மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எலும்பின் கதை! - 14 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

எலும்பின் கதை! - 14 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0
பிரீமியம் ஸ்டோரி
News
எலும்பின் கதை! - 14 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்

சென்ற இதழில் இறுக்கமான தோள்பட்டை பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் தோள்பட்டை இடப்பெயர்வு பற்றி அறிந்துகொள்வோம்.

தோள்பட்டை இடப்பெயர்வு (Dislocation of Shoulder)

தோள்பட்டை மூட்டு என்பது பந்துக் கிண்ண அமைப்பைச் சேர்ந்தது. இதைச் சுற்றி, ரப்பர் போன்ற ஓர் அமைப்பு இருக்கும். இது காரின் பம்பரைப்போலச் செயல்பட்டு, பந்துக் கிண்ணத்தைப் பாதுகாக்கிறது. `Labrum’ என்று அழைக்கப்படும் இதுதான் நாம் கைகளைத் தலைக்கு மேலே  தூக்கும்போது, தோள்பட்டையைப் பந்துக் கிண்ணத்திலிருந்து வெளியே வராமல் பாதுகாக்கிறது. தோள்பட்டைக்கு ஸ்திரத்தன் மையைக் கொடுப்பது அதன் அமைப்பும் அதைச் சுற்றியிருக்கும் தசைகளும்தான். இப்படி ஸ்திரமாக இல்லையென்றால், நாம் சாதாரணமாகச் செய்யும் அன்றாட வேலைகளின்போதே தோள்பட்டை மூட்டு வெளியே வந்துவிட வாய்ப்புள்ளது.

எலும்பின் கதை! - 14 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

40 வயதுக்குட்பட்டவர்கள் கீழே விழும்போதோ, விளையாடும்போதோ அவர்களுக்குத் தோள்பட்டை இடம்பெயர வாய்ப்புள்ளது. அப்போது Labrum அமைப்பில் அதிக பாதிப்பு ஏற்படும். அதிகமான வலி மற்றும் கையைத் தூக்க முடியாத நிலை உண்டாகும். பந்துக் கிண்ண அமைப்பு  சரியாகப்  பொருந்தாது. தோள்பட்டையில் இடப்பெயர்வு ஏற்பட்டால், எலும்பு மூட்டு மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். அவர் மயக்க மருந்து செலுத்தியோ, வலி நிவாரணிகளின் உதவியுடனோ தோள்மூட்டை நிலையான ஓர் இடத்தில் பொருத்துவார். அதன் பிறகு நோயாளிக்குக் கவண் (Sling) வழங்கப்படும். அதை அவர் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் அணிந்திருக்க வேண்டும். அதன் பிறகு தசை நார்களை வலுப்படுத்த இயன்முறை பயிற்சி (Physiotherapy) அளிக்கப்படும். இப்படிச் செய்வதால் மறுபடியும் இடப்பெயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

எலும்பின் கதை! - 14 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

  ஆனால், சிகிச்சைக்குப் பிறகும் சிலருக்குத் தோள்பட்டையைத் தூக்கும்போதோ தூக்கத்திலேயோகூட இடப்பெயர்வு ஏற்படலாம். இந்த நிலையை `Recurrent Shoulder Dislocation’ என்கிறார்கள். முப்பது வயதுக்கு உட்பட்டவர் களுக்கு இப்படி ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்குக் காரணம், இவர்களுக்குத் தசைகள் மிகவும் நெகிழ்ச்சியாக இருப்பதுதான். அதனால், மீண்டும் மீண்டும் இடப்பெயர்வு ஏற்படும். மேலும், Labrum பகுதியில் அதிக பாதிப்பு ஏற்படுவதால் கைகளைத் தலைக்கு மேல் தூக்கும்போது தோள்பட்டை நழுவிவிடுவது போன்ற உணர்வு உண்டாகும். இப்படி அடிக்கடி இடப்பெயர்வு ஏற்படுவதால், தோள்பட்டையில் அதிகமான உராய்வு ஏற்படும். இது பின்னாளில் Arthritis ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையும்.

இரண்டு அல்லது மூன்று முறைகளுக்கு மேல் தோள்பட்டை இடப்பெயர்வு ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவருக்கு `MR Arthrogram’ எனும் பரிசோதனை பரிந்துரைக்கப்படும். இதன் மூலம் கிழிந்த Labrum அமைப்பு எப்படி இருக்கிறது என்று அறிந்துகொள்ளலாம். இந்தப் பிரச்னைக்கு அறுவைசிகிச்சைதான் சிறந்த தீர்வு.

அறுவைசிகிச்சையில் என்ன நடக்கும்?

 தோள்பட்டையில் இரு சிறு துவாரங்கள் இடப்பட்டு, பாதிக்கப்பட்ட Ligament, Labrum ஆகியவை மீண்டும் அதனதன் பழைய இடங்களிலேயே வைத்துத் தைக்கப்படும். கரையும் தன்மைகொண்ட நுண்ணிய திருகு மூலம் இது சரிசெய்யப்படும்.  ஆர்த்ரோஸ்கோபிக் (Arthroscopic) முறையில் செய்யப்படுவதால், பிற தசைகளைப் பாதிக்காதபடி இதைச் சரிசெய்ய முடியும். ஓரிரு நாள்களிலேயே வீடு திரும்பலாம்.

 அறுவைசிகிச்சைக்குப் பிறகு?

மயக்க மருந்து நிபுணர் தோள்பட்டையில் உணர்வு மரத்துப்போகும் ஊசியைச் செலுத்துவதால், சில மணி நேரங்களுக்கு உணர்வு இருக்காது. அதனால் வலியும் இருக்காது. வீடு திரும்பியதும் முதல் இரு வாரங்களுக்கு மருத்துவரின் அறிவுரைப்படி வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் பிசியோதெரபிஸ்ட் கூறும் தோள்பட்டைக்கான பயிற்சிகளை லகுவாகச் செய்ய முடியும்.

 தோள்பட்டை அறுவைசிகிச்சை கீ ஹோல் மூலம் செய்யப்படுவதால், இரண்டு அல்லது மூன்று சிறு நகக்கண் அளவிலேயே காயங்கள் இருக்கும். அறுவைசிகிச்சை முடிந்த பின்னர் இந்தக் காயங்களுக்கு, வாட்டர் புரூஃப் பேண்ட் எய்டு (Waterproof band aid) அணிவிக்கப்படும். இந்தக் காயங்கள் ஆறுவதற்குச் சராசரியாக இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும். இந்த இரண்டு வாரங்களில் குளிக்கும்போது காயங்களில் தண்ணீர்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு டாக்டரிடம் செல்ல வேண்டும்.

 அறுவைசிகிச்சைக்குப் பிறகு, 4 - 6 வாரங்களுக்குப் பின்னர் கார்/பைக் ஓட்டலாம். முதலில் அருகில் இருக்கும் இடங்களுக்கு வாகனத்தில் செல்ல ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பயண தூரத்தை அதிகரிக்கலாம். எடுத்தவுடனேயே நெடுந்தூரப் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.

எத்தனை நாள்களுக்குப் பிறகு விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடலாம்?

நீச்சல்    :    8 வாரங்கள்
டென்னிஸ்    :    8 - 10 வாரங்கள்
கால்பந்து/கிரிக்கெட்    :    4 - 6 மாதங்கள்