
கு.கணேசன், பொதுநல மருத்துவர்
முன்பெல்லாம் முப்பது வயதைத் தாண்டியவர்களுக்குத்தான் மூக்குக் கண்ணாடி தேவைப்படும்.

இன்றைக்கோ, மூன்று வயதுக் குழந்தைக்கே கண்ணாடி போடவேண்டிய அவலம்! கல்லூரிக்குப் போகும் வயதில் உள்ளவர்கள், கண்ணுக்குக் கான்டாக்ட் லென்ஸ் அணிகிறார்கள். அந்தளவுக்குப் பார்வைக் குறைபாடுகள் (Refractive errors) வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் பாதித்திருக்கின்றன.
`இன்றைய தலைமுறையினரின் உணவு முறையும் வாழ்க்கை முறையும் மாறிவிட்ட காரணத்தால், கண்ணில் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன’ எனத் தெரிவிக்கின்றன பல்வேறு புள்ளிவிவரங்கள். பாதிப்புகள் அதிகமான அதே அளவுக்கு அவற்றைச் சரிசெய்வதற் கான நவீன தொழில்நுட்ப வசதிகளும் வந்துவிட்டன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்...
பார்வை என்பது என்ன?
நாம் பார்க்கும் பொருளின் வெளிச்சம், ஒளிக்கதிர்களாகக் கண்ணுக்கு வருகிறது. அது `கார்னியா’ எனும் வட்ட வடிவச் சவ்வுப்படலம் வழியாக உள்ளுக்குள் நுழைந்து, விழி லென்ஸைக் கடந்து, விழித்திரையில் பிம்பமாக விழுகிறது. அங்குள்ள கண் நரம்பு அந்தப் பிம்பங்களை மின்தூண்டல்களாக மாற்றி, மூளைக்கு எடுத்துச்செல்கிறது. அவற்றை மூளை பரிசீலித்து, நாம் பார்க்கும் பொருளை உணர்த்துகிறது. இந்த நிகழ்வில் ஏதேனும் குறை ஏற்பட்டால், அது பார்வையைப் பாதிக்கிறது.
1. கிட்டப் பார்வை (Myopia - Short Sightedness)
கிட்டப் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு விழிலென்ஸ் அதிகமாக வளைந்திருக்கும். இதனால், விழிலென்ஸைக் கடக்கும் ஒளி, விழித்திரைக்கு முன்பாகவே வளைக்கப்பட்டு, பிம்பமாகக் குவிக்கப்பட்டுவிடும். இதனால், அவர்களுக்குத் தூரத்திலுள்ள பொருள்கள் மங்கலாகவும் அருகிலுள்ள பொருள்கள் தெளிவாகவும் தெரியும்.

2. தூரப் பார்வை (Hypermetropia - Long Sightedness)
இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு விழிலென்ஸ் தட்டையாக இருக்கும். போதிய அளவு வளைந்திருக்காது. இதனால் விழிலென்ஸ் வழியாகக் கடத்தப்படும் ஒளியின் பிம்பம் விழித்திரைக்கு அப்பால் விழும். எனவே, இவர்களுக்கு அருகிலுள்ள பொருள்கள் மங்கலாகவும் தூரத்திலுள்ள பொருள்கள் தெளிவாகவும் தெரிகின்றன.
3. பார்வைச் சிதறல் (Astigmatism)
விழிலென்ஸ் வழியாகக் கடத்தப்படும் ஒளி, விழித்திரையில் ஒரே கோணத்தில் குவிக்கப்படாமல், வெவ்வேறு கோணங்களில் குவிக்கப்பட்டால், பார்வை குறையும். இதற்குப் ‘பார்வைச் சிதறல்’ என்று பெயர். அதாவது, இயல்பான கண்ணின் விழித்திரையில் கடிகார வட்டத்தின் அனைத்துக் கோணங்களிலும் ஒளி சீராக விழும். ஆனால், பார்வைச் சிதறல் உள்ளவர்களுக்குக் கடிகார வட்டத்தின் ஆறு, பன்னிரண்டு எனும் கோணங்களில் ஒளி விழும். மூன்று, ஒன்பது எனும் கோணங்களில் விழுவதில்லை. அப்போது அங்கு பார்வை குறையும். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் வாசிக்கும்போது எழுத்துகள் சாய்வாகவும், எழுத்துகளின் முனையில் வால் முளைத்தது போலவும் தெரியும். சிலருக்கு எழுத்துகள் இரட்டையாகத் தெரியும்.
