மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எலும்பின் கதை! - 13 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

எலும்பின் கதை! - 13 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0
பிரீமியம் ஸ்டோரி
News
எலும்பின் கதை! - 13 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்

ந்த இதழில் தோள்பட்டை மூட்டு மற்றும் அதில் ஏற்படும் பிரச்னைகள் பற்றிப் பார்ப்போம்.

இறுக்கமான தோள்பட்டை (Frozen Shoulder)

தோள்பட்டை மூட்டானது கால் மூட்டினைப்போல ஒரு பந்துக் கிண்ண அமைப்பாகும். தோள்பட்டையைச் சுற்றி இருக்கும் பலூன் அல்லது உறை போன்ற அமைப்பாலேயே நமது கைகளை இயக்க முடிகிறது. அந்த பலூன் போன்ற உறையானது சுருங்குவதால், இறுக்கம் ஏற்படும். இந்தச் சுருக்கமே தோள்பட்டை வலிக்குக் காரணம். நாளடைவில் வலி குறையத் தொடங்கும்; ஆனால், தோள்பட்டையானது மிகவும் இறுக்கமானதாக மாறிவிடும்.

எலும்பின் கதை! - 13 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

எதனால் ஏற்படுகிறது?

இதுவரை இதற்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை. சர்க்கரை நோயாளிகள், 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் இதய நோயாளிகள்தான் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். சிறு விபத்து அல்லது ஏதேனும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இத்தகைய நிலை ஏற்படலாம்.

அறிகுறிகள்

* தோள்பட்டையில் வலி

* கையைத் தோள்பட்டைக்குமேல் உயர்த்த முடியாத நிலை

* கையை உயர்த்தும்போது தோள்பட்டையில் வலி

இவைதான் இந்த நிலையின் ஆரம்ப அறிகுறிகள். நமது அன்றாடச் செயல்களில் தலைமுடியைச் சீவும்போதும் உடை அணியும்போதும் கையைத் தலைக்குமேல் தூக்கும்போதும் வலி அதிகமாக இருக்கும். இரவில் எந்தத் தோள்பட்டையில் வலி உள்ளதோ, அந்தப் பக்கம் படுக்கும்போது வலி அதிகமாக இருக்கும். திடீர் அசைவுகளும் தோள்பட்டைக்கு அதிர்வு தரக்கூடிய அசைவுகளும் மிகுந்த வலியையும் வேதனையையும் உண்டாக்கும்.

ஐந்து பேரில் ஒருவருக்கு (20 சதவிகிதம்) இன்னொரு தோள்பட்டையிலும் இறுக்கம் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக, சர்க்கரை நோயாளி களுக்கு மற்றொரு தோள்பட்டையிலும் இறுக்கம் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம். இந்த இறுக்கம் சரியாக நீண்ட நாள்களாகும்.

பரிசோதனைகள்

தோள்பட்டையில் உள்ள தேய்மானத்தை எக்ஸ்ரே மூலம் கண்டறியலாம். எம்.ஆர்.ஐ  ஸ்கேன் பரிசோதனையும் அவசியம். இது தசைநாரில் உள்ள கிழிசல்களைக் கண்டறிய உதவுகிறது.

சிகிச்சை முறைகள்

தோள்பட்டை இறுக்கத்தைத் தளர்த்தப் பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. சில சிகிச்சைகள் வலியைக் குறைக்கவும், மற்றவை இறுக்கத்தைத் தளர்த்தவும் உதவும்.

வலியைக் குறைக்கும் வழிகள்

* வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்ளலாம்.

எலும்பின் கதை! - 13 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

* மூட்டுகளின் வீக்கத்தைக் குறைக்கக் கார்டிஸோன் ஊசிகள் (Cortisone Injection) புறநோயாளிகள் பிரிவில் போடப்படுகின்றன. இவை இறுக்கத்தைத் தளர்த்தாது; ஆனால் வலியைக் குறைக்கும். தேவைப்பட்டால் மீண்டும் ஊசி போட்டுக்கொள்ளலாம்.

* சிறு துளை அறுவைசிகிச்சையின் (Arthroscopic Surgery) மூலம் இறுக்கமானது தளர்த்தப்பட்டுச் சரிசெய்யப்படும்.

இறுக்கத்தைத் தளர்த்த முடியுமா?

* தோள்பட்டைப் பயிற்சிகள்: தினமும் மிதமான பயிற்சிகள் செய்வதன் மூலம் இறுக்கத்தைத் தளர்த்தலாம். ஆனால், வலியோடு பயிற்சிகளைச் செய்யக்கூடாது.

* பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் சில பயிற்சி களைச் செய்யலாம். பயிற்சிகள் செய்யும்போது வலி அதிகமானால், வலியுடன் பயிற்சியைத் தொடரக்கூடாது.

அறுவைசிகிச்சை அவசியமா?

மேலே குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் நோயாளியின் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால், அறுவைசிகிச்சையே அடுத்தகட்ட சிகிச்சையாகும். இறுக்கமான தசைநாரைத் தளர்த்தி இயல்பு நிலைக்குக் கொண்டு வரச்செய்வதே இந்தச் சிகிச்சையின் நோக்கம்.

இறுக்கமான தசைநாரைச் சரிசெய்ய இரண்டு வகையான அறுவைசிகிச்சைகள் செய்யப் படுகின்றன. ஒன்று, சிறுதுளை கொண்டு செய்யப்படுவது; மற்றொன்று மயக்க மருந்தின் துணையுடன் செய்யப்படும் வழக்கமான அறுவைசிகிச்சை. உங்களுக்கு எந்த வகையான சிகிச்சை வேண்டுமென்பதை மருத்துவர்தான் முடிவு செய்வார்.