்களைக் கொண்டுச் சிறந்த மனிதாபிமானப் பாதுகாப்பைத் தந்து விட முடியும். இதை மருத்துவர்களும், கருணை உள்ளம் கொண்ட பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும் கூடி எளிதாகச் செய்துவிட முடியும். கருணை கொண்ட சேவையில் கடவுளைக் கண்ட நிறைவைப் பெற முடியும். பல கிறிஸ்தவ அமைப்புகள் இத்தகைய இல்லங்களைப் பல நகரங்களில் அழகாக நடத்தி வருவதைக் கண்டுள்ளேன்.
கேரளத்தில் இச்சேவை மாறுபட்ட வகையில் செய்யப்பட்டு வருகிறது. பல நகரங்களில், சேவை உள்ளம் கொண்ட பலர், குறுகியகாலப் பயிற்சி பெற்று, வீடு தேடிச் சென்று சேவை புரிகின்றனர். நோயாளியைச் சுத்தம் செய்வது, வலியின்றி உறங்குவதற்கான மருந்துகள் தருவது போன்றவற்றுடன், குடும்பத்தினரையும் மெல்ல இச்சேவைக்குப் பயிற்றுவித்து விடுகின்றனர். இதற்கான பயிற்சி தரும் நிறுவனங்களும் உள்ளன. இந்த ‘கேரள மாதிரி சேவை’ உலக சுகாதார நிறுவனத்தால் பாராட்டப்பட்டுள்ளது.

பெங்களூரில் ‘கருணாஷ்ரயா’ என்ற ஒரு சேவை நிறுவனம் உள்ளது. தொண்டு நிறுவனங்களுடன் கூடி எழில் மிக்க, நீர் சூழ்ந்த, பசுமை நிறைந்த அழகிய காப்பகத்தை ஒரு நட்சத்திர ஹோட்டல் போல நடத்திவருகிறது.
செவிலியர், சமூக சேவகர்கள், பிசியோதெரபிஸ்ட், மனநல ஆலோசகர்கள், ஆன்மிக அமைப்பினர் ஆகியோர் கூடி, தொழில்ரீதியில் குறைந்தபட்சக் கட்டணத்துடன் இந்தச் சேவையைச் செய்யலாம். அவர்களின் வருமானத்தையும், சமூகத் தேவையையும் நிறைவுசெய்வதாக இத்தகைய காப்பகங்களை உருவாக்க முடியும். இச்சேவையை முறையாகச் செய்வதற்கான குறுகியகாலப் பயிற்சி மற்றும் மருத்துவர்களுக்கான உயர்கல்வி பெறவும் வாய்ப்புகள் உள்ளன.
கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்கள் இந்த ஆதரவு சிகிச்சை குறித்து கொள்கை முடிவுகளை எடுத்துள்ளன. தமிழகம் இந்த விஷயத்தில் பின்தங்கி இருக்கிறது. இந்தியாவில் மரணத் தறுவாயில் ஆதரவு தேவைப்படும் நோயாளிகளில் வெறும் இரண்டு சதவிகிதம் பேருக்கே இந்த ஆதரவு சிகிச்சை கிடைக்கிறது என்பது வேதனை. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் இறுதிநிலை நோயாளிகள் வலியால் துடித்து செத்துக் கொண்டுள்ளனர். ‘மருத்துவமனை கட்டினால் காசு வரும்... காப்பகம் கட்டினால் என்ன வரும்?’ என்ற அலட்சியம் கூடாது.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் வள்ளல் மனம் கொண்டோர் எங்கும் உள்ளனர். அவர்களை இணைக்கும் நேர்மையாளர்கள்தான் தேவை. இந்த நம்பிக்கைதான் வேதனையில் வாடும் அவர்களுக்குப் பெரும் ஆறுதலாகும்.
(நலம் அறிவோம்)