மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு!

மாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு!
பிரீமியம் ஸ்டோரி
News
மாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு!

கு.கணேசன் பொதுநல மருத்துவர்

மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியதுதான் என்றாலும், முழங்கால் மூட்டில்

மாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு!

ஏற்படும் வலியைத்தான் ‘மூட்டுவலி’ (Arthritis) என்று பொதுவாகச் சொல்கிறோம். இன்றைய தினம், பொது மருத்துவரிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் மூன்றில் ஒருவர் மூட்டுவலி காரணமாகவே வருகிறார். இந்தியாவில் மட்டும் 15 கோடி பேர் ஏதாவது ஒரு மூட்டுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மூட்டுவலி என்பது முன்பெல்லாம் முதியவர்களைப் பாதிக்கும் நோயாக இருந்தது; இப்போதோ இளைஞர்களையும், டீன் ஏஜ் பெண்களையும் பாதிக்கின்ற நோயாக வளர்ந்துகொண்டு இருக்கிறது.

பொதுவான காரணங்கள்

உடல் பருமன், முதுமை, மூட்டில் அடிபடுதல், மூட்டுச் சவ்வு கிழிதல், மூட்டுத் தேய்மானம், யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகி மூட்டுகளில் படிவது, பாக்டீரியா கிருமித்தொற்று, ருமாட்டிக் நோய், காசநோய் போன்றவை முழங்கால் மூட்டுவலிக்குப் பொதுவான காரணங்கள்.

மாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு!

எலும்பு வலு இழப்பு நோய்

பொதுவாக, ஒவ்வோர் எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். பழைய செல்கள் நீக்கப்பட்டு, புதிய செல்கள் உருவாகும். இளமையில் இது வேகமாக நடக்கும். முதுமை நெருங்கும்போது இது தாமதமாகும். பழைய செல்லுக்குப் பதில் புதிய செல்கள் உருவாகாமலே போகும். இதனால், அங்கு சிறுசிறு துவாரங்கள் ஏற்பட்டு எலும்பு வலுவிழக்கும். இதற்கு ‘எலும்பு வலு இழப்பு நோய்’ (Osteoporosis) என்று பெயர். இந்த நோய் முழங்காலைப் பாதிக்குமானால், குருத்தெலும்புகள் நொடிந்து மூட்டுவலியை ஏற்படுத்தும்.

பொதுவாக, பெண்களுக்குதான் இந்த வகை மூட்டுவலி அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காரணம், இவர்களுக்கு மாதவிலக்கு நின்று போனதும், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பது குறைவதால், உடலில் கால்சியம் உற்பத்தி குறையும். இதனால், எலும்பில் படியும் கால்சியத்தின் அளவு குறைந்து அதன் அடர்த்தியும் குறையும். இது மூட்டுவலிக்கு வரவேற்பு கொடுக்கும். அதிலும் உடல் பருமன் மற்றும் ஹார்மோன் கோளாறுகள் உள்ள பெண்களுக்கு இளம் வயதிலேயே முழங்கால் மூட்டுவலி வருவதற்கு இதுதான் காரணம்.

மூட்டுத் தேய்மானம்

முதுமையில் முழங்கால் மூட்டுவலி ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அங்கு ஏற்படுகிற தேய்மானம்தான். வழக்கத்தில், முழங்கால் மூட்டில் உள்ள குருத்தெலும்பு வழுவழுப்பாக இருக்கும். அங்குள்ள சைனோவியல் திரவத்தில் ‘கொலாஜன்’ எனும் புரதப்பொருள் இருப்பதுதான் இதற்குக் காரணம். முதுமை நெருங்கும்போது, இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தி குறைந்துவிடும்; இதனால், சைனோவியல் திரவமும் குறைந்துவிட, குருத்தெலும்புத் திசுக்கள் தேய்ந்துவிடும். இதன் விளைவால், மசகு போட மறந்த சைக்கிள் சக்கரம் கிரீச்சிடுவதுபோல, வயதாகும்போது முழங்கால் மூட்டுகள் உரசிக்கொள்ள, மூட்டுவலி ஏற்படுகிறது. நாள்கள் ஆகஆக, அங்கு அழற்சி உண்டாகி, வலி கடுமை ஆகிறது. இதை ‘முதுமை மூட்டழற்சி’ (Osteoarthritis) என்கிறார்கள் மருத்துவர்கள்.

