மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை!

மாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை!
பிரீமியம் ஸ்டோரி
News
மாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை!

கு.கணேசன், பொதுநல மருத்துவர்

ந்தியாவில் காசநோயின் பாதிப்பு மிகவும் அதிகம். ஒரு லட்சம் பேரில் சுமார் 217 பேருக்கு இந்த நோய் இருக்கிறது. ஆண்டுதோறும் சுமார் 22 லட்சம் புதிய காச நோயாளிகள் உருவாகின்றனர். ஆண்டுக்குச் சுமார் 5 லட்சம் காச நோயாளிகள் இறக்கின்றனர். உலகத்தில் உள்ள காச நோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர் என்பது கூடுதல் சோகம்.

மாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை!

ஆரம்ப நிலையிலேயே காச நோயைக் கண்டறிவது, நோயாளிகளைத் தொடர் சிகிச்சை பெற வைப்பது உள்ளிட்ட குறிக்கோள்களை முன்வைத்துத் தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றில் காசநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய, தற்போது புதிய பரிசோதனை முறைகள் வந்துவிட்டன. அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன், காசநோய் குறித்த முக்கியத் தகவல்களையும் தெரிந்துகொள்வது நல்லது.

மாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை!

எது காசநோய்?

‘மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோஸிஸ்’ (Mycobacterium tuberculosis) எனும் பாக்டீரியாவின் பாதிப்பால்   காச நோய் வருகிறது. சளியில் தொற்றியிருக்கும் இந்தக் கிருமிகள் காற்றின் மூலம் அடுத்தவர்களுக்குப் பரவுகின்றன. இதற்கு ஏழை, பணக்காரன் வித்தியாசம் எல்லாம் கிடையாது. எவருக்கும் வரலாம். புகைப்பழக்கம்/மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கும்,  சர்க்கரை நோய் மற்றும் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களுக்கும் இது எளிதில் தொற்றும். காசநோய் முக்கியமாகத் தாக்குவது, நுரையீரலைத்தான். என்றாலும் மூளை, எலும்பு மூட்டுகள், குடல், கருக்குழாய் என்று எந்த உறுப்பையும் இது தாக்கலாம். இரவு நேரக் காய்ச்சல், இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ச்சியான இருமல், உடல் எடை குறைவது, அதிகக் களைப்பு, நெஞ்சுவலி, சுவாசிக்கச் சிரமம் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

குழந்தைகளைப் பாதிக்குமா?

காச நோய் பெரியவர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் பாதிக்கிறது. இந்தியாவில் 100-ல் 12 குழந்தைகளுக்கு இந்த நோய் இருக்கிறது. ‘பிரைமரி காம்ப்ளெக்ஸ்’ (Primary complex) என அழைக்கப்படும் இதன் அறிகுறிகளைப் பெற்றோர் அறிந்தால் எளிதில் குணப்படுத்திவிடலாம். என்றாலும், இதுபற்றி மக்களிடம் போதிய விழிப்பு உணர்வு இல்லை. அறியாமை, ஏழ்மை, சத்துணவுக் குறைபாடு, சுகாதாரமற்ற வாழ்க்கைமுறை போன்றவற்றால் காசநோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

விழிப்பு உணர்வு தேவை

கடந்த 100 ஆண்டுகளில் காசநோய்க்கான சிகிச்சை பெருமளவு வளர்ந்துள்ளது. இதை 100 சதவிகிதம் குணப்படுத்தும் மருந்துகளும் வந்துவிட்டன. மருத்துவ வளர்ச்சிக்கு இணையாக நோயின் தன்மையும் பரவும் வேகமும் கடுமையாகிக்கொண்டே போகிறது. ஆகவே, நோயை மிக ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடித்து, சிகிச்சை பெறுவதுதான் நம் முன் உள்ள ஒரே வழி.

பரிசோதனைகள் என்னென்ன?

காசநோயைக் கண்டுபிடிக்க  மென்டோ பரிசோதனை, மார்பு எக்ஸ்-ரே, சளிப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை எனப் பல பரிசோதனைகள் உள்ளன. இவற்றில் நுண்ணோக்கிகளின் மூலம் கிருமிகளை நேரடியாகப் பார்த்து முடிவு செய்யப்படும் சளிப் பரிசோதனைதான் (Sputum Culture) நோயை உறுதி செய்யக்கூடியது. ஆனால், இதன் முடிவு தெரிய 3 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதேபோல், காலையில் எழுந்ததும் எடுக்கப்படும் முதல் சளியைப் பரிசோதிப்பதுதான் சரியான முடிவைத் தரும். ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியமில்லை. குழந்தைகள் விஷயத்தில் இன்னும் சிரமத்தை ஏற்படுத்தும். போதுமான சளியைக் குழந்தைகளால் வெளியேற்ற முடியாது. ஆகவே, நோயின் அறிகுறிகளை மட்டும் சரியாக அறிந்து, சிகிச்சை எடுப்பது என்பது சவாலாக இருக்கும்.

நவீனப் பரிசோதனை

இவற்றுக்கெல்லாம் தீர்வாக வந்துள்ளது ‘எக்ஸ்பெர்ட் எம்.டி.பி/ஆர்.ஐ.எஃப் பரிசோதனை’ (Xpert MTB/RIF Test). இதில் MTB என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்பதையும்  RIF என்பது காசநோய்ச் சிகிச்சைக்குத் தரப்படும் ரிஃபாம்பிசின் (Rifampicin) மருந்தையும் குறிக்கின்றன. இதுவும் ஒரு சளிப் பரிசோதனைதான். ஆனால், நவீனத் தொழில்நுட்பம் கொண்டது.

மாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை!

இது எப்படி நோயைக் கண்டுபிடிக்கிறது?

மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களைத் துல்லியமாகக் கண்டறிவதிலும் நோய் வரும் முன்னரே அது வருமா, வராதா என்று தெரிவிப்பதிலும் மரபணுத் தொழில்நுட்பம் தற்போது அசுர வளர்ச்சி பெற்றுவருகிறது. நம் உடலில் மரபணுக்கள் இருப்பதைப்போல், பாக்டீரியாவிலும் இருக்கின்றன. நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவைப் பொறுத்து வெவ்வேறு மரபணு வகை (Geno type) காணப்படும்.

பொதுவாக, காசநோயின் ஆரம்பத்தில் நோயாளியின் சளியில்தான் பாக்டீரியாக்கள் வெளிப்படும். ஆகவே, ஒருவரின் சளியைச் சுத்தப்படுத்தி, பக்குவப்படுத்தி, அதன் திரவத் தன்மையை அடர்த்தியாக்கி, அதில் காசநோய் பாக்டீரியா இருக்கிறதா என்று முதலில் ஆராயப்படும். அப்படி இருந்தால், அந்த பாக்டீரியாவின் செல்லில் இருந்து டி.என்.ஏ (DNA) எனும் மரபணுச் சரடைத் தனியாகப் பிரித்தெடுக்கின்றனர். இதற்கு ‘சோனிகேஷன்’ (Sonication) எனும் தொழில்நுட்பம் உதவுகிறது. அதாவது, குறிப்பிட்ட அதிர்வெண்கள் கொண்ட கேளா ஒலிகளைச் செல்லுக்குள் அனுப்பும்போது அதிலுள்ள டி.என்.ஏ தனியாகப் பிரிந்துவிடும். அதை பி.சி.ஆர் தெர்மல் சைக்ளெர் (PCR Thermal Cycler) எனும் கருவிக்குள் செலுத்தி, அதில் எந்த வகையான மரபணு  இருக்கிறது என்று கண்டுபிடிக்கின்றனர். டி.என்.ஏ - வில் காசநோய்க் கிருமியின் மரபணு இருக்கிறது என்றால், அந்த நோயாளிக்குக் காசநோய் இருக்கிறது என்று உறுதி செய்யப்படும்.

தனிச்சிறப்பு என்ன?

 சளியில் இந்த பாக்டீரியாக்கள் ஒன்றிரண்டு இருந்தால்கூட இந்தப் பரிசோதனை  கண்டுபிடித்துவிடும். இந்தப் பரிசோதனையைச் சில மணி நேரத்தில் செய்து முடித்து ரிசல்ட்டை அன்றைக்கே கொடுத்துவிடலாம். மேலும், காசநோயைக் குணப்படுத்தும் ரிஃபாம்பிசின் (Rifampicin) மருந்துக்கு இந்த பாக்டீரியா கட்டுப்படுமா, கட்டுப்படாதா என்பதையும் இது தெரிவித்துவிடும். சமீபகாலமாக இந்த மருந்துக்கு இந்த பாக்டீரியாக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், நோயைக் குணப்படுத்துவது சிரமமாக உள்ளது. ஆகவே, சிகிச்சையின் ஆரம்பத்திலேயே இந்தக் கிருமிகள் ரிஃபாம்பிசினுக்குக் கட்டுப்படுமா, கட்டுப்படாதா என்று தெரிந்துகொண்டால், சரியான சிகிச்சையை மேற்கொள்ள முடியும். இதன்மூலம் சிகிச்சைக்கான கால அளவு, செலவு மற்றும் வேதனைகளைக் குறைத்துவிட முடியும்.

சென்ற ஆண்டுவரை அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளில் மட்டுமே நடைமுறையில் இருந்துவந்த இந்தப் பரிசோதனை, இப்போது இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

(தேடுவோம்...)

மாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை!

புதிய மருந்துகள்

காசநோயை முற்றிலும் குணப்படுத்த மூன்று வகை மாத்திரைகளை ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், மருந்துகள் உட்கொள்ள ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள் நோயின் அறிகுறிகள் மறைந்துவிடுவதால், நோய் குணமாகிவிட்டது என்று நினைத்துப் பெரும்பாலானோர் மருந்துகள் சாப்பிடுவதைப் பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். இதனால் காசநோய்க் கிருமிகள் அந்த மருந்துகளையே எதிர்த்துப் போராடுவதற்கான திறனைப் பெற்றுவிடுகின்றன. அதன்பிறகு ஏற்கெனவே கொடுத்துவந்த மருந்துகளால் இந்தக் கிருமிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. இதன்விளைவாக, நோய் தீவிரம் அடைந்து மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக (Multi Drug Resistance TB) அது மாறிவிடுகிறது. இதற்கு வழக்கமான ஆறு மாத சிகிச்சை போதாது. இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும். இப்போது இந்த நோய்க்கு  ‘டிலமேனிட்’ (Delamanid),  ‘பெடாகுயிலின்’ (Bedaquiline) எனும் பெயர்களில் இரண்டு புதிய மருந்துகள் வந்துள்ளன. இவை காசநோயை முற்றிலும் குணப்படுத்த உதவுகின்றன. இதற்கான செலவுதான் சற்று அதிகம்.