4. கூம்பு விழிப்படலம் (Keratoconus)
இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்குக் கண்ணின் கார்னியா கூம்பு வடிவத்தில் காணப்படும். இதனால், விழிக்கோளத்தின் அமைப்பு மாறிவிடும். எனவே, பார்வை மங்கலாகத் தெரியும். வாசிப்பது, வாகனம் ஓட்டுவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவை சிரமமாக இருக்கும்.
சிகிச்சைகள்
1. பழைய சிகிச்சை முறை
கிட்டப்பார்வைக் குறைபாடு உள்ளவர்களை, குழிலென்ஸ் (Concave lens) கொண்ட கண்ணாடியை அணியச் சொல்வார்கள். தூரப்பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு, குவிலென்ஸ் (Convex lens) கொண்ட கண்ணாடியை அணியச்சொல்வார்கள். இதேபோல் பார்வைச் சிதறல் உள்ளவர்களுக்குத் தேவைக்கேற்ப இரண்டு வகை லென்ஸ்களும் பொருத்தப்பட்ட கண்ணாடி அணியச் சொல்வதும், கண்ணாடி அணிய விருப்பம் இல்லாதவர்களுக்குக் கான்டாக்ட் லென்ஸ் பொருத்திக்கொள்ளச் சொல்வதும் பழைய சிகிச்சைமுறைகள்.

2. புதிய சிகிச்சை முறை
பார்வைக் குறைபாடுகளைச் சரிசெய்ய கத்தியின்றி, ரத்தமின்றி மேற்கொள்ளப்படும் ஒரு நவீன சிகிச்சைமுறை வந்திருக்கிறது. ‘லேசிக்’ (Lasik) லேசர் என்று அதற்குப் பெயர். இது கார்னியாவின் அமைப்பை மாற்றி அமைத்து, அதன் வழியாகக் கடத்தப்படும் ஒளிக்கற்றையை விழித்திரையில் சரியாக விழுமாறு தகவமைத்துத் தருவதால், கண்ணுக்குக் கண்ணாடி இல்லாமலும் கான்டாக்ட் லென்ஸ் இல்லாமலும் பார்வை தெளிவாகத் தெரிய உதவுகிறது.
எக்சைமர் லேசர்
முதலில் ஃபெம்ட்டோசெகண்ட் லேசரைப் (Femtosecond laser) பயன்படுத்திக் கார்னியாவிலிருந்து மெல்லிய சவ்வை வட்ட வடிவில் குக்கர் மூடியைத் திறப்பதுபோல் திறக்கிறார்கள். அதன் அடியிலுள்ள திசுக்களை எக்சைமர் லேசரைப் (Excimer laser) பயன்படுத்திச் சிறிதளவு அகற்றுகிறார்கள். பிறகு, முதலில் திறந்த சவ்வை மீண்டும் அதே இடத்தில் பொருத்திவிடுகிறார்கள். இது பொதுவான நடைமுறை. கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கு விழிலென்ஸின் சவ்வுப்படலம் அதிகப்படியாக வளைந்திருப்பதால், அதை இந்த லேசரைக் கொண்டு நிமிர்த்துகிறார்கள். இதனால், உள்ளே செல்லும் ஒளி, விழித்திரையில் சரியாக விழுந்து பார்வையைச் சரிசெய்கிறது. தூரப்பார்வை உள்ளவர்களுக்கு விழிலென்ஸின் சவ்வுப்படலம் போதிய அளவு வளைந்திருப்பதில்லை. எனவே, அதை இந்த லேசரைக் கொண்டு கூர்மையாக்கு கிறார்கள். இதனால், உட்செல்லும் ஒளி, போதுமான அளவுக்கு வளைந்து, விழித் திரையில் சரியாக விழுகிறது. இதனால் பார்வை தெளிவாகத் தெரிகிறது.
கார்னியா
பார்வைச் சிதறல் உள்ளவர்களுக்குக் கார்னியாவின் மீது சிறிய கீறல் போடுகிறார்கள். இதற்கு மைக்ரோகெரட்டோம் (Microkeratome) அல்லது ஃபெம்ட்டோசெகண்ட் லேசரைப் பயன்படுத்துகிறார்கள். இப்படி மேல் படலம் திறக்கப்பட்டதும், சரிசெய்யவேண்டிய கார்னியாவின் பகுதியைப் பொறுத்து எக்சைமர் லேசரைப் பாய்ச்சுவார்கள். கார்னியா சரி செய்யப்பட்டதும், முதலில் திறக்கப்பட்ட சவ்வுப்படலத்தை மீண்டும் பழைய நிலையில் வைத்து மூடிவிடுகிறார்கள். பின்னர் அது தானாகவே ஒட்டிக்கொள்ளும். இதன் காரணமாக இப்போது பார்வை சரியாகத் தெரியும். சில நிமிடங்களுக்குள் இந்தச் சிகிச்சை முடிந்துவிடும். ஆகவே, நோயாளி மருத்துவமனையில் தங்கவேண்டியதில்லை.
யாருக்குத் தேவைப்படும்?
மேலே கூறப்பட்ட சிகிச்சையை 18-ல் இருந்து 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கே செய்ய முடியும். மேலும், இவர்களின் கார்னியா ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பார்வைக் குறைபாடு ஆரம்பநிலையில் இருக்க வேண்டும். கூம்பு விழிப்படல நோய் (Kerotokonus), விழித்திரைக் குறைபாடு, கட்டுப்படாத சர்க்கரை நோய், கண் வறட்சி, தீவிரக் கண் தொற்று, கர்ப்பம், விழி வாதம் போன்றவை உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள இயலாது.
கூம்பு விழிப்படலத்துக்குச் சிகிச்சை
கூம்பு விழிப்படல பாதிப்புக்கென சிறப்பு கான்டாக்ட் லென்ஸ் உள்ளது. ‘Rigid gas permeable (RGP) contact lens’ என்று அதற்குப் பெயர். ஆனால், இதிலுள்ள ஒரு குறை என்னவென்றால், குறிப்பிட்ட கால இடைவெளியில் இதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். தற்போது `C3 R Intact’ எனும் பிளாஸ்டிக் பொருள் கார்னியாவின் மீது பொருத்தப்படும். இந்தச் சிகிச்சை நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. புத்தகத்தின் பக்கங்களுக்கு நடுவில் பென்சிலை வைப்பதுபோல, கார்னியாவைச் சிறிதளவு பிரித்து, அதற்கிடையே இரண்டு பிளாஸ்டிக் பொருள்களைப் பொருத்தி விடுவார்கள். இது கார்னியாவின் அமைப்பை இயல்புக்குக் கொண்டு வந்துவிடுவதால், பார்வை சரியாகிவிடும்.
பத்து நிமிடங்களில் முடிந்துவிடும் இந்தச் சிகிச்சைக்கு மருத்துவமனையில் தங்கவேண்டிய தில்லை. அறுவைச் சிகிச்சைத் தேவையில்லை. மற்ற சிகிச்சைகளில் கிடைப்பதைவிட இதில் பார்வைத்திறன் பல மடங்கு அதிகமாகக் கிடைக்கிறது. முக்கியமாக, இரவில் பார்வை மிகத் தெளிவாகத் தெரியும்.
(தேடுவோம்)