எலும்பில் ஏற்படும் முடிச்சுகள்

அடுத்து, அழற்சி ஏற்பட்டுள்ள குருத்தெலும்பில் சிறிதாக எலும்பு முடிச்சுகள் (Osteophytes) முளைக்கின்றன. இதனால் குருத்தெலும்பு கடினமாகிவிடுகிறது. தோலில் ஏற்பட்ட காயம் ஆறிய பின்பு, அங்கு தழும்பு ஏற்படுகிறது அல்லவா? அதுமாதிரிதான் இது. இந்த நிலைமையில் முழங்காலை அசைத்தால், இந்தக் கடினப்பகுதிகள் உரசிக்கொள்ள மூட்டுவலி கடுமையாகிறது.

மாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு!

மூட்டுத் தேய்மானத்தை எப்படி அறிவது?

சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு எழுந்து நில்லுங்கள். மூட்டு பிடிப்பதுபோல் இருக்கிறதா? கொஞ்சதூரம் நடந்து செல்லுங்கள். அந்தப் பிடிப்பு விட்டதுபோல் இருக்கிறதா? அப்படியானால், உங்களுக்கு மூட்டுத் தேய்மானம் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்.

மூட்டுவலிக்குச் சிகிச்சைகள்

மூட்டுவலி ஆரம்பநிலையில் உள்ளவர்கள் வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் பிசியோதெரபி மூலம் நிவாரணம் பெற முடியும். இவற்றில் SWD, IFT சிகிச்சைகள் பிரதானம். இவற்றுடன் தொடைத் தசைகளுக்குப் பயிற்சி கொடுத்தால் மூட்டுவலி குறையும். பொதுவாக, மூட்டுவலிக்கு அதிக நாள்கள் தொடர்ந்து வலி மாத்திரைகளையும்  ஸ்டீராய்டு மாத்திரைகளையும் சாப்பிடக்கூடாது. இதனால், சிறுநீரகங்கள் பாதிப்படையும்.

சிலருக்கு முழங்கால் மூட்டுக்குள் ஸ்டீராய்டு ஊசியைப் போட்டால், சில மாதங்களுக்கு வலி இருக்காது. இன்னும் சிலருக்கு ‘ஆர்த்ராஸ்கோப்’ மூலம் மூட்டின் உள்பகுதி சுத்தம் (Arthroscopic lavage) செய்யப்படும். இதனால் மூட்டில் வலி ஏற்படுத்தும் பொருள்கள் வெளியேறிவிடும். இதன் பலனால்,  ஆறு மாதமோ, ஒரு வருடத்துக்கோ மூட்டில் வலி ஏற்படாது.

செயற்கை மூட்டுமாற்று சிகிச்சை

மூட்டில் தேய்மானம் மிக அதிகமாக இருந்தால், இந்தச் சிகிச்சைகள் எல்லாம் திருப்தி தராது. அப்போது மூட்டுவலிக்கு முழுமையான தீர்வு தருவது, ‘செயற்கை மூட்டுமாற்று சிகிச்சை’ (Total Knee Replacement) மட்டுமே. தேய்ந்துபோன குருத்தெலும்பை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் உலோகமும் பாலிஎதிலீனும் (Polyethylene) கலந்து தயாரிக்கப்பட்ட செயற்கை மூட்டைப் பொருத்தும் அறுவை சிகிச்சை இது. எவர்சில்வர், குரோமியம், கோபால்ட், டைட்டானியம், செராமிக்ஸ், ஜிர்க்கோனியம் எனப் பலதரப்பட்ட உலோகக் கலவைகளை இதில் பயன் படுத்துகிறார்கள். இவற்றில் புது வரவு ஆக்சினியம் (Oxinium). இது ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட ஜிர்க்கோனியம் கலவை; மற்ற உலோகக் கலவைகளைவிட பல வழிகளில் சிறந்தது; அதிக வலுவானது. வழுவழுப்பானது; சீக்கிரத்தில் தேயாது; அதிகமாக வளையும் தன்மை கொண்டது. குறைந்த எடை உடையது. இதற்கு  ஒவ்வாமை ஏற்பட வழியில்லை. இதைப் பொருத்திக் கொண்டவருக்கு மூட்டுவலி இருந்த இடம் தெரியாது.

என்றாலும், இது குறிப்பிட்ட காலத்துக்குத்தான் முழுப்பலன் தரும். 60 வயதில் இந்தச் சிகிச்சையைச் செய்தால் 75 வயதுவரை பலன் தரலாம். 30 வயதில் இதைச் செய்தால் 45 வயதில் மூட்டில் மீண்டும் வலி தொடங்க வாய்ப்பு உண்டு. எனவே, இவர்களுக்காகவே இப்போது புதிதாகப் புகுந்துள்ளது ‘ஸ்டெம் செல் குருத்தெலும்புச் சிகிச்சை’ (Stem cell cartilage treatment).

ஸ்டெம் செல் சிகிச்சை!

ஸ்டெம் செல்கள் என்பவை உடலின் அடிப்படை ஆதார செல்கள். ரத்தம், எலும்பு மஜ்ஜை, தொப்புள்கொடி ரத்தம் போன்ற வற்றிலிருந்து ஸ்டெம் செல்களைப் பிரித்து, நம் தேவைக்கேற்ப எலும்பு, குருத்தெலும்பு, இதயம், கல்லீரல் என உடலின் எந்த ஒரு செல்லாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.

மூட்டில் வலி உள்ளவர்களுக்கு இடுப்பு எலும்பிலிருந்து  ரத்தத்தை எடுத்து ‘ஹார்வஸ்ட்’ எனும் கருவியில் வைத்து, ஸ்டெம் செல்களைப் பிரிக்கிறார்கள். அதே நேரத்தில், பயனாளியின் மூட்டுப்பகுதியில் இரண்டு மிகச் சிறிய துளைகளைப் போட்டு, அதன் வழியாக ஆர்த்ராஸ்கோப் கருவியை உள்ளே செலுத்தி, குருத்தெலும்பின் பாதிக்கப்பட்ட பகுதியைச் சுத்தம் செய்கிறார்கள். பிறகு, அந்த எலும்பில் சிறு துளைகளைப் போடுகிறார்கள். இப்போது ‘ஹார்வஸ்ட்’டில் பிரித்தெடுக்கப்பட்டுத்  தயாராக இருக்கிற ஸ்டெம் செல்களையும் ரத்தம் உறைய உதவுகிற வேதிப்பொருளையும் உள்ளே செலுத்துகிறார்கள். எலும்பில் துளையிடப்பட்ட இடங்களில் இந்தக் கலவை உள்வாங்கப்படுகிறது. இந்தக் கலவை உடனே உறைந்துவிடும் என்பதால் குருத்தெலும்பில் ஒரு படிகம் உருவாகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாகக் குருத்தெலும்புத் திசுவாக வளரத் தொடங்குகிறது. அடுத்த ஒரு வருடத்தில் மூட்டில் அந்த இடம் முழுவதும் இயற்கையான குருத்தெலும்பாக மாறியிருக்கும். இதன் பலனால், மூட்டுவலி முற்றிலும் குணமாகும். இந்தச் சிகிச்சை இப்போது சென்னையிலும் மேற்கொள்ளப்படுகிறது.

 (தேடுவோம்)