
செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்
நம்மில் நிறைய பேருக்குக் குதிகால் வலி ஏற்பட்டிருக்கலாம். படுத்து எழுந்திருக்கும்போது காலை கீழே

வைக்கவே முடியாத அளவுக்கு வலி இருக்கலாம். கொஞ்ச நேரம் நடந்த பிறகு வலி சரியாகிவிடும்.
இந்த வலி ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் உள்ளங்காலில் ஏற்படும் திசு அழற்சியே. நம்முடைய கெண்டைக்கால் சதையானது தசை நாராக மாறி (Achilles Tendon) குதிகால் எலும்புடன் இணைகிறது. குதிகால் எலும்பிலிருந்து (Calcaneum) திசுக்கள், பாதத்தின் கீழ்ப்பகுதியில் பிரிந்து, கால் விரல்களில் இணைகிறது. இந்தத் திசுவை ‘பிளான்டர் திசுப்படலம்’ (Plantar fascia) என்கிறோம்.
குதிகால் எலும்பில் இருக்கும் இந்தத் திசுவில் வீக்கம் ஏற்படும்போது, இதை உள்ளங்கால் திசுப்படல அழற்சி (Plantar Fascitis) என்று சொல்கிறோம்.
எக்ஸ்-ரேயில் சில சமயம் குதிகால் எலும்பில் ‘பிளான்டர் ஸ்பர்’ (Plantar spur) எனும் கூரான அமைப்பு இருக்கும். ஆனால், இந்தக் கூரான எலும்பின் அமைப்பை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, மெதுவான ஸ்பான்ஜ் காலணி, இயன்முறை சிகிச்சை போன்றவை இதற்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. இயன்முறை சிகிச்சைகளில் முக்கியமானது குதிகால் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் (Achilles Stretching excercises) ஆகும்.
முறையாக, கெண்டைக்கால் சதைக்கு இயன்முறை பயிற்சி செய்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த முறையில் வலி குறையவில்லை என்றால் குதிகால் பகுதியில் (Platelet Rich Plasma)பி.ஆர்.பி (PRP) அல்லது ஸ்டெம்செல் (Stemcell) ஊசிகளைச் செலுத்தலாம். இதனால், வலி குறையுமே தவிர நிரந்தரத் தீர்வு கிடைக்காது. மேலும், இதுபோன்ற குதிகால் பிரச்னைக்கு, அறுவைசிகிச்சை முறைகள் பயன்தராது.
உள்ளங்கால் திசுப்படல அழற்சி ஏற்படாமல் இருக்க, உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக வார்ம் அப் (Warm up) பயிற்சிகள் செய்வது மிக அவசியமாகும். மேலும், ஹை ஹீல்ஸ் (High heels) காலணிகள் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.

கெண்டைக்கால் தசை, குதிகால் எலும்பின் பிற்பகுதியில் சேர்கிறது என்று முன்னரே பார்த்தோம். இந்தத் தசையும் எலும்பும் சேரும் பகுதியைக் குதிகால் தசைநார் என்று அழைக்கிறோம். இந்தப் பின்னங்கால் பகுதியில் உள்ள தசைநாரில், பொதுவாக ரத்தஓட்டம் குறைவாக இருக்கும். அதுவே அதிகப் பிரச்னைகள் ஏற்படுவதற்குக் காரணம். இந்தப் பகுதியில் வீக்கம் ஏற்படும்போது, அதை ‘அகில்லெஸ் டெண்டினோபதி’ (Achilles Tendinopathy) என்று கூறுகிறோம்.
இப்படியான வலி ஏற்படும்போது, எலும்பு களுக்கான சிறப்பு மருத்துவரை அணுகுவது அவசியம். எம்ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனையின் மூலம் எந்தளவுக்கு வீக்கம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய முடியும். பரிசோதனையின் முடிவுகளைப் பொறுத்துக் காலணிகள் பரிந்துரைக்கப்படும். இந்தச் சிறப்புக் காலணிகள் மூலம் பின்னங்காலில் ஏற்படும் வீக்கம் மெதுவாகக் குறையும். இயன்முறை சிகிச்சை மற்றும் குதிகால் பயிற்சி நல்ல பலனைத் தரும்.
இவற்றுக்குப் பிறகும் வலி குறையவில்லை என்றால் நுண்துளை அறுவைசிகிச்சை (Achilles Tendoscopy) மூலம் இதைச் சரிசெய்யலாம். நுண்துளை அறுவைசிகிச்சை மூலம் நேராக இந்தத் தசைநாரைப் பார்த்து, பி.ஆர்.பி (PRP) ஊசியைச் செலுத்தவும் முடியும்.
அடுத்த இதழில் தோள் மூட்டில் ஏற்படும் பிரச்னைகள